காலாண்டு முடிவுகள்: யெஸ் வங்கி, இந்தியாபுல்ஸ், விப்ரோ, ஜோதி லேப்ஸ்

யெஸ் வங்கி நிகரலாபம் 21% உயர்வு

தனியார் வங்கியான யெஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 21 சதவிகிதம் அதிகரித்து ரூ.371 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டின் நிகரலாபம் ரூ. 306 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலாண்டின் மொத்த வருமானம் ரூ.2,947 கோடியாகும். ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டின் மொத்த வருமானம் ரூ2,263 கோடியாக இருந்தது.

நிகர வட்டி வரம்பில் பெரிய மாற்றம் இல்லாமல் 2.9 சதவிகிதம் என்ற நிலையிலே இருந்தது. வங்கி திருப்திகரமாக செயல்பட்டிருப்பதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர் தெரிவித்தார்.

ஆனால் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது காசா விகிதம் 20.4 சதவிகிதம் என்ற குறைவான நிலையிலே இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் வங்கிப் பங்கு 3.72 சதவிகிதம் உயர்ந்து 372 ரூபாயில் முடிவடைந்தது.

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்: லாபம் இரு மடங்கு உயர்வு

இந்தியா புல்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 81.19 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் கடந்த வருடம் (2012) இதே காலாண்டில் நிகர லாபம் 32.24 கோடி ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது 32 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் நிகர விற்பனை 342 கோடி ரூபாய். இந்த செப்டம்பரில் 450 கோடி ரூபாய். மேலும் ஒரு பங்குக்கு ஒரு ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது.

வர்த்தகத்தின் முடிவில் இந் நிறுவனப் பங்கு 2.43 சதவிகிதம் உயர்ந்து 67.55 ரூபாயாக முடிந்தது.

ஜோதி லேப்ஸ் லாபம் 15 மடங்கு உயர்வு

எப்.எம்.சி.ஜி. பிரிவில் செயல்பட்டு வரும் ஜோதி லேபாரெட்டரிஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 15 மடங்கு மேல் அதிகரித்திருக்கிறது. நடந்து முடிந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 20.87 கோடியாகும். ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டில் 1.32 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிச்சயமற்ற சூழ்நிலையிலும் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இதை தொடர்வதற்கு மேலும் முதலீட்டிலும், பிராண்டை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம் என்று நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் வரும் காலாண்டுகளில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

லாப விகிதங்கள் நன்றாக வந்திருப்பதால் இந்நிறுவனப் பங்கு 7.16 சதவிகிதம் உயர்ந்து 190 ரூபாயில் முடிவடைந்தது.

விப்ரோ நிகர லாபம் 28% உயர்வு

இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவில் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய நிகர லாபம் 1,932 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் கடந்த வருட இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1,504 கோடி ரூபாயாகும்.

பெரும்பாலான அனலிஸ்ட்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வந்திருக்கின்றது. டி.சி.எஸ், ஹெச்.சி.எல். உள்ளிட்ட முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் லாபகரமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகத்தின் முடிவில் 1.78 சதவிகிதம் உயர்ந்து 514.80 ரூபாயில் இந்த பங்கு தன்னுடைய வர்த்தகத்தை இன்று முடித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE