பொசிஷனிங் என்றால், நம் தயாரிப்புப் பொருட்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் மனதில் நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துவது. பிசினஸில் வெற்றி பெற, இந்த மானசீக மதிப்பீடு மிக முக்கியம். ஏன் தெரியுமா? நாம் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கும் கடைகளுக்குத்தான் போகிறோம், நாம் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கும் பொருட்களைத்தான் வாங்குகிறோம்.
காட்பரீஸுக்கு வந்த சோதனை
இதனால்தான், நிறுவனங்கள், தங்கள் கம்பெனி, தயாரிப்புப் பொருட்கள் ஆகியவை பற்றிய சாதகமான பிம்பத்தை நம் போன்ற வாடிக்கையாளர் மனங்களில் உருவாக்கும் எண்ணத்தோடு கணிசமான நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறார்கள்.ஆனால், திடீரென,எதிர்பாராத சோதனைகள் வரும்போது, பெரும்பாலான கம்பெனிகள் சோதனைகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதில்லை. காலம் காலமாக உருவாக்கிய மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். ஒரு சில கம்பெனிகள் சோதனைகளை வெற்றிப் பாதையின் படிக்கற் களாக மாற்றிக்கொள்கிறார்கள். இவர்கள் அனுபவம் எல்லா பிஸினஸ்மேன்களுக்கும் அற்புதப் பாடம். காட்பரீஸ் சாக்லெட் நடந்துவந்த பாதையில் அப்படி ஒரு அனுபவம்......
2003 ம் ஆண்டு. காட்பரீஸ் சாக்லெட்கள் விற்பனை வருடத்துக்கு 80,000 கிலோ. இதில் கணிசமான பகுதி அதாவது சுமார் 10,000 கிலோ தீபாவளிக்கு விற்பனையாகும். அக்டோபர் மாதம் 3 ம் தேதி. தீபாவளி நெருங்குகிறது காட்பரீஸ் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கடைகளில், சூப்பர் மார்க்கெட்களில், டெய்ரி மில்க், ஃபைவ் ஸ்டார், எக்லர்ஸ், ஃபுருட் அண்ட் நட் போன்ற எல்லா சாக்லெட் வகைகளும் ரெடி. காட்பரீஸ் தொழிற்சாலையின் தயாரிப்பும் உச்சகட்டத்தில். இப்போது வெடித்தது ஒரு அணுகுண்டு, கம்பெனியையும் காட்பரீஸ் ரசிகர்களையும் அதிரவைத்த அணுகுண்டு.
சாக்லெட்டில் புழு?
இரண்டு வாடிக்கையாளர்கள் மும்பையில் இரண்டு வெவ்வேறு கடைகளில் டெய்ரி மில்க் சாக்லெட் வாங்கினார்கள். அந்த சாக்லெட்களில் புழுக்கள் இருந்தன. வாடிக்கையாளர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கமிஷனரிடம் (Food and Drug Administration Commissioner) புகார் கொடுத்தார்கள்.
ஆச்சரியமாக, அரசு எந்திரம் அதிவேகமாகச் செயல்பட்டது. முதல்கட்டச் சோதனைகள் செய்த கமிஷனர், காட்பரீஸ் கம்பெனிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார். உடனேயே பத்திரிகையாளர் கூட்டத்தையும் ஏற்பாடு செய்து குற்றச்சாட்டை வெளியிட்டார்
வியாபாரம் சரிந்தது
அடுத்த மூன்று வாரங்களுக்குத் தினசரிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி எல்லாவற்றிலும் தலைப்புச் செய்தி காட்பரீஸ்தான். மும்பையில் தொடங்கிய பிரச்சினை அகில இந்திய செய்தியானது. காட்பரீஸ் மீது கடைக்காரர்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் இருந்த நம்பிக்கை சுக்கு நூறானது. காட்பரீஸ் சாக்லெட்கள் வியாபாரம் சரிந்தது.
தான் சந்திப்பது வாழ்வா, சாவா பிரச்சினை என்று காட்பரீஸ் கம்பெனி உணர்ந்தது. இந்தப் பிரச்சினையைச் சரியாக எதிர்கொள்ளாவிட்டால், வருங்காலமே அஸ்தமித்துவிடும். தங்களுடைய உற்பத்தி, தரக் கட்டுப்பாட்டு முறைகளை அலசி ஆராய்ந்தார்கள். கம்பெனி தரப்பி லிருந்து தவறே நடந்திருக்க முடியாது என்று கண்டுபிடித்தார்கள். இரண்டே இரண்டு காரணங்கள்தாம் இருக்கலாம் - கடைகளில் சரியான முறைகளில் வைக்கப்படாததால் புழுக்கள் வந்திருக்கலாம். அல்லது போட்டி யாளர்கள் யாராவது கெட்டுப்போன டெய்ரி மில்க் சாக்லெட்டை இரண்டு கடைகளில் வைத்து, வாடிக்கையாளர்களைப் புகார் செய்யவைத்த சதியாக இருக்கலாம். காரணம் எதுவானாலும், உடனே ஆக்ஷன் எடுக்க வேண்டும், மக்கள் நம்பிக்கையை உடனேயே திரும்பப் பெறவேண்டும்.
நேர்மையான பதில்
போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கின. இந்தப் போரில் மக்கள் தொடர்பு மிக மிக முக்கியம் என்பதை நிர்வாகம் உணர்ந்து செயலாற்றியது. பிரச்சினை வெடித்த அக்டோபர் 3 அன்றே ஊடகப் பிரிவு (Media Desk) கம்பெனியின் மும்பை தலைமை அலுவலகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது. இவர்கள் கடமை, ஊடகங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் உண்மையான, நேர்மையான பதில் கொடுக்க வேண்டும். ஒரு பதில்கூட உண்மையில்லாமல் இருந்துவிடக்கூடாது.
அக்டோபர் 3 அன்றே ஊடகங்களோடு முதல் நேருக்கு நேர் ஏற்பாடு செய்யப்பட்டது. நிர்வாக இயக்குநர் பரத் பூரி அவர்களைச் சந்தித்தார். சங்கடமான கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் பதில் கொடுத்தார்.
மும்பையில் மட்டுமல்லாமல், சென்னை, கொல்கத்தா, புதுடெல்லி ஆகிய நான்கு முக்கிய நகரங்களிலும் 31 முக்கிய பத்திரிகையாளர்களோடு நேருக்கு நேர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. காட்பரியின் முக்கிய அதிகாரிகள் தங்கள் தரப்பு உண்மைகளை எடுத்துச் சொன்னார்கள். நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் தொடர்புக் கூட்டங்கள் நடந்தன. முக்கிய கம்பெனி அதிகாரிகள் வந்தார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் மக்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தார்கள்.
விளக்கம்
தொழிற்சாலையில் தவறே நடக்கவில்லை, கடைகளில் ஏற்பட்ட தவறு என்று விளக்கினார்கள். இத்தனை வருடங்களில் தரக் கோளாறு வருவது இதுவே முதல் முறை. ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கடைகளில் காட்பரீஸ் சாக்லெட்கள் விற்கிறோம், பிரச்சினை இவற்றுள் இரண்டே இரண்டு கடைகளில்தாம் என்று விளக்கினார்கள்.
அதே சமயம், காட்பரீஸ், பழியைக் கடைக்காரர்கள்மேல் சுமத்திவிட்டுத் தப்பிக்க முயலவில்லை. வாடிக்கையாளர்களுக்குத் தரமான சாக்லெட் தருவது எங்கள் கடமை. தொழிற்சாலையில் இதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கிறோம், கடைகளில் இத்தவறுகள் நடக்கலாம் என்பது எங்கள் சிந்தனையில் இதுவரை எழவில்லை. அந்தத் தப்பையும் சீக்கிரம் திருத்திக் காட்டுகிறோம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள்.
காட்பரீஸ் - உண்மைச் செய்திகள் என்ற தலைப்பில் நாடு தழுவிய 11 மொழிகளில், 55 ஏடுகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. நடந்தது குற்றமல்ல, தவறுதான், காட்பரீஸ் தரத்தைத் தாரக மந்திரமாகக் கொண்ட நிறுவனம்தான், என்னும் கருத்து மக்கள் மனங்களில் பதிய ஆரம்பித்தது.
நம்பிக்கையை பெற புது முயற்சி
வாய் வீச்சோடும், விளம்பரங்களோடும் நிறுத்தாமல், காட்பரீஸ் செயல்களிலும் முழுமூச்சோடு இறங்கினார்கள். மக்கள் நம்பிக்கையை மறுபடி பெற, Project Vishwas என்னும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடைகளைத் தொடர்ந்து பார்வையிட்டு, சாக்லெட்கள் குளிர்பதன முறையில் வைக்கப்படுகின்றனவா என்று உறுதி செய்யும் வழிமுறை இது.
நகரங்களுக்கும், பெரிய ஊர்களுக்கும் இந்த வழி போதும். ஆனால், சிறிய ஊர்க்கடைகளில் குளிர்பதன வசதிகள் இருக்காதே? என்ன செய்யலாம்? பேக்கேஜிங் தரத்தைக் கணிசமாக உயர்த்தி, வெளிப்புற வெப்பநிலை மாற்றங்கள், வசதி குறைவான சேமிப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து சாக்லெட்கள் பாதுகாப்புப் பெற முடிந்தால்....
காட்பரீஸ் நிபுணர்கள் வழி கண்டுபிடித்தார்கள். சாக்லெட்டின்மேல் மெல்லிய அலுமினிய உலோகத் தகடு (Aluminium Foil). அதற்குமேல் பாலிஃப்லோ (Poly-flow)என்ற ஒரு வகை பிளாஸ்டிக் பாக்கிங். இவற்றுக்குள் சாக்லெட்டை வைத்துப் பக்கவாட்டில் எந்திரங்களால் மூடிவிட்டால், புழுக்கள், பூச்சிகள் சாக்லெட் உள்ளே நுழையவே முடியாது. இதற்கான எந்திரங்கள் வாங்க 15 கோடி ரூபாய் ஆகும். செலவிட்டார்கள்.
சாதாரணமாக இந்த உற்பத்தி மாற்றங்கள் செய்ய ஆறு மாதங்கள் எடுக்கும். ஆனால், காட்பரீஸ் எட்டே வாரங்களில் எந்திர மாற்றங்களைச் செய்து முடித்தார்கள். 2004 ஜனவரியில் புதிய பேக்கேஜிங்கில் டெய்ரி மில்க் சாக்லெட் தயார். தூய்மை பாதுகாக்கப்பட்ட பேக்கேஜிங் (purity sealed packaging) என்ற அறிவிப்போடு எல்லாக் காட்பரீஸ் சாக்லெட்களும் விற்பனைக்கு வந்தன.
அமிதாப் மூலம் விளம்பரம்
தாங்கள் செய்திருக்கும் மாற்றங்களை மக்களுக்குத் தெரிவிக்க, காட்பரீஸ் அமிதாப் பச்சனைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏன் அமிதாப்? தொலைக்காட்சியில் அவர் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தார். மதிக்கப்பட வேண்டியவர், அறிவாளி என்ற இமேஜ்கள் அவருக்கு இருந்தன. அவர் ஒரு கருத்தைச் சொல்லும் தோரணை உடனேயே மக்கள் நம்பிக்கையைப் பெறும் என்று காட்பரீஸ் கணித்தார்கள்.
தொலைக்காட்சியில் இந்த விளம்பரம் வந்தது. அமிதாப் காட்பரீஸ் தொழிற்சாலைக்கு வருகிறார். மெள்ள ரவுண்ட் அடிக்கிறார். புதிய எந்திரங்கள், உற்பத்தி முறை, பேக்கேஜிங் பற்றி அவருக்கு (அவர் மூலமாக நிகழ்ச்சி பார்க்கும் பொது மக்களுக்கு) விளக்குகிறார்கள். கடைசி ஷாட்! காட்பரீஸ் தரத்தில் முழுத் திருப்தியடைந்த அமிதாப் காட்பரீஸ் சாக்லெட் பார் ஒன்றை எடுத்துச் சுவைத்துச் சாப்பிடுகிறார். மக்கள் மனத்தில் எல்லா சந்தேகங்களும் மறைய, நச்சென்று பதிகிறது. மறுபடி தன் முதல் இடத்தை மக்கள் மனத்திலும், மார்க்கெட்டிலும் பிடிக்கிறது காட்பரீஸ்.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago