சர்வதேச வர்த்தக அமைப்பின் (டபிள்யு.டி.ஓ) வர்த்தக ஒப்பந்தம் சனிக்கிழமை நிறைவேறியது. ரத்து அதிகாரத்தை (வீடோ) பயன்படுத்தும் முடிவை கியூபா கைவிட்டதற்குப் பிறகுதான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேறியது.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடைபெற்ற மாநாட்டில் 160 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்றனர்.இந்த ஒப்பந்தம் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் ஒரு லட்சம் டாலர் வரையிலான வர்த்தகம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
ஒப்பந்த வரைவுத் தீர்மானத்தை தனக்குள்ள ரத்து அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்தப் போவதாக கியூபா கூறி வந்தது. இதனால் ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கல் நீடித்தது. இறுதியில் தனது முடிவை கியூபா மாற்றிக் கொண்டதால் தீர்மானம் நிறைவேறியது.
டபிள்யு.டி.ஓ வரலாற்றில் முதல் முறையாக ஒப்பந்தம் மிகச் சிறப்பாக நிறைவேறியுள்ளதாக அதன் தலைவர் ராபர்டோ அஸெவெடோ கூறினார். அமைச்சர்களிடையே தீர்மானம் நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், நிர்ணயிக்கப்பட்ட நாளை விட கூடுதலாக ஒரு நாள் ஆனது.
இருப்பினும் தீர்மானம் நிறைவேறியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த முறைதான் உறுப்பு நாடுகளின் அனைத்து அமைச்சர்களும் ஒரு சேர இங்கு வந்துள்ளனர். இந்த முறை தீர்மானம் நிறைவேறியதால், உலக வர்த்தக அமைப்பின்கீழ் அனைத்து நாடுகளையும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவர் உறுதிபடக் கூறினார். மீண்டும் வர்த்தகத்துக்குத் திரும்பியுள்ளோம். அதற்கு பாலி அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது என்று அவர் கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட சமாதானத்தைத் தொடர்ந்து ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் முடிவை கியூபா கைவிட்டது. இதையடுத்தே அனைத்து உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறைவேறியது.
வர்த்தக ஒப்பந்தம்
டபிள்யு.டி.ஓ. ஒப்பந்தம் நிறைவேறினாலும் இது எந்த வகையில் நிறைவேற்றப்படும் என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதா, இந்த மாநாட்டில் முக்கிய விவாதப் பொருளாகியது. உறுப்பு நாடுகள் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று டபிள்யு.டி.ஓ வலியுறுத்தி வருகிறது. இருந்தபோதிலும் கடைசியில் அதைத் தள்ளிவைத்துவிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று ஸ்விட்சர்லாந்தில் உள்ள சர்வதேச வர்த்தக பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சிமோன் எவ்னெட் கூறினார். இந்த மாநாட்டில் உணவு பாதுகாப்பு மசோதா குறித்த வாதம் எஞ்சிய பிற பிரச்சினைகளை விவாதிக்க முடியாமல் செய்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதா குறித்த விவாதம் காரணமாக மாநாட்டின் துவக்கமே மிகுந்த நெருடலுடன் ஆரம்பமானது.
வேளாண் துறைக்கு ஒதுக்கும் மானிய அளவை 1985-86-ம் ஆண்டு விலையுடன் ஒப்பிட்டு ஒதுக்கக் கூடாது என்ற இந்தியாவின் வாதத்துக்கு சீனா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பெரும்பாலான ஏழை மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியுடன் இருந்தது. மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உலகிலுள்ள ஏழை மக்களும் பயனடைவர் என இந்தியா வாதிட்டது.
மானியம் அளிப்பதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவின் கோரிக்கை ஏற்கப்பட்டு இதற்கு நான்கு ஆண்டுகளுக்குள் தீர்வு காணப்படும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
டபிள்யு.டி.ஓ. அமைப்பில் மொத்தம் 159 உறுப்பினர்கள் உள்ளனர். 1995-ம் ஆண்டு எட்டப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்துக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தை காரணமாக இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி வர்த்தகத்தில் நிலவும் தடைகள் நீக்கப்பட்டு, சுங்கத்துறை வழியாக பொருள்கள் தாராளமாக நடமாட வழியேற்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச பொருளாதாரம் பல்லாயிரம் கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்கும். இதன் மூலம் வளரும் நாடுகளில் 2 கோடி பேருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என டபிள்யு.டி.ஓ தெரிவித்துள்ளது.
பாலியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தால் சர்வதேச பொருளாதாரத்தில் 96,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் பெருகும் என்றும் 2.10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இவர்களில் 1.80 கோடி பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாயிருப்பர் என்றும் வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச பொருளாதாரத்துக்கான பேட்டர்சன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago