வீட்டுக் கடன் வாங்க சில யோசனைகள்

வீட்டுக் கடன் என்ற கான்செப்ட்டைக் கண்டுபிடித்தவர்களுக்கு மக்கள் நிச்சயம் நன்றி சொல்லியே தீர வேண்டும். இன்று பெரும்பாலோனர் வீட்டுக் கடன் வாங்கியே தங்கள் கனவு இல்லத்தை அடைகிறார்கள். வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், எந்த விவரமும் தெரியாமல் அதற்கு முயற்சிப்பது தவறு. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளிவந்தாலும், நீண்ட காலமாக நம்பிக்கையாகத் திகழும் வீட்டு வசதி நிறுவனம் அல்லது வங்கியைத் தேர்வு செய்வதே மிகவும் நல்லது. வீட்டுக் கடன் பெறுவதில் உதவும் சில டிப்ஸ்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.

#வீட்டுக் கடன் பெறுவதற்குப் பொதுவான சூத்திரங்கள் எதுவும் இல்லை. ஒருவருக்கு நல்லதாக இருக்கக்கூடிய வீட்டுக் கடன் திட்டம் ஒன்று, மற்றொருவருக்குச் சரியில்லாமல் போகலாம். அதே போல, இன்னொருவர் சிறப்பாக இல்லை என்று நினைக்கக்கூடிய திட்டம் மற்றொருவருக்கு அற்புதமானதாக இருக்கலாம். எனவே உங்கள் வீட்டுத் தேவைக்கு எந்தத் திட்டம் சரியாகப் பொருந்தும் என்று முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

#வீட்டுத் தேவைகள், பணம் செலுத்துவதற்கு நமக்கு இருக்கும் ஆதாரம், எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை முடிவு செய்தபின், அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதுதான் வீட்டுக் கடன் வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்யும் வழி. மிகமிக கவனத்துடனும், சரியான ஆலோசனை செய்தும் வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டுவசதி நிறுவனம் அல்லது வங்கியுடன் நீண்ட காலத்திற்குத் தொடர்பு ஏற்படுத்தப் போகிறோம் என்றால் அதன் பழைய வரலாறு, நிறை, குறைகளைத் தீர ஆராய வேண்டும். முடிந்தால், ஏற்கனவே குறிப்பிட்ட நிறுவனத்தில் கடன் பெற்றவர்களுடன் பேசி, அந்நிறுவனத்தில் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

#வீடு அல்லது மனை வாங்கப்போகிறோம் என்றால், ஒவ்வொருவரும் போகிறபோக்கில் இலவச ஆலோசனைகளை அள்ளி வீசி விட்டுச் செல்வார்கள். எனவே ஒவ்வொன்றையாகத் தெரியாதவர்களிடம் விசாரித்துக் களைத்துப் போவதற்குப் பதிலாக ரியல் எஸ்டேட் அல்லது வீட்டுக் கடன் பற்றி பேசும் நிபுணர்களுடன் கலந்து பேசுவது வீட்டுக் கடன் பற்றியும், ரியல் எஸ்டேட் பற்றியும் கலந்தாலோசிப்பது பரிச்சயத்தை ஏற்படுத்தும்.

#சராசரி வருமானம் உள்ள ஒருவருக்கு வீடு கட்டத் தேவையான பெருந்தொகையைத் திரட்டுவது கடினமே. வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் அளிக்க முன்வந்தாலும், பெரும்பாலும் 80 சதவீத கடனையே நிறுவனங்கள் வழங்கும். எனவே எஞ்சிய 20 சதவீதத் தொகையை நாம் திரட்ட வேண்டும். அந்தத் தொகையைத் திரட்ட முடியும் என்பதை உறுதி செய்த பிறகு வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களை நாடலாம். இது தேவையற்ற கால விரயத்தைத் தடுக்கும்.

#சொந்த வீடு என்பது வாழ்வில் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வை அளிக்கிறது. அடிப்படை தேவைகளில் ஒன்றான வீட்டை அடைவது தன்னிறைவு பெற்றது போன்ற பெருமிதத்தைத் தருகிறது. இந்த நிம்மதியும் பெருமிதமும் வீடு கட்டிய பிறகும் தொடர வேண்டுமென்றால், சரியான வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்வதேயாகும்.

சரியான முறைகளை மேற்கொண்டு கடன் பெற்று வீட்டுக் கனவை நனவாக்கிக்கொண்டால் அது நிச்சயம் ஓர் இனிய அனுபவமாக இருக்கும் என்பது நிதர்சனம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE