ஐசிஐசிஐ புரூ லைப் ஐபிஓ: செப்டம்பர் 19-21 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு வரும் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகிறது. காப்பீட்டுத் துறையில் வெளியாகும் முதல் ஐபிஓ இதுவாகும். தவிர கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அதிக தொகையை திரட்டும் நிறுவனமும் இதுவாகும்.

வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்த நிறுவன பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலையாக ரூ.300 முதல் ரூ.334 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. உச்சபட்ச விலைக்கு பங்குகள் ஒதுக்கப்படும் போது ரூ.6,057 கோடியை திரட்ட முடியும்.

கடந்த ஜூலை 18-ம் தேதி செபியிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்தது. செப்டம்பர் 2-ம் தேதி ஐபிஓ வெளியிட செபி அனுமதி வழங்கியது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 68 சதவீத பங்குகளை வைத்துள்ளது. புரூடென்ஷியல் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் புரூடென்ஷியல் தனது பங்குகளை விற்கவில்லை. ஆனால் ஐசிஐசிஐ வங்கி 12.65 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்கிறது. 2010-ம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியதற்கு பின்னர் வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும்.

கடந்த ஆண்டு இந்த காப்பீட்டு நிறுவனத்தின் 6 சதவீத பங்குகளை பிரேம்ஜி இன்வெஸ்ட் (4%) மற்றும் டெமாசெக் (2%) ஆகிய நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி விற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE