வேலை ஆளுமையைப் பாதிக்கிறதா? ஆளுமை வேலையைப் பாதிக்கிறதா?
இது நிறுவன உளவியல் கற்க ஆரம்பித்த நாளிலிருந்து தொடரும் ஆராய்ச்சி, சர்ச்சை.
போலீஸ் என்றால் சந்தேக புத்தி, அக்கௌண்ட்ஸ் பார்த்தால் சிக்கன புத்தி, ஹெச்.ஆர் என்றால் வாயிலிருந்து வார்த்தை வராது, குவாலிட்டி என்றால் குறை சொல்லும் குணம், ஆசிரியர் என்றால் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ மனோபாவம். இப்படி சில அபிப்பிராயங்கள் மிகப் பிரபலம். இது எவ்வளவு நிஜம் என்பது வேறு விஷயம்.
நம் வேலை நிர்பந்தங்கள் நம்மை பாதிக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அது எந்த அளவு என்பதில் தான் மாறுபட்ட கருத்துகள்.
வெளிநாடு சென்றிருந்த பேராசிரியர் தனியார் டாக்சியில் பயணம் செய்கிறார். ஓட்டுனர் மிக வேகமாகப் பறக்க, மிகுந்த தயக்கத்திற்குப் பின் ஓட்டுனர் தோளைத் தொட்டு “கொஞ்சம் நிதானம்” என்றார். தோள் தொட்டவுடன் மின்சாரம் பட்டது போல திடுக்கிட்ட ஓட்டுனர் வண்டியை ஓரம் கட்டியவாறு சொன்னார்: “சார்.. இப்படியெல்லாம் திடீர்னு பின் சீட்டிலிருந்து தொடாதீங்க...ப்ளீஸ்..”
பேராசிரியருக்கு புரியவில்லை. “என்னப்பா உன் பிரச்சினை” என்று கேட்டார்.
அதற்கு ஓட்டுனர் சொன்னது: “ சார், நான் 20 வருஷமா மார்ச்சுவரி வேன் (அமரர் ஊர்தி) ஓட்டிட்டு இப்போ ஒரு மாசமா தான் டூரிஸ்ட் ஓட்டறேன்...அதனால பின் சீட்டிலிருந்து தொட்டது திகிலா இருக்குது...!”
இது நகைச்சுவை துணுக்கு தான். ரொம்ப யோசிக்க வேண்டாம்!!
தொடர்ந்து செய்யும் வேலை எப்படி நம்மை இயந்திரமாய் மாற்றும் என்பதை சார்லி சாப்ளின் “ மாடர்ன் டைம்ஸ்” படத்தில் காட்டியிருப்பார். அரை நூற்றாண்டு தாண்டி நிகழவிருக்கும் மனித சிக்கல்களைப் பற்றி அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் தோன்றிய ஆரம்ப வருடங்களிலேயே ஆரூடம் சொன்ன மேதை அவர்!
அவர் சொன்ன உயரிய கருத்துகள் எவ்வளவு என்னை ஈர்த்ததோ, அதை விட அதிகமாக ஈர்த்தது அவர் அதைச் சொல்ல எடுத்துக் கொண்ட ஆயுதம்: நகைச்சுவை.
இன்று அந்த நகைச்சுவைக்கே ஒரு சோதனை வந்துள்ளது. புன்னகையும் நகைச்சுவையும் பணியிடங்களில் (எந்த வேலை செய்தாலும்) வழக்கொழிந்து வருவதைக் காண்கிறோம்.
பெங்களூரில் ஒரு ஐ.டி. கம்பெனியில் பணி நேரத்தில் திடீரென்று ஒரு வெளி ஆள் வந்து இசைக் கருவி வாசித்து, அனைவரையும் ஒரு “சாண்ட கிளாஸ்” போல மகிழ்விக்கிறாரம். வாரத்திற்கு ஒரு நாள், ஹெச். ஆர். செய்யும் “எம்ப்ளாயி எங்கேஜ்மெண்ட்” முயற்சியாம். இன்னொரு கம்பெனியில் நகைச்சுவை மற்றும் படைப்புத்திறன் பெருக மதிய நேரத்தில் “பீர்” சப்ளை செய்கிறார்களாம். (அந்த கம்பனி பெயர் தெரிந்து உடனே அங்கு விண்ணப்பிக்க நினைக்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது, மக்களே!)
ஒரு வினோதம் பாருங்கள். எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்ட ஐ.டி போன்ற துறைகளில்தான் அத்தனை உளவியல் சிக்கல்களும், நகைச்சுவை பஞ்சமும். மிக அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட உற்பத்தித் துறை சார்ந்த தொழில் கூடங்களில் இன்னும் நகைச்சுவை மிச்சமிருக்கிறது. வயதான தொழிலாளிகள் கூட மாமா, மச்சான் என்று விளித்துக் கொண்டு வேடிக்கை பேசுவதை இன்றும் எந்த தொழிற்சாலை வாசலிலும் காணலாம்.
ஒரு முறை என்னுடன் விமானத்தில் பயணித்த ஒரு ஐ.டி. கம்பெனி சி.இ.ஓ என்னிடம் தெரிவித்தார்: “உங்கள் டிரைனிங் ப்ரொக்ராம் பற்றி ரொம்ப நல்லாச் சொன்னாங்க. எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரிகிறது. உங்க டிரைனிங் முடிச்சவங்க எல்லாம் நல்லா வாய் விட்டு சிரிக்கிறாங்க. மற்றவங்க கிட்ட நல்லா பழகுறாங்க...!” “வெறும் சிரிக்க மட்டும் வைக்கறதுக்கு இவ்வளவு செலவா? “ என்று சிரித்தபோது பலமாக மறுத்துச் சொன்னார்: “ என்ன செய்து இவர்களை அமைதிப்படுத்த என்று தெரியவில்லை. ட்ரெயினிங்க் மட்டுமல்ல கவுன்சலிங்க், யோகா, ஹ்யுமர் கிளப், அவுட் பவுண்ட் பிக்னிக், கல்சரல்ஸ், ஃபன் அட் ஒர்க் எல்லாம் செய்யறோம். ஏன்னா வேலை அவ்வளவு ஒரே தன்மை (Monotony) கொண்டது. அதனால் சீக்கிரம் எல்லாம் போரடித்து விடுகிறது! அதன் வெளிப்பாடு தான் விவாகரத்து...தற்கொலை முயற்சி...!”
ஒரே சைக்கிளில் 40 வருடம் வேலைக்குப் போன எந்தத் தொழிலாளியும் எந்த மன உளைச்சலிலும் தற்கொலையை எண்ணியதில்லை. ஆனால் இரண்டு வருட பணி அனுபவமில்லாத இளைஞர்கள் மன அசதியில் மாடியிலிருந்து குதிப்பது நம் சமூகத்தின் ஒரு கலவர நிலையைக் காட்டுகிறது.
அன்னியப்படுதல் (ஒரு வகையில்) தற்கொலையை அதிகரிக்கும் என்கிறது சமூகவியல். உள்ளே நகைச்சுவையைத் தொலைத்துவிட்டு, வெளியே சிரிப்பு படங்களிலும், தொலைக்காட்சியில் சிரிப்பு நடிகரின் காமடிக் காட்சிகளிலும் தேடுகிறோம். எல்லா நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு வகையில் நகைச்சுவையை முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. சிறப்புப் பட்டி மன்றங்கள் கூட இலக்கியம் தொலைத்து சிரிப்பு பட்டி மன்றங்களாக மாறிவிட்டன.
நகைச்சுவை இன்று “நகைச்சு வை”- சிரித்துத் தொலை என்பது போல கட்டாயமாகி வருகிறது.
நகைச்சுவைக்கு பல மன நிலைகள் தேவைப்படுகிறது. வாழ்வு பற்றிய நம்பிக்கை, எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம், சுய விமர்சனம், புதுமையை ஏற்றுக்கொள்ளுதல், சவால்களை தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ளுதல் என நிறைய கூறலாம். இவை அனைத்தும் வரும் சந்ததியிடத்தில் இல்லாமல் போய் கொண்டிருப்பதுதான் நிஜம்.
என் பள்ளி நாட்களில் ஒய்.ஜி.எம். நாடகத்தில் (ரகசியம் பரம ரகசியம் ) ஒரு ஜோக் வரும்:
“என் பையன் ஊதிபத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான்!”
“ஐயையோ!”
“நல்ல வேளை. இன்னிக்கு வாழைப்பழம் தான் ஊதுபத்தி ஸ்டாண்ட்!”
இதை உங்கள் பையனுக்கு சொன்னால் “மொக்கை” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போய்விடுவான். ஆனால், அந்த ஜோக்கை (70-80 களில் ரம்பம், கடி, அறுவை தான் எல்லம்!) ஏன் ரசித்தேன் என்று நான் பல நாட்கள் யோசித்ததுண்டு. அந்த அவகாசமும் அவசியமும் என் மாணவப் பருவத்தில் இருந்தது. அசைபோட அவ்வளவு இருந்தது. இன்று எல்லாம் மொண்ணையாகி மொக்கையாகி வருகின்றன.
நகைச்சுவை செத்து விட்டதா நம் நாட்டில்? இல்லவே இல்லை. இன்னமும் அடி மட்ட தொழிலாளிகள், யாரும் கவனிக்காத சாதாரண பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தொழிற் நுட்பம் ஊடுறுவாத கிராமங்களில் வயதானாலும் ரவுசு குறையாத பெரிசுகள், அன்ரிசர்வ்ட் ரயில் பெட்டிகளில்- குறிப்பாக கதவோர நெரிசலில்...நகைச்சுவை மிச்சமுள்ளது தான்.
டிப்ரஷன் எனப்படும் மன அழுத்த நோயைப் போக்கும் மருந்து தான் வளர்ந்த நாடுகளில் அதிகம் விற்கப்படும் மருந்து. கேண்டீன் உணவு டோக்கன் போல அதையும் நம் பணி இடங்களில் பட்டுவாடா செய்யும் காலம் வராமல் பார்த்துக் கொள்வோம்.
நம் சொந்தம், நட்பு, பணி வட்டம் என கூட்டம் சேர்ந்து பேசிய பழங்கதைகளைப் பேசுவதையும் விட பேரின்பம் எது?
நகைச்சுவையை வெளியே தேட வேண்டாம். அது நம் உள்ளே குதூகலமாய் குடி கொண்டு உள்ளது!
டாக்டர். ஆர். கார்த்திகேயன் - தொடர்புக்கு Gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago