சூரியஒளி மின்சக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தித் துறைகளில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும் முக்கிய நிறுவனமாக விளங்குகிறது சன்எடிசன், அதன் ஆசிய பசிபிக் மற்றும் தென்னாப்பிரிக்க பிராந்தியங்களுக்கான நிர்வாக இயக்குநர் பசுபதி கோபாலன். இவர் 2009-ல் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் 400 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்களை சன்எடிசன் நிறுவியுள்ளது. இத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டதன் சுருக்கம்.
சூரியஒளிமின் சக்தி (சோலார்) துறை யின் வளர்ச்சி, இந்தியாவில் எவ்வாறு உள்ளது? மத்திய, மாநில அரசுகள் பங் களிப்பு ஊக்கமளிப்பதாக உள்ளதா?
அட்சயப் பாத்திரம் போன்ற அள்ள அள்ள குறையாத சூரிய ஒளி மின்னாற்றலின் பயனை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்துவிட்டதால் அதன் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் அரசு, சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தீவிரம் காட்டிவருகிறது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாட்டில் 100 கிகாவாட் (1 கிகாவாட்=1000 மெகாவாட்) மின்னுற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அது மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், பெருமளவில் திட்டங்களை தீட்டிவருகின்றன.
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 3 ஆயி ரம் மெகாவாட் மின்னுற்பதி இலக்கு நிர்ணயித்துள்ளதே. அரசுத் திட்டங் களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு என்ன?
‘இண்டிபென்டெண்ட் பவர் புரொட்யூசர்ஸ்’ (IPP) என்ற அடிப்படையில் ஒப்பந்தம் போட்டு, மின்னுற்பத்தி செய்து அரசுக்கோ, அரசு குறிப்பிடும் பகுதிகளுக்கோ சப்ளை செய்கிறோம். யூனிட்டுக்கு இவ்வளவு விலை என அரசு நிர்ணயிக்கிறது. இதனால், இருதரப்புக்குமே பயன்கிடைகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சூரியமின்சாரம் வாங்க,ரூ.7.01 என கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதை தமிழக அரசு வேகமாக பரிசீலித்துவருகிறது. விரைவில் இறுதி செய்யப்படும். அதனால், மின்னுற்பத்தி செய்வதற்கு உகந்த இடங்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறோம்.
குஜராத்தில் நர்மதை ஆற்றின் மீது சூரிய ஒளி மேற்கூரைகளை உங்கள் நிறுவனம் நிறுவியது. அதன் செயல்பாடு எப்படி உள்ளது?
அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நில ஆர்ஜித பிரச்சினையில்லை. இதில், மின்னுற்பத்திக்கு நிலத்தில் செய்வதைக்காட்டிலும் செலவு சற்று அதிகமாகக் கூட ஆகலாம். மேலும், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பும் அவசியம். அதனால், மற்ற மாநிலங்கள் அதைப் பின்பற்றுவது அவரவர் முடிவைப் பொருத்தது.
ஜெர்மனி போன்ற குட்டி, குளிர் பிரதேச நாடுகள் கூட இத்துறையில் முன்னிலையில் உள்ளபோது, வெயில் நாடான இந்தியா பின்தங்கி யுள்ளதே?
அதிகவிலை ஒரு காரணமாக இருந்தது. ஆனால், விலை கடுமையாக குறைந்துவிட்டதால், மக்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஜெர்மனியைவிட 10 மடங்கு அதிக சூரியமின்னுற்பத்தி இந்தியாவில் நடக்கும்.
மாற்று மின்சக்தியில் நாட்டில் தமி ழகம் முன்னிலையில் இருந்தாலும் அது நமது தேவைக்கு போதுமான தல்ல. தமிழத்தில் நிலைமை எப்படி உள்ளது?
2015-க்குள் தனியார் நிறுவனங் களில் குறிப்பிட்ட அளவுக்கு சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சிலர் நீதிமன்றத் தில் தடைபெற்றதால் அது நிறுத்தப் பட்டது. எனினும் சூரியமின்சக்தி கொள்கையை விரை வில் வெளியிடும் நிலையை அரசு எட்டியுள்ளது. ஒழுங்குமுறை ஆணையமும், ஒரு விலையை இறுதி செய்திருக்கிறது. தற் போதைக்கு ஒரு முடிவு எட்டப் பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு மின்சாரத்தை வாங்குவது, எப்படி வாங்குவது, எந்தெந்த இடத்தில் சோலார் திட்டங்களைப நிறுவுவது என தமிழக அரசுதான் முடிவெடுக்கும்.
அதற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம். விலை மலிவு என்பதால் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படப்போவது உறுதி.
தமிழகத்தில் தனியார் நிறுவனங் களுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட் டுள்ளதே. சூரிய ஒளிமின் சக்திக்கு அவர்கள் மாறினால் லாபமாக இருக்குமா?
இந்த மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டோர், சூரிய மின்சக்திக்கு மாறினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது யூனிட் சூரியமின்சாரத்தின் விலை ரூ.7-க்குள் வந்துவிட்டது. அது இன்னமும் குறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், நிலக்கரி, டீசல் வளம் குறைந்து வருவதால், அவற்றின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஆனால், சூரிய ஒளி இலவசமாகக் கிடைக்கிறது. அதில் மின்னுற்பத்தி செய்யும் விலை குறைந்துகொண்டே வருகிறது. மேலும் குறையும். அதனால் இதுதான் நமது எதிர்காலம்.
மற்ற மாநிலங்களில் சூரிய மின் உற் பத்திக்கு ஆதரவு எப்படி உள்ளது?
ராஜஸ்தான், பஞ்சாப், உள்ளிட்ட 10 மாநிலங்களில் மின்னுற்பத்தி செய்துவருகிறோம். மத்திய அரசின் திட்டப்படி, மின்சாரம் இல்லாத குக்கிராமங்களில் மைக்ரோ கிரிட் மூலம் ஒளியேற்றிவருகிறோம். ஆந்திர அரசு, சூரியமின் சக்தி கொள்கை வகுத்து, அடுத்த 5 ஆண்டுகளில் 5 கிகாவாட் இலக்கு நிர்ணயித்துள்ளது. பல மாநிலங்கள் மும்முரமாக உள்ளன.
விவசாய மின் பம்புகளுக்கு முழு மாற்றாக, சூரியமின் சக்தி பம்புகள் உருவெடுக்குமா?
விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக் கும் வகையில், சூரிய மின் சக்தி பம்புகளுக்கென்றே தனி கொள் கையை கொண்டு வர கர்நாடகம் முடிவுசெய்துள்ளது. சில தினங்கள் முன்பு கூட அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். மின் மோட்டார் பம்பில் இருந்து, விவசாயிகள் அனைவரையும், சோலாருக்கு மாற்ற அந்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகமும் இதை பின்பற்றினால் விவசாயிகள் பலனடைவர்.
விவசாயிகளுக்கு சூரிய மின் சக்தி பம்பு லாபகரமானதா?
சூரிய மின்சக்தியால் இயங்கும் விவசாய பம்பு பற்றிய விழிப் புணர்வு போதிய அளவில் இல்லை. இரவு நேரத்தில்தான் மின்சப்ளை கிடைப்பதாக சொல்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் வயலில் நீர் பாய்ச்சுவது, மகசூல் அளவை குறைத்துவிடும். இரவு நேரத்தில் வயலுக்கு நீர் பாய்ச்ச செல்வதால், விவசாயிகள் பாம்புக் கடியால் உயிரிழப்பதும் தடுக்கப்படும். பகல் நேரத்திலும் தடையின்றி நீர் பாய்ச்ச, சூரிய மின் உற்பத்திகலன்களை நிறுவலாம். 5 ஏக்கர் நிலத்துக்கு, 200 அடியில் நீர் இருக்கும் பட்சத்தில், ரூ.5 லட்சம் இருந்தால் 5 கிலோவாட் திறன்கொண்ட கலனை நிறுவலாம்.
தங்கள் தேவைக்குப்போக, கூடுதல் திறன் கொண்ட சூரியமின்கலன்களை விவசாயிகள் நிறுவினால், தங்கள் தேவை போக, கூடுதல் மின்சாரத்தை அரசுக்கும் விற்பனை செய்யலாம். அதனால் அந்த உரிமையாளர் விவசாயமும் செய்யலாம், சூரியமின்சக்தி வணிகராகவும் மாறலாம்.
sasidharan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago