புதுச்சேரி -ஐதராபாத் விமான சேவை தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியிலிருந்து ஐதராபாத்துக்கு விமான சேவையை முதல்வர் நாராயணசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் விமானநிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி 17ம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏதுமின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் அரசு மீண்டும் புதுச்சேரியில் விமான சேவையை தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியது. அதன்பிறகு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதில் புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவையை ஆகஸ்ட் 16 முதல் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஒப்புதலை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்தது.

சரியாக 11.20 மணிக்கு வந்த விமானத்தை வாட்டர் சல்யூட் என்ற முறையில் புதுவை விமான நிலைய ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். ஸ்பைஸ்ஜெட் விமானம் ஐதராபாத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு புதுவை வந்தடையும். மீண்டும் புதுவையில் இருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அங்கிருந்து 1.30 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.

மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உடான் கீழ் இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இதற்கான பயணக் கட்டணம் ரூ.2449 ஆகும்.

ஸ்பெஸ் ஜெட் இணையதளத்திலேயே முன்பதிவும் செய்யலாம். இரண்டு ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் தற்போது மீண்டும் விமானசேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

78 இருக்கைகள்

முன்பு சிறிய அளவிலான இருக்கைகள் கொண்ட விமானமே புதுச்சேரியிலிருந்து இயக்கப்பட்டது. தற்போது புதுச்சேரி வரும் விமானம் 78 இருக்கைகள் கொண்டது. ஐதராபாத்திலிருந்து வந்த விமானத்தில் 77 பயணிகள்வந்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு மலர்களும், பரிசுபொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த விமானத்தில் ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு பயிலும் ஐதராபாத்தை சேர்ந்த மாணவிகள் மேக்னா, மான்சி ஆகியோர் பயணம் செய்து புதுவைக்கு வந்தனர். அவர்களிடம் பயண அனுபவம் குறித்து கேட்டதற்கு, "நாங்கள் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறோம். புதுவையில் இருந்து பேருந்து மூலமாக ஐதராபாத் செல்ல 1 நாள் ஆகும். ஆனால் நாங்கள் 1 மணி நேரத்திலேயே வந்துவிட்டோம். இது எங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது" என்று குறிப்பிட்டனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தொழில் காரணமாகவும், ஆன்மீக சுற்றுலா செல்வதற்கும் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து 11.40 மணிக்கு புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவையை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அந்த விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி,ஷாஜஹான், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, டிஜிபி சுனில்குமார் கவுதம், சுற்றுலா செயலர் பார்த்திபன், இயக்குநர் முனிசாமி, விமான நிலையங்கள் ஆணைய பிராந்திய இயக்குநர் குமார் புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் தாஜ், ஸ்பைஸ் ஜெட் தலைமை அதிகாரி சுமந்த் ரவுட்டேலா, உள்பட கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்