தொழில் ரகசியம்: புத்தாண்டு தொழில் தீர்மானங்கள்!

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

இன்னொரு வருடம் பிறந்திருக்கிறது. வருஷா வருஷம் அதுவும் தவறாமல் வருகிறது. நாமும் நம் பங்குக்கு புது வருட தீர்மானங்களை வெற்றிகரமாக உருவாக்கி அதைவிட வெற்றிகரமாக தோல்வியும் அடைகிறோம். `இன்னியோடு சிகரெட்டிற்கு முழுக்கு’ என்று சத்தியம் செய்து அடுத்த நாளே பாக்கெட் பாக்கெட்டாய் வாங்கி சிகரெட்டுக்கே கேன்சர் வரும் வரை ஊதுபவர் முதல் `இனி தினம் வாக்கிங் போகப் போகிறேன்’ என்று புது ஷூ வாங்கி அதை ஒரு முறை கூட அணியாமல் தீர்மானங்களை காப்பாற்றும் பிரகுருதிகளுக்கும் குறைவில்லை, தீர்மானங்களுக்கும் பஞ்சமில்லை.

வாழ்க்கையில்தான் இப்படி யென்றால் வியாபாரத்தில் தவறாமல் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை செய்யாமல் தோல்வியைத் தழுவி ‘இந்த வருடமே சரியில்லை’ என்று காலத்தின் மீது பழி போடும் தொழிலதிபர்களும் ஏராளம்.

புது வருடத்தில் பிசினஸில் தீர்மானம் இயற்றி கடைபிடிக்க நினைப்பவர்களுக்கு உதவ இதோ சில விஷயங்கள். இவை புதிய மந்திரங்கள் அல்ல. தொழில் பிழைக்க, பிராண்ட் தழைக்க, மார்க்கெட்டிங் சிறக்க நான் இப்பகுதியில் எழுதியவை. ஊதிய சங்கை மீண்டும் ஊதுகிறேன். அரைத்த மாவை மறுபடியும் அரைக்கிறேன். இந்த வருடமாவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்!

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். தெரிந்த பழமொழி என்றாலும் எத்தனை பேர் இதை கேட்கிறார்கள்? தெரியாத தொழிலை தொட்டு படாத இடத்தில் பட்டுக்கொள்ள வேண்டியது. தெரிந்த தொழிலை விட்டுவிட்டு வரிந்து கட்டிக்கொண்டு அழவேண்டியது. இதை இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடமும் செய்யாதீர்கள். நல்லெண்ணெய் விற்றவர் நைட்டி விற்று தோற்றது முதல் சரக்கு விற்றவர் விமான சேவை துவங்கி அதே விமானத்தில் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆனது வரை ஏகப்பட்ட பேர் கெட்டு போயிருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் சேர்ந்து தொலைக்காதீர்கள். பிராண்ட் பொசிஷனிங் முக்கியம்.

விற்கும் பிராண்டை பொசிஷனிங் செய்யாமல் விற்காதீர்கள். பொசிஷனிங் என்பது பிராண்டை பற்றிய அழுத்தமான ஓர் அர்த்தத்தை வாடிக்கையாளர் மனதில் பதிய வைப்பது. பிராண்டை உபயோகிப்பதால் தனக்கோ தன் குடும்பத்துக்கோ பயன் உண்டு என்று வாடிக்கையாளர் நம்புகிறார். அந்த பயனே பொசிஷனிங்.

பிராண்டிற்கு பொசிஷனிங் இல்லை என்றால் அந்த பிராண்டை வாங்கி பயனில்லை என்று தானே அர்த்தம்? இதுவரை பொசிஷனிங் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது உங்கள் பிராண்டை பொசிஷனிங் செய்யுங்கள்.பிராண்ட் பொசிஷனிங் வாடிக்கையாளர் மனதில் பதிய தேவை அதற்கேற்ற விஷுவல். அதாவது பொசிஷனிங் என்னும் ஒலியை முழுமைப்படுத்த தேவை அதை குறிக்கும் ஒளி. இதற்கு ‘விஷுவல் ஹாமர்’ என்று பெயர்.

‘டெட்டால்’லின் பொசிஷனிங் பாதுகாப்பு. பாதுகாப்பின் ஒளி வடிவம் அதன் போர்வாள் சின்னம். டெட்டால் உபயோகித்தால் பாதுகாப்பு என்பதை போர்வாள் சின்னத்தோடு விளம்பரம் செய்யும் போது பிராண்டின் ஒலியும் ஒளியும் சேர்ந்து வாடிக்கையாளர் மனதில் சட்டென்று பட்டு பட்டென்று அமர்கிறது. உங்கள் பிராண்டுக்கும் அப்படி ஒரு விஷுவல் ஹாமரை உருவாக்குங்கள்.

விலை குறைத்துதான் விற்கமுடியும் என்ற தலையெழுத்து எந்த பொருளுக்கும் இல்லை. வித்தியாசப்படுத்தி விற்க தெரியாது என்று வேண்டுமானால் சொல்லுங்கள். வித்தியாசப்படுத்த முடியாது என்று சொல்லாதீர்கள். ஜல்லியை வித்தியாசப்படுத்த முடியாது என்று பலர் நினைக்க அதே ஜல்லியை குறையாத அளவு, சரியான தரம், தொடந்த வாடிக்கையாளர் சேவை என்று வித்தியாசப்படுத்தி மற்ற ஜல்லிகளை விட அதிக விலை நிர்ணயித்து வெற்றிகரமாக விற்கிறது ‘ப்ளூ மெட்’ என்ற மதுரையைச் சேர்ந்த பிராண்ட்.

எப்பொருளையும் பிராண்டாக்கி கிராண்டாய் விற்க முடியும், அதை வித்தியாசப்படுத்தி விற்கும் போது. இதை இந்த வருடமாவது உணருங்கள்.பிராண்டை பொசிஷனிங் செய்து வித்தியாசப்படுத்தி காட்டினால் மட்டும் போறாது. எதனால் சொன்னதை செய்யமுடிகிறது என்று கூறவேண்டும். இதை ‘நம்புவதற்கான காரணம்’ (Reason to believe) என்பார்கள். பல நல்லெண்ணெய் பிராண்டுகள் இருக்க ’எங்கள் பிராண்டின் சுவைக்கு காரணம் வெள்ளை எள்ளை செக்கினால் ஆட்டித் தருவதால்’ என்று கூறி ஜோராய் விற்கும் ‘சாஸ்தா நல்லெண்ணெய்’ போல் உங்கள் பிராண்டை வாடிக்கையாளர் நம்புவதற்கான காரணத்தை கூறுங்கள்.

கட்டிபிடி வைத்தியம்

உங்கள் வாடிக்கையாளரை கட்டி பிடிக்கிறீர்களா? நெஞ்சாரத் தழுவுவதல்ல, நெஞ்சால் தழுவுவது. அனைவருக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று யார்தான் விரும்பமாட்டார்கள். கட்டி அணைக்கப்படவேண்டும் என்று யார் தான் ஆசைப்பட மாட்டார்கள். அதுவும் உங்களுக்கு படியளக்கும் வாடிக்கையாளர் நினைக்க மாட்டாரா. அவரை கட்டிப் பிடியுங்கள்.

அவர் தேவைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டு அவர் கூறுவதை கேட்டு அவருக்குப் பரிவான சேவை அளியுங்கள். அவரே பிரதானம், அவரை தவிர வேறேதும் முக்கியமில்லை என்பதை உணருங்கள். தோல்விஎன்ற வியாதியை நீக்கும்`கட்டிப்பிடி வைத்தியம்’ இதுவே. இதை செய்தால் இதுவரை உங்களுக்கு வெறும் படி மட்டும்அளந்த வாடிக்கையாளர் லிஃப்டே அளப்பார்!

உங்கள் தொழில் செழிக்க உழைப்பவர்கள் ஊழியர்கள். அவர்களையும் மனதார கட்டிப் பிடியுங்கள். நல்ல மனிதனாய் இல்லாதவன் நல்ல தலைவனாக இருக்கவே முடியாது. உங்கள் ஊழியர்களுக்கு நல்லவனாய் இருங்கள். அன்பாய் நடத்துங்கள். ஊழியர்கள் மனம் நிறைந்தால் தான் உங்கள் கல்லா ஃபுல்லாகும். மறக்காதீர்கள்!

நீங்கள் கூட சோம்பேறியாய் இருக்கலாம், உங்கள் தொழில் சார்ந்த சொத்துகளை சோம்பேறியாய் இருக்க விடாதீர்கள். எந்த தொழிலிலும் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்கள் எங்கேயாவது மறைந்து புதைந்து கிடக்கும். பாசி படிந்து புதைந்திருக்கும்அதை தூசி தட்டி சுத்தம் செய்து திட்டம் போட்டு பயன்படுத்தும் போது லாபம் ஈட்டித் தர துவங்கும். அப்படி தூங்கிக் கொண்டிருக்கும் வருவாய் ஈட்டித் தரும் விஷயங்களை சோம்பேறி சொத்துக்கள் (Lazy assets) என்பார்கள்.

பழைய விற்பனை குறிப்புகள், என்றோ செய்த ஆய்வறிக்கைகள், எந்த காலத்திலோ செய்த சந்தை ஆய்வு அறிக்கை, ஏதோ ஒரு நிறுவனத்தோடு எப்பொழுதோ செய்த ஒப்பந்தம், முழுவதுமாய் பயன்படுத்தாமல் கிடக்கும் ஆபீஸ் அறைகள் என்று வருவாய் ஈட்டித் தரக்கூடிய சொத்து சோம்பேறியாக எங்கோ சொரிந்துகொண்டு தூங்கிக் கொண்டிருக்கும். அதை வெட்டி எடுத்து, தட்டி எழுப்பி இந்த வருடமாவது பெட்டி நிறைய பணம் பண்ணுங்கள்.

தொழிலதிபர் என்பவர் தன் தொழிலின் அதிபர். தலைவர். சிறந்த தொழிலதிபராக முதலில் சிறந்த தலைவர் ஆகவேண்டும். சிறந்த தலைவர்கள் சாதாரணமானவர்கள். ஆனால் தொழிலில் அசாதாரண ரிசல்ட் தருபவர்கள். இவர்கள் வெற்றிகளை ஜன்னல்களாக பாவித்து அதனூடே மற்றவர்களை பார்க்கின்றனர். அவர்களே வெற்றிக்கு சொந்தக்காரர்கள் என்கின்றனர். தோல்வியை சந்தித்தால் அதை முகம் பார்க்கும் கண்ணாடியாய் பாவித்து தங்களை மட்டும் அதில் கண்டு தவறுக்கு முழு பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்ய முயல்கின்றனர். அப்படிப்பட்ட தலைவனாக இருக்க முயலுங்கள்.

வெந்த சோற்றுக்கும் விதி வந்த சாவுக்கும் பிறப்பதல்ல மனித வாழ்க்கை என்பார்கள். போகும் போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் உங்கள் பெயர் சொல்லும் பிசினஸை விட்டு செல்லுங்கள். உங்கள் காலத்திற்கு பின்னும் உங்கள் புகழ் பாடும் பிராண்டை செதுக்கிவிட்டு செல்லுங்கள். ஒவ்வொரு நாளும் மீதமுள்ள உங்கள் வாழ்க்கையின் முதல் நாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை சரித்திரமாக்கும் சக்தி உங்களிடம் தான் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். இனி ஒரு விதி……..செய்வீர்களா?

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

35 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்