மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்: விவசாயம், தண்ணீர் சேமிப்புக்கு தேசிய அளவில் திட்டம் இருக்குமா?

By நெல்லை ஜெனா

நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீர்மேலாண்மை சார்ந்த திட்டங்கள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. போக்கால அடிப்படையில் நீர் சேமிப்புக்கு தேசிய அளவில் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.  

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாளை (ஜூலை 5-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது என்பதால் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில்  54.6% பேர் ஈடுபட்டுள்ள விவசாயத் துறையை மேம்படுத்தி, புதிய தொழில்நுட்பம் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் அரசின் இன்றைய இன்றியமையாத கடமைகளில் ஒன்று.

இதன் காரணமாகவே கடந்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத்துக்காக சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கோடைப் பருவத்தில் பயிரிடும் அறிவிக்கப்படாத பயிர்களின் உற்பத்தி செலவுகளில் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இயற்கை விவசாயத்தின் மூலம் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்க பல வழிமுறைகள் முன்மொழியப்பட்டன. வேளாண் விவசாய அட்டையைப் போல மீன்வளத் துறை, கால்நடை வளர்ப்புத் துறையையும் ஒன்றிணைத்து அட்டைகள் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்கவும், வருமானம் ஈட்டுவது குறித்தும்  சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

‘பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது.

இதன்மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என்றும், விவசாயிகளின் இந்த உதவி திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி செலவிடப்படும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.  

ஆனால் இது தேர்தல் அறிவிப்பு என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. எனினும் தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு மாநிலங்களில் முதல்கட்ட தவணை தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன.

இந்த திட்டம் வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெறும் என்றே தெரிகிறது. இருப்பினும் இதற்கான நிதி திரட்டுதல் மத்திய அரசின் முன்பு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

இதுபோலவே நாடுமுழுவதும் தண்ணீர் பிரச்சினை பெரிய அளவில் உள்ளதால் நீர்மேலாண்மை, தண்ணீர் சேமிப்பு தொடர்பான சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து விவசாயம், நீர்மேலாண்மை  சார்ந்த பொருளாதார ஆய்வாளர் வெங்கேடஷ் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

விவசாயத்துறையில் நீண்டகாலமாகவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதில் நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையே தலையாய பிரச்சினையாக உள்ளது.

நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. விவசாயத்தை லாபகரமாகன தொழிலாக மாற்ற பணம், மானியத்தால் மட்டுமே செய்ய முடியாது. தண்ணீர் மட்டுமே தீர்வாக இருக்க முடியும்.

நாடுமுழுவதும் 250 மாவட்டங்களில்  பெரிய அளவில் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தண்ணீர் பிரச்சினை உள்ளது. இங்கு 500 அடிக்கு கீழே தான் தண்ணீர் உள்ளது. இங்கிருந்து தண்ணீர் பெற்று விவசாயம் செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கான செலவும் மிக அதிகமாகிறது.

எனவே விவசாயத்துக்கு அடிப்படையான தேவை தண்ணீர். இதற்கு பெரிய அளவில் திட்டங்கள் தேவை. நீரும், விவசாயமும் மாநில பட்டியலில் உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் நேரடியாக திட்டங்களை அறிவிக்க இயலாது. நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்படும்.

இருப்பினும், நாடுதழுவிய அளவில் ஸ்வச்ச பாரத் எனப்படும் ‘சுத்தமான இந்தியா’ இயக்கம் போல, நீர் சேமிப்புக்காக மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்.

பட்ஜெட்டில் இதுபோன்ற அறிவிப்பு இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இந்த திட்டத்தை ஏரி,குளங்கள் தூர்வாருவதற்காகவே முழுமையாக பயன்படுத்தலாம்.

நீர்நிலைகளை தூர்வாருதல் தொடர்பாக தேசிய அளவில் திட்டம் தயாரிக்கலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் பகுதியில் நீர்நிலைகளை தூர்வாருவது தொடர்பான திட்டங்களை முன்னெடுக்கலாம்.

போக்கால அடிப்படையில் நீர் சேமிப்புக்கு தேசிய அளவில் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். இது நமது நாட்டின் உடனடி தேவையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்