ஆப்பிரிக்காவில் தடம் பதிக்கும் இந்திய வங்கிகள்

இந்திய வங்கிகள் ஆப்பிரிக்க நாடுகளில் தடம்பதித்து தங்களின் கிளைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் ரீடெய்ல் வங்கித்துறை ஆண்டுக்கு 15 சதவிகித வளர்ச்சி (2020-ம் ஆண்டு வரை) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மொபைல் பேங்கிங்கும் வேகமாக வளர்ச்சி அடையும் என்று தெரிகிறது.

இதனால் இந்திய வங்கிகள் ஆப்பிரிக்காவில் தடம்பதித்து வருகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் 45 கிளைகள் இருக்கின்றன. கென்யா, உகாண்டா, தான்சானியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, கானா, செசல்ஸ் ஆகிய நாடுகளில் பேங்க் ஆஃப் பரோடாவுக்கு கிளைகள் இருக்கிறது.

கடந்த ஜூன் மாதம்தான் தான்சானியா நாட்டின் தலைநகரான தார் இஸ் சலாமில் (Dar es Salaam) புதிய கிளையை திறந்தது. ஜாம்பியா நாட்டில் அந்நாட்டு வங்கியான ஜாம்பியா வங்கியுடன் இணைந்து அந்த நாட்டில் 21 கிளைகளுடன் செயல்படுகிறது. ரீடெய்ல், கார்ப்பரேட், சிறு நிறுவனங்களுக்கான கடன் என பல பிரிவுகளில் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது.

வரும் காலத்தில் கூடுதலாக 16 கிளைகளை திறக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

வெளிநாட்டு கிளைகளில் நன்கு வளர்ச்சி இருக்கிறது. அதே சமயத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் வளர்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக இந்த வங்கியின் வெளிநாட்டு பிரிவுக்கான தலைமை பொது மேலாளர் வி.ஹெச். தாட்டே (V. H. Thatte) தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் பல பகுதிகளை அடையாளம் கண்டு வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

பேங்க் ஆஃப் பரோடாவை போலவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் ஆப்பிரிக்க நாடுகளில் தங்களின் கிளைகளை உருவாக்கி வருகின்றன.

பேங்க் ஆஃப் இந்தியா கென்யா, தான்சானியா, ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளில் தங்களுடைய கிளைகளை வைத்திருக்கிறது. இந்த வங்கி ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் கிளையை திறந்தது.

கடந்த ஆகஸ்டில் போட்ஸ்வான அரசு பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.பி.ஐ. வங்கிகளை தங்கள் நாட்டில் திறப்பதற்கு அனுமதி அளித்தது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளை தவிர மொரிஷியஸ் நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. எஸ்.பி.ஐ.யின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் மொரிஷியஸூக்கு மொரிஷியஸில் மட்டும் 15 கிளைகள் இருக்கிறது.

இன்னொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் ஜோஹன்னஸ்பர்க்கில் கிளையை திறக்கவிருக்கிறது. தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐயும் மொரிஷியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தங்களின் கிளையை திறக்க முடிவு செய்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE