பணம் நமக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்; நாம் பணத்துக்கு அடிமையாகக்கூடாது.
- ஜான். டி. ராக்ஃபெல்லர்
பிதாமகன் படம். சூர்யா. கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ் ஸ்டைலில் ஒயிட் பான்ட், இன் பண்ணிய ஒயிட் ஷர்ட், டை, ஷூ சகிதம் ரோட்டில் நாட்டு மருந்து விற்கிறார்.
``கல்நார் துளசித் தைலம். தும்பை, துளசி, நொச்சி, ஆலவிழுது, வேல விழுது, பச்சைக் கற்பூரம், வேம்பு, சோம்பு, வெத்தலை போன்ற பதினெட்டு வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அரிய, அரிய, அரிய தைலம்…….”
1837 ஆம் ஆண்டு. நியூயார்க், நியூஜெர்ஸி பகுதிகளில் ஒரு இளைஞன் சூர்யா போலவே தைலங்களைக் கூவிக் கூவி விற்கிறான்.
சில வாரங்களுக்குப் பிறகு……நியூயார்க்கின் புறநகர்ப் பகுதி. தெருவோரத்தில் ஒரு இளைஞன் நிற்கிறான். ``என் பெயர் வில்லியம். எனக்குக் காது கேட்காது. வாய் பேச முடியாது” என்று போர்டு. பெண்களுக்கான காதணிகள் விற்கிறான். ஊர்ப் பணக்காரரின் மகள் எலிசா வருகிறாள். காதணிகள் வாங்குகிறாள். அந்த ஆறடி ஆணழகனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். அடிக்கடி அந்தக் கடைக்கு வருகிறாள். ஒரு நாள். கூடவந்த தன் தோழியிடம் சொல்கிறாள், ``இந்த ஆளுக்கு மட்டும் கேட்கும், பேசும் குறைகள் இல்லையென்றால் நான் இவனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன்.”
சிறிது நேரம் கழிகிறது. எலிசா வீட்டுக்குப் போகும் வழியில் முகம் நிறையச் சிரிப்போடு அந்த இளைஞன். அருகில் வருகிறான். “ஐ லவ் யூ” சொல்கிறான். எலிசா திகைப்பில்.
“நீங்கள்……நீங்கள் பேசுகிறீர்கள்?’’
“எனக்குப் பேசவரும். காதும் கேட்கும். உன்னை ஒருநாள் பார்த்தேன். நீ என்னை லவ் பண்ண இப்படி நாடகம் போட்டேன்.”
இருவரும் பழகத் தொடங்கினார்கள். எலிசாவுக்கு அப்போது தெரியாது அவன் ஒரு டுபாக்கூர், தன்னைத் துரத்தி வலையில் விழவைத்தது தான் ஒரு பணக்காரி என்பதால் மட்டுமே என்றெல்லாம். வீட்டின் எதிர்ப்பையும் மீறி வில்லியமை திருமணம் செய்து கொண்டாள்.
தனிக் குடித்தனம் போனார்கள். மாதக் கணக்கில் காணாமல் போய்விடுவான். திரும்பி வருவான். எங்கெங்கோ ஏமாற்றிப் பணம் கொண்டுவருவான். ஒரு நாள் எலிசாவிடம் வந்தான், “நீ வீட்டு வேலை செய்யக் கஷ்டப்படுகிறாய். ஒரு வேலைக்காரியை வைத்துக்கொள்.” அவனே அழகான ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்தான். அவள் வேலைக்காரியில்லை, அவனுடைய முன்னாள் காதலி நான்சி. இருவரோடும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினான். எலிசாவுக்கு ஆறு குழந்தைகளும், நான்சிக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன. எலிசாவின் இரண்டாம் குழந்தை ஜான்.
ஊரை ஏமாற்றிப் பிழைத்து, உடல் சுகத்துக்காக மட்டுமே எப்போதாவது வீட்டுக்கு வரும் புருஷன், ஆறு வாரிசுகளையும் வளர்க்கும் முழு பாரமும் எமிலி தலையில். வீட்டுத் தோட்டத்தில் மக்காச் சோளம், காய்கறிகள் பயிரிட்டாள். ஆடு, மாடுகள், கோழிகள் வளர்த்தாள். ஒவ்வொரு காசையும் கவனித்துச் செலவிட்டாள். அதே சமயம், வாரா வாரம் தேவாலயத்துக்குப் போகும்போது உண்டியலில் சிறிய தொகை போடுவாள். ``நாமோ ஏழைகள். ஏன் உண்டியலில் பணம் போடவேண்டும்?” என்று ஜான் கேட்டான்.’’ எலிசாவின் பதில், “நம்மைவிட ஏழைகள் உலகில் இருக்கிறார்கள். முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும்.” சிறு வயதிலேயே, தர்மம் செய்வது அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஐந்து வயதில் பள்ளிக்கூடம் போகத் தொடங்கினான். பொறுப்பான பையன். தோட்டவேலைகளில் அம்மாவுக்கு உதவுவான். அக்கம் பக்கத்தாருக்கும் எடுபிடி வேலைகள் செய்துகொடுப்பான். வீட்டில் வான்கோழி வளர்த்தான். இதைச் சந்தையில் விற்பான். ஒரு தம்படி கூடச் செலவழிக்கமாட்டான்.
12 வயதாகும்போது, தன் உண்டியலில் 50 டாலர் சேமித்துவிட்டான். அம்மாவின் ஆலோசனைப்படி, ஊரில் இருந்த கடைக்காரருக்கு மொத்த சேமிப்பையும் கடன் கொடுத்தான். 7 சதவிகித வட்டி தரும்படி அம்மா பேரம் பேசி முடித்தாள். ஒரு வருடம் ஓடியது. கடன் வாங்கியவர் 53.50 டாலர் திருப்பிக் கொடுத்தார். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், படுத்துக்கொண்டே, பணத்தைக் குட்டிபோடவைக்கமுடியும் என்னும் பணவளர்ச்சிக் கலையின் சூட்சுமம் ஜானுக்குப் புரிந்துவிட்டது.
1855. வயது 16. குடும்பச் சூழ்நிலையால், வேலை தேடினார். ஜானிடம் ஒரு குணம். மனிதனின் வெற்றிக்கு, அவன் திறமையைப் போலவே, வெளித்தோற்றமும் மிக முக்கியம் என்று நம்பினார். கோட், டை என்று டீக்காக டிரெஸ் பண்ணிக்கொண்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கினார். ஒரு நாள் அல்ல, 42 நாட்கள். கோதுமை, சோளம், இறைச்சி ஆகியவற்றைத் தயாரிப்பாளர்களிடம் வாங்கி விற்கும் கமிஷன் ஏஜென்சி கம்பெனியில் உதவி அக்கவுன்டன்ட் வேலை கிடைத்தது.
கை சுத்தமோ சுத்தம். ஒவ்வொரு செலவின பில்லையும் கண்களில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்தார். கம்பெனியில் பொருட்களை வாங்கிவிட்டுப் பணம் தராமல் டபாய்த்தவர்களைத் துரத்தித் துரத்தி வாராக்கடன்களை வசூல் செய்தார். சம்பளம் குறைவுதான். ஆனால், ஒவ்வொரு மாதமும், சம்பளம் வந்தவுடன் முதல் வேலை, அதில் ஒரு பகுதியைச் சர்ச்சுகளுக்கும், சமூகநல நிறுவனங்களுக்கும் தர்மமாகத் தந்தார்.
இருபதாம் வயதில் சொந்தக் கமிஷன் ஏஜென்சி வியாபாரம் தொடங்கினார். கடும் உழைப்பு, பிறர் எடுக்கத் தயங்கும் தடாலடிச் செயல்கள் இரண்டே வருடங்களில் அசுர வளர்ச்சி. ஜானுக்கு மட்டும்தான் திருப்தியில்லை. கோதுமை, சோளம், இறைச்சி ஆகியற்றின் வியாபாரம் வருடத்துக்கு 4 அல்லது 5 சதவிகிதத்தில்தான் வளர்ந்து கொண்டிருந்தது. கடும் போட்டியால், லாபமும் குறைந்துகொண்டே வந்தது. அதே சமயம், தொழிற்புரட்சியால், பார்க்கும் இடமெல்லாம், பிரம்மாண்டத் தொழிற்சாலைகள் வந்துகொண்டிருந்தன. கோதுமை, சோளம், இறைச்சி போன்ற விவசாயப் பொருட்களின் வியாபாரத்திலிருந்து தொழிலகங்களுக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்யும் கமிஷன் வியாபாரத்துக்குத் தன் பாதையை மாற்றிக்கொண்டார்.
1860 - களில் பெட்ரோல் தொழிற் சாலைகளின் முக்கிய எரிபொருளாகிக் கொண்டிருந்தது. இந்தத் தேவையைத் திருப்தி செய்யச் சிறிய பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலைகள் தொடங்கப்பட்டு வந்தன. உலகப் பொருளாதாரத்தின் இயங்குசக்தியாகப் பெட்ரோல்தான் இருக்கப்போகிறது என்று ஜான் கணித்தார். ஆகவே, பிரம்மாண்டமாகப் பெட்ரோலியச் சுத்திகரிப்புத் தொழிற்சாலை தொடங்கவேண்டும். இதற்காக, 1863 - இல் கம்பெனி தொடங்கினார்.
ஜானைப் பொறுத்தவரை போட்டி என்பது பந்தயமல்ல, எதிர்த்து நிற்பவர் கள் அத்தனைபேரையும் துவம்சம் செய்யவேண்டிய மகாயுத்தம். இந்தப் போரில் முக்கிய ஆயுதம் விற்பனை விலை. இதற்காக லாபத்தைக் குறைக்கக் கூடாது. உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் இந்தச் சிந்தனைதான், நடவடிக்கைதான்.
பெட்ரோலியப் பொருட்கள் ஓக் மரத்தால் செய்யப்பட்ட பேரல்களில் அனுப்பப்பட்டன. ஜான் ஓக் தோட் டங்கள் வாங்கினார். பேரல்களை அவரே தயாரித்தார். சேதாரங்களைக் குறைத் தார். விற்பனைப் பொருட்களின் சரக்குப் போக்குவரத்துக்கான ரெயில் கம்பெனி தொடங்கினார். கொட்டிய லாபம் அத்தனையையும் தொழிற்சாலையை விரிவாக்கப் பயன்படுத்தினார். 1868. தன் 29 ஆம் வயதில், உலகப் பெட்ரோல் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி ஜான் டி. ராக்ஃபெல்லர்தான்!
அடுத்த மூன்றே வருடங்கள். ஒன்று விடாமல், அத்தனை போட்டி பெட்ரோல் சுத்திகரிப்பு போட்டியாளர்களும் ராக்ஃபெல்லர் தலைமையிலான ஸ்டான்டர்ட் ஆயில் கம்பெனி என்னும் நிறுவனத்தில் சங்கமமானார்கள். எல்லோரையும் அவர் மிரட்டிச் சம்மதிக்கவைத்தார் என்கிறார்கள் சிலர்; பிசினஸில் இது சகஜமப்பா என்று ஒத்துப்பாடுகிறார்கள் பலர்.
பணம் எப்படி வந்தது என்பதில் ஒளிவுமறைவு இருக்கலாம். ஆனால், வாரி வழங்கியதில் அத்தனையும் வெளிப்படை. தன் 43 - ஆம் வயதில் ஏழு கோடி டாலர் நன்கொடையுடன் அறக்கட்டளை தொடங்கினார். உலக வரலாற்றில், வாரி வழங்கிய வள்ளல்கள் வரிசையில் ஜான் டி. ராக்ஃபெல்லர் முன்னணியில் நிற்கிறார்.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago