டெட் வித்தியாசமானவர். சோகங்களை மறக்க பிசினசிஸில் மூழ்கினார். தன் வாசிப்புகள் அவர் நினைவுக்கு வந்தன. ``உங்கள் பிசினஸ் பிரம்மாண்டமாக வளரவேண்டுமா? நீங்கள் எந்த பிசினஸில் இருக்கிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்’’ என்று மேனேஜ்மென்ட் மேதைகள் சொல்வார்கள். உதாரணமாக, நீங்கள் கூல் டிரிங்க்ஸ் தயாரிக்கிறீர்களா? உங்கள் பிசினஸ் குளிர்பானங்கள் என்று நீங்கள் நினைத்தால், இந்த வேலியைத் தாண்டி வளர முடியாது. மாற்றாக, உங்கள் பிசினஸ் மக்களின் தாகம் தீர்ப்பது என்று நினைத்தால், கூல் டிரிங்க்ஸ், ஜூஸ், சிரப், தண்ணீர் என பல திசைகளில் வளரலாம்.
இந்த அடிப்படையில் டேர்னர் கம்பெனியின் பிசினஸ் விளம்பர போர்டுகள் அல்ல, ஊடகங்கள் என்று முடிவு செய்தார். இலக்கு தெளிவானவுடன், சொந்த வாழ்க்கையின் சோகங்கள் மனதிலிருந்து பறந்தன. செயல்பாடுகள் விரிந்தன.
1970-ம் ஆண்டில் மூன்று ரேடியோ நிலையங்களை வாங்கினார். திறமையான நிர்வாகம். லாபம்.
1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி கால் ஊன்றிக்கொண்டிருந்தது. ABC, CBS, NBC ஆகிய மூவரும்தான் சேர, சோழ, பாண்டியர்கள். அவர்களோடு போட்டி போட ஏராளமான முதலீடு தேவை. அட்லாண்டா, வடக்குக் கரோலினா ஆகிய நகரங்களில் இருந்த இரண்டு லோக்கல் கேபிள் சேனல்கள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தன. டெட் கடன் வாங்கிப் பணம் புரட்டினார். வாங்கினார். முட்டாள்தனமான முதலீடு என்று எல்லோரும் கேலி செய்தார்கள்.
முதல் வேலையாகப் பார்வையாளர்களை அதிகமாக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்த நாட்களில் எல்லா லோக்கல் சேனல்களுக்கும் ஒரே நிகழ்ச்சி நிரல்தான். காலையில் தெய்வீக வழிபாடுகள். மாலையில் செய்திகள், விவாதங்கள். டெட் சினிமாத் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டார். பழைய கறுப்பு வெள்ளைப் படங்களைக் குறைவான விலைக்கு வாங்கினார். ABC, CBS, NBC ஆகியோரோடு கை கோர்த்து, விளையாட்டுப் போட்டிகளை ஒளி பரப்பும் ஒப்பந்தம். இத்தோடு, மிக்கி மவுஸ் போன்ற குழந்தைகள் சினிமாக்கள், சுவாரஸ்யமான சொந்த புரோகிராம்கள். டி. ஆர். பி. எகிறியது. விளம்பர வருமானம் கொட்டியது .
1976. சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கத் தொடங்கினார். செயற்கைக் கோள்கள் மூலம் ஒளிபரப்பை அமெரிக்கா முழுக்கப் பரவலாக்கினார். இந்த நவீனத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியது டெட்தான். நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான் தங்களுக்குச் சம போட்டியாக வந்து நின்றதும், ABC, CBS, NBC பிரமித்துப் போனார்கள்.
அடுத்து என்ன புதுமை செய்யலாம்? வெறும் பொழுதுபோக்குகளில் மட்டும் மக்கள் திருப்தி அடையமாட்டார்கள், அதையும் தாண்டி அவர்கள் எதிர்பார்ப்புகள் விரியும் என்று டெட் நினைத்தார். 24 மணி நேர நியூஸ் தொடங்க முடிவு செய்தார். 1980 -இல் Cable New Network என்னும் CNN தொடங்கியது. மெல்ல மெல்ல காலூன்றத் தொடங்கியது. இப்போது ஒரு சொந்த வாழ்க்கைச் சோகம். 1964-ல் இரண்டாம் மனைவியோடு நடத்திய மணவாழ்க்கை விவகரத்தில் முடிந்தது. இன்னொரு பெரிய பிரச்சினை. பல சமயங்களில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையையும், பொது இடங்களில் வரம்புமீறிப் பேசுவதையும் டெட் உணர்ந்தார். டாக்டர்களிடம் போனார். அவருக்கும் “அந்நியன்” நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். வீரியமான மருந்துகள். நோய் கட்டுப்பாட்டில் வந்தது.
1991. டெட் வாழ்வில் முக்கிய வருடம். அமெரிக்க – இரான் போர். எல்லோரும் செய்திகள் பார்க்கத் தொடங்கினார்கள். செலவைப் பற்றிக் கவலையே படாமல், பார்வையாளர்களுக்குச் சுடச்சுடச் செய்திகள் தர வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளோடு, சி.என்.என். நிருபர்களைப் போர்முனைக்கு அனுப்பியது. பலன் கிடைத்தது. எல்லா சேனல்களையும் பின் தள்ளி சி.என். என். முதல் இடத்துக்கு வந்தது. போர் முடிந்தபின்னும் செய்திகள் கேட்கும் பழக்கத்துக்கு மக்கள் வந்தார்கள்.
டெட் ஒரே சமயத்தில் பல குதிரைகள் ஓட்டத் தெரிந்தவர். சி.என்.என். வளர்ச்சிக்காக அலுவலகத்திலேயே தங்கினார், தூங்கினார். தினமும் 18 மணிநேர உழைப்பு. இதற்கு நடுவிலும் காதலில் விழுந்தார். ஜேன் ஃபாண்டா ஹாலிவுட்டின் பிரபல கதாநாயகி. 48 படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு முறை, சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் வென்றிருக்கிறார். (1972- இல் Klute ; 1979 – இல் Coming Home). சினிமாவைப் போலவே, இவருடைய உடற்பயிற்சி வீடியோக்களும் பிரபலம். நடிகை என்பதைத் தாண்டி, பெண்கள் உரிமைக்கும், பொதுஜனக் கருத்துகளுக்கும் துணிச்சலோடு குரல் கொடுப்பவர். டெட் – ஜேன் ஃபாண்டா சில பொதுநிகழ்ச்சிகளில் சந்தித்தார்கள். ஜேன் ஃபாண்டா வயது 54. டெட் வயது 53. ஐம்பதிலும் ஆசை வந்தது. ஒரு பொருத்தம். இருவருமே தங்கள் முதல் இரண்டு திருமணங்களில் விவாகரத்து வாங்கியவர்கள். மூன்றாம் திருமணம் செய்துகொண்டார்கள்.
1992. டெட் கார்ட்டூன் நெட்வொர்க், 1994 – இல் TCM (Turner Classic Movies) ஆகியவை தொடங்கினார். ஆனால், அவர் மனம் இன்னும், இன்னும், வெற்றிகளைத் தேடியது . அவருக்குப் பேராசை, தன் கம்பெனியை உலகப் பெரும் ABC, CBS ஆகிய சேனல்கள் வாங்க நினைத்தார். முடியவில்லை. தன்னோடு சாம்ராஜ்ஜியமாக்கவேண்டும். தன்னை விட 20 மடங்கு பிரம்மாண்டமான முதலீட்டாளர்களைத் தேடினார். அதே சமயம், சி.என்.என். தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று நிபந்தனை போட்டார். பணம் போட வந்தவர்கள் விலகிப்போனார்கள்.
1996. டைம் வார்னர் என்னும் பிரம்மாண்ட அச்சு ஊடகக் கம்பெனி முன் வந்தார்கள். டெட் தன் நிறுவனத்தை அவர்களுக்கு விற்றார், அவருக்கு உதவிச் சேர்மேன் பதவி, தொலைக்காட்சிச் சேனல்களுக்கான முழு அதிகாரம், என்னும் உறுதிமொழிகளுடன்.
1990 – களின் பிற்பகுதியில் இன்டர்நெட் ராட்சசத்தனமாக வளரத் தொடங்கியது. 2000. அமெரிக்கா ஆன்லைன் (AOL) என்னும் இன்டர்நெட் நிறுவனத்தோடு இணைய டைம் வார்னர் முடிவெடுத்தார்கள். டெட் கருத்தைக் கேட்கவேயில்லை. அவரைத் தவிர்த்த பிற பதினொரு டைரக்டர்களும் சம்மதித்தபடியால், டெட் சம்மதிக்கவேண்டிய கட்டாயம். கையெழுத்துப் போட்டார். AOL Time Warner கம்பெனி பிறந்தது.
2001. டெட்டுக்கு இன்னொரு சோகம். மனைவி ஜேன் ஃபாண்டா மீது உயிரையே வைத்திருந்தார். ஆனால், அதீதத் தன்முனைப்புக்கொண்ட இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை. பிரிந்தார்கள்.
அமெரிக்கா ஆன்லைனுடன் இணைந்தபின் டெட் அதிகாரங்கள் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டன. ஆனால், விரைவிலேயே, டெட் கணிப்புகள் சரியானவை எனக் காலம் நிரூபித்தது. 2000 – 2002. டாட் காம் என்னும் குமிழி வெடித்தது. புதிய கம்பெனியின் நஷ்டம் 99 பில்லியன் டாலர்கள். அதுவரை உலகக் கார்ப்பரேட் வரலாற்றில் எந்த கம்பெனியும் சந்தித்திராத நஷ்டம். கம்பெனி பங்குகள் விலை 90 சதவீதம் விழுந்தது. டெட் சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்களிலிருந்து 3 பில்லியன் டாலர்களாகச் சரிந்தது. சி.இ.ஓ – வும் முக்கிய அதிகாரிகளும் துரத்தப்பட்டார்கள். டெட் கைகள் பலப்படும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அவர் கையைக் கட்டிப் போட்டார்கள். 2006 – இல் செங்கல் செங்கல்லாய்க் கட்டிய தன் வீட்டிலிருந்து டெட் வெளியேற்றப்பட்டார்.
அதற்கு முன் டெட் மிக முக்கியமான ஒரு காரியம் செய்தார். அவருக்கு ஐ.நா.சபையின் சேவைகளில் மிகுந்த மதிப்பு உண்டு. தன் 3 பில்லியன் டாலர் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியான ஒரு பில்லியன் டாலர்களை (இன்றைய மதிப்பீட்டில், சுமார் 6,700 கோடி ரூபாய்) நன்கொடையாக அளித்து, ஐ.நா. அறக்கட்டளை தொடங்கினார். பெண்கள் நலம், குழந்தைகள் ஆரோக்கியம், சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஐ.நா. சபையின் சேவைகளில் இந்த அமைப்பு பங்கெடுக்கிறது.
இன்று டெட் வயது 79. உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 896 – ஆம் இடம். அமெரிக்காவின் பல பகுதிகளில் 28 மாளிகைகள். டெட் தன் நேரத்தை ஐ.நா, அறக்கட்டளையின் நடவடிக்கைகளிலும், அணு ஆயுத எதிர்ப்பிலும் செலவிடுகிறார். சமுதாயத்துக்கு உதவுகிறோம் என்னும் ஆத்ம திருப்தி.
இத்தனைக்கும் நடுவில், டெட்டுக்கு ஒரு ஆறாத சோகம் உண்டு. அது, சி.என்.என் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பச்சை ரணம்.
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago