சாதனைகள். செய்யும் எந்த முயற்சியில் இயங்கினாலும் நம்பிக்கையில்லாத்தனத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவீர்கள். அதைக் கடந்து வருவதுதான் வெற்றியின் ரகசியம்.
-ஜார்ஜ் லூக்காஸ்
பாகுபலி 2 தான் இன்றைய இந்திய சினிமாவின் வசூல் ராஜா. ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. உலக சினிமாவின் பாகுபலி யார்?
முதல் இடம் – அவதார் – 2788 மில்லியன் டாலர்கள் (சுமார் 18,000 கோடி ரூபாய்).
இரண்டாம் இடம் – டைட்டானிக் – 2187 மில்லியன் டாலர்கள் (சுமார் 14,119 கோடி ரூபாய்).
மூன்றாம் இடம் – ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் - 2068 மில்லியன் டாலர்கள் (சுமார் 13,351 கோடி ரூபாய்). .
இவற்றுள் ஸ்டார் வார்ஸுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் தொடரின் முதல் படம் 1977 – இல் வெளியானது. இதுவரை ஏழு படங்கள். எல்லாமே சூப்பர் ஹிட். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தலைவிதி தீர்மானிக்கப்படும் சினிமா உலகில், ஒரு தொடர் நாற்பது வருடங்களாக மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டிருப்பது மகா ஆச்சரியம்தான்.
யோடா, டார்த் வேடர், ஓபி ஒன் கனோபி, ஹான் ஸோலோ, இளவரசி லெயா, லூக் ஸ்கைவாக்கர், என வகை வகையான பாத்திரங்கள். இவர்களுக்கு ரசிகர் கூட்டங்கள். ஆனால், ஸ்டார் வார்ஸ் தொடரின் நிஜ ஹீரோ ஜார்ஜ் லூக்காஸ். அத்தனை ஸ்டார் வார்ஸ் படங்களும் இவர் கற்பனையின் வெள்ளித்திரை வடிவங்கள்.
****
லூக்காஸின் அப்பா கலிபோர்னியாவில் மாடெஸ்டோ என்னும் ஊரில் ஸ்டேஷனரி கடை நடத்திவந்தார். வசதியான குடும்பம். அவன் உயரம் குறைவானவன். ஆகவே, மற்றச் சிறுவர்கள் அவனை எப்போதும் சீண்டுவார்கள். படிப்பில் அவனுக்கு விருப்பம் இல்லை. அம்மா தினமும் மந்திர தந்திரக் கதைகளைப் படித்துச் சொல்லுவார். தானே படிக்க விரும்பினான். அவனுக்கு வேகமாக வாசிப்பு வராது . ஆகவே, காமிக்ஸ் என்னும் படக் கதைகளைப் படிக்கத் தொடங்கினான். தன்னைத் தொந்தரவு செய்யும் சிறுவர்களைப் பூதங்களாகவும், அவர்களைத் தான் புத்திசாலித்தனத்தால் ஓட ஓட விரட்டுவதாகவும், புதுக் கதைகளைக் கற்பனை பண்ணுவான்.
லூக்காஸின் பத்தாவது வயதில் அவன் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்கள். சினிமா பார்க்கத் தொடங்கினான். அவன் கற்பனைகள் விர்ந்தன.
வயது பதினாறு. அப்பாவைக் கெஞ்சி மோட்டார் சைக்கிள் வாங்கினான். சில நண்பர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள். கண் மண் தெரியாமல் ரோட்டில் பறப்பார்கள். அப்பா பயந்தார். கார் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தார். சின்னக் கார் வாங்கிக்கொடுத்தார். இதிலும், தலை தெறிக்கும் ஸ்பீட்தான். அவன் லட்சியம், ரேஸ் டிரைவராகவேண்டும்.
அதுவரை தன் மாடெஸ்ட்டோ ஊரைவிட்டு வெளியே போகாத அவனுக்குக் கார் புதிய உலகின் கதவுகளைத் திறந்தது. ஒவ்வொரு நாள் இரவும், பக்கத்து ஊர்களுக்கு சினிமா பார்க்கப் போய்விடுவான். இதனால், பள்ளி மதிப்பெண்கள் இன்னும் சரிந்தன. தினமும் இரவில் எங்கே திரிந்துவிட்டு வருகிறாய் என்று அப்பா கேட்டதற்கு அவன் உண்மையைச் சொல்லவில்லை. மது, மாது, போதை என்று அலைகிறானோ என்று அவருக்கு பயம், கோபம்.
“நாளை முதல் நீ நம் ஸ்டேஷனரி கடைக்கு வா.”
“மாட்டேன். தினமும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய எனக்குப் பிடிக்காது.”
இருவருக்கும் கடுமையான வாக்குவாதம். லூக்காஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். அவன் நிம்மதி தேடுவது புத்தகங்களில். லைப்ரரி போனான். கோபம் தணிந்தது. வீட்டுக்குப் புறப்பட்டான். திடீரென, எதிரே வந்துகொண்டிருந்த ஒரு கார் நேருக்கு நேர் வந்து மோதியது. லூக்காஸின் கார் பல முறை அந்தர் பல்டி அடித்தது, ஒரு மரத்தின்மேல் மோதி நின்றது. எலும்பு முறிவு. ஏராளமான காயங்கள். நான்கு மாதங்கள் படுக்கையில். விபத்தின் பாதிப்பால், ரேஸ் டிரைவராகும் ஆசையைக் கைவிடும் கட்டாயம்.
பள்ளிப் படிப்பில் எப்படியோ பாஸ் மார்க் வாங்கிவிட்டான். அடுத்து, திரைப்படவியல் படிக்க பெர்க்கிலி பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்தான். பெர்க்கிலி புகழ் பெற்ற பல்கலைக் கழகம். ஆகவே, அங்கே எதைப் படித்தாலும் சரி என்று அப்பா சம்மதித்தார்.
படிப்பை முடித்தபோது அவனுக்குத் தெரிந்தது, சினிமா உலகம் ஒரு இரும்புக் கோட்டை. யாராவது பெரிய புள்ளியைத் தெரிந்தாலொழிய உள்ளே நுழைய முடியாது. எத்தனையோ கம்பெனிகளின் கதவைத் தட்டினான். செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே போகக்கூட முடியவில்லை.
பிரான்சிஸ் கப்போலா, பல்கலைக் கழகத்தில் லூக்காஸின் சீனியர். (இவர் 27 படங்கள் இயக்கியிருக்கிறார். அவற்றுள், மிக முக்கியமானது, மூன்று பாகங்களாக வெளிவந்த காட்ஃபாதர். முதல், மூன்றாம் பாகங்களின் இயக்கத்துக்காக ஆஸ்கர் வாங்கியிருக்கிறார்) தனது 29 – ஆம் வயதில், ஆறாவது படமான ஃபினியன்ஸ் ரெயின்போ என்னும் படம் இயக்கிக்கொண்டிருந்தார். ஷுட்டிங் பார்வையாளராக லூக்காஸ் போயிருந்தார். தற்செயலாக இருவரும் பேசிக்கொண்டார்கள். லூக்காஸிடம் ஏதோ பொறி இருப்பதைக் கப்போலா உணர்ந்தார். தன் படத்துக்கு எடிட்டராக நியமித்தார். கப்போலா உதவியால், லூக்காஸ் கனவுத் தொழிற்சாலைக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டார்.
1971. கப்போலா, லூக்காஸுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்புத் தந்தார். THX 1138 என்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் படம். தோல்வி கண்டது. லூக்காஸ் துவண்டார். தன்னிடம் திறமை இல்லையோ என்னும் பயம். ஆனால், கப்போலாவுக்குத் தன் சீடனிடம் அசையாத நம்பிக்கை. அமெரிக்கன் கிராஃபிட்டி என்னும் லூக்காஸின் காமெடிக் கதையைக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க முடிவெடுத்தார். லூக்காஸ் இயக்கம்.
படம் சூப்பர் ஹிட். 8 மில்லியன் டாலர்கள் செலவு. வசூல் 140 மில்லியன்களைத் தாண்டியது. குவிந்தன விமர்சகர்களின் பாராட்டுக்கள். சிறந்த படம் சிறந்த இயக்குநர், சிறந்த கதை வசனம், சிறந்த துணை நடிகை, சிறந்த எடிட்டிங் என ஆறு துறைகளில் ஆஸ்கர் பரிசுக்கான இறுதித் தேர்வு.
THX 1138 தோல்வியடைந்த வருத்தம் லூக்காஸுக்கு. அதை ஈடுகட்ட ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இயக்க விரும்பினார். விண்வெளியைக் களமாக வைத்து. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிறைந்த ஸ்டார் வார்ஸ் ஸ்க்ரிப்ட் எழுதினார். யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ், யூனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆகிய இரு பெரும் தயாரிப்பாளர்களும், ``இது பூட்ட கேஸ்” என்று நிராகரித்தார்கள்.
அடுத்து, லூக்காஸ் ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை அணுகினார். அவர்களுக்கும் ஸ்டார் வார்ஸில் நம்பிக்கை இல்லை. ஆனால், லூக்காஸ் அமெரிக்கன் கிராஃபிட்டி இரண்டாம் பாகம் இயக்கித் தரச் சம்மதித்ததால், ஸ்டார் வார்ஸையும் தயாரிக்க இணங்கினார்கள். லூக்காஸ் முதலில் ஸ்டார் வார்ஸைக் கையில் எடுத்தார். அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ஒன்றரை லட்சம் டாலர்கள். பட பட்ஜெட் 8 மில்லியன் டாலர்கள். சாதாரணக் காமெடிப் படங்களின் பட்ஜெட். வேறு வழியில்லை. ஒத்துக்கொண்டார்.
ஷூட்டிங் தொடங்கியது. இதற்கு நடுவே, அமெரிக்கன் கிராஃபிட்டியின் மாபெரும் வெற்றியால் லூக்காஸ் சம்பளம் ஆறரை லட்சம் டாலர்களாக உயர்ந்தது. ஃபாக்ஸ் இந்த உயர்வைத் தரச் சம்மதித்தார்கள். இப்போது நம் இயக்குநர் ஒரு ஆனந்த அதிர்ச்சி தந்தார், “எனக்கு ஒன்றரை லட்சம் டாலர்கள் மட்டுமே சம்பளமாகப் போதும். மீதி ஐந்து லட்சத்துக்குப் பதில், ஸ்டார் வார்ஸ் புத்தகங்கள், பொம்மைகள் விற்பனை உரிமையைத் தாருங்கள்” என்று கேட்டார். படமே ஓடாது, இந்த அழகில் புத்தகங்களும், பொம்மைகளும் எங்கே விற்கும் என்று நினைத்த ஃபாக்ஸ் லூக்காஸை ஏளனமாகப் பார்த்தார்கள். லூக்காஸின் பேரத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
ஒரே வருடம், சிரித்தவர் லூக்காஸ். முதல் வருடமே 4 கோடி பொம்மைகள் விற்றன. 10 கோடி டாலர்கள் வருமானம். லூக்காஸ் பொம்மை வியாபாரத்தில் மட்டுமே இதுவரை 50 கோடி டாலர்கள் சம்பாதித்திருப்பார் என்று ஒரு ஹாலிவுட் மியாவ் சொல்கிறது.
லூக்காஸும், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்கும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கூட்டுறவில் உருவாகிய நான்கு இந்தியானா ஜோன்ஸ் படங்களும், வசூல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய அம்சங்களில் முத்திரை பதித்தன.
2012 – இல், லூக்காஸ் தன் ஸ்டார் வார்ஸ் உரிமையை டிஸ்னி கம்பெனிக்கு 4 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் 25,600 கோடி ரூபாய்) விற்றுவிட்டார். கலைப்பொருட்கள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்ட அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அருங்காட்சியகம் அமைப்பதில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
16 mins ago
வணிகம்
20 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
11 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago