தொழில் முன்னோடிகள்: தாமஸ் வாட்சன் சீனியர் (1874 1956)

By எஸ்.எல்.வி மூர்த்தி

எத்தனை தவறுகள் செய்யமுடியுமோ, அத்தனையையும் செய்யுங்கள். தோல்விகளைச் சந்தியுங்கள். பாடங்கள் கற்றுக்கொள்ளுங்கள். தோல்விகளின் மறுமுனையில்தான் வெற்றி இருக்கிறது.

- தாமஸ் வாட்சன்

தாமஸ் வாட்சனின் இந்த வார்த்தைகள் வெறும் வாய்ஜாலங்களல்ல. அனுபவ நெருப்பில் புடம் போடப்பட்ட வைரமொழிகள். அவர் ஏராளமான தவறுகள் செய்திருக்கிறார் 17 வயதில் படிப்பை விட்டார்; இலக்கே இல்லாமல் பள்ளி ஆசிரியர், மளிகைக்கடைக் கணக்குப்பிள்ளை, தையல் இயந்திரங்கள் சேல்ஸ்மேன், கசாப்புக் கடை முதலாளி, கணக்குப் போடும் இயந்திரங்கள் (கேஷ் ரெஜிஸ்ட்டர்) சேல்ஸ்மேன் எனப் பலவிதமான வேலைகள் பார்த்தார்; குடிப் பழக்கத்தால் கம்பெனி பொருட் களை இழந்தார்; தில்லாலங்கடி முதலாளிகளிடம் வேலை பார்த்து ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார்; அவர்களால் பலியாடு ஆக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்.

40 வயதுவரை வாட்சன் செய்தவை பல தவறுகள். சந்தித்தவை தோல்விகள், அவமானங் கள். ஆனால், இவை அனைத்திலும் பாடம் கற்றுக்கொண்டு, `மதுவைத் தொடுவதில்லை’, ’நேர்மையற்ற பாதையில் நடப்பதில்லை’ என்று சத்தியம் எடுத்தார். வாழ்நாள் முழுக்க இந்த உறுதியைக் காப்பாற்றினார். 40 ஆம் வயதில் ஐ.பி.எம். கம்பெனியில் சேர்ந்து, சி.இ.ஓ.வாக உயர்ந்து, ஐ.பி.எம் கம்ப்யூட்டரை உலகின் சக்கரவர்த்தியாக மாற்றினார். வாட்சன் எடுத்த விண்ணளாவிய விஸ்வரூபம்!

****

நியூயார்க் மாநிலத்தில் (நம் வாட்சனின் அப்பா) தாமஸ் வாட்சன் வசித்துவந்தார். அவருக்கு ஒரு சிறிய பண்ணை இருந்தது. வறண்ட பூமி. ஆகவே, தண்ணீர் அதிகம் தேவைப்படாத மரங்கள் வளர்த்தார். இந்த மரங்களை மரச் சாமான்கள் செய்பவர்களுக்கு விற்று வந்தார்.

தாமஸ் வாட்சனுக்கு நான்கு பெண் குழந்தைகள். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, அவரும், மனைவியும் குடும்பம் நடத்தினார்கள். 1874. ஐந்தாவதாக மகன் பிறந்தான். அப்பா பெயரையே மகனுக்கும் வைக்கும் வழக்கம் சில குடும்பங்களில் உண்டு. அதன்படி, மகனுக்கும் தாமஸ் வாட்சன் என்று பெயர் வைத்தார்கள். புதுவரவு, வீட்டுக்கு அதிர்ஷ்டம் கொண்டுவருவான் என்று நினைத்தார்கள்.

ஆனால், இவனோ ராசியில்லாத ராஜா. சோதனைகள் மேல் சோதனைகள் கொண்டுவந்தான். அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. வறுமை வீட்டுக் கதவைத் தட்டியது. நல்ல பள்ளிகளுக்கு அனுப்பமுடியாத நிலை. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரே அறையில் இருந்த பள்ளிக்குப் போனான். படிப்பு, விளையாட்டு, இசை போன்ற எதிலுமே அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனோ தானோவென்று பள்ளிப் படிப்பை முடித்தான். மகன் வழக்கறிஞராக வேண்டுமென்று அப்பா ஆசைப்பட்டார். இப்போது ஒரு விபத்து. அவர்கள் வீடு தீப்பற்றி எரிந்தது. அப்பாவின் கனவும் தீயில் கருகியது.

வாட்சன் சம்பாதிக்கவேண்டிய கட்டாயம். அப்பா தனக்குத் தெரிந்த ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தந்தார். ஒரே நாளில், போதுமடா சாமி என்று வேலையை வாட்சன் விட்டார். அடுத்து அக்கவுண்டிங் வகுப்பில் சேர்த்துவிட்டார். படிப்பை முடித்த வாட்சன் மளிகைக் கடையில் கணக்குப்பிள்ளையானார்.

ஒருவருடம். வேலை போரடித்தது. தையல் இயந்திரங்களும், இசைக்கருவிகளும் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மேன் ஆனார். குதிரை வண்டியில் ஊர் ஊராகப் பிரயாணம் செய்து, கடைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்கவேண்டும். புதுப்புது ஊர்களில் சுற்றுவது, பல்வகை மனிதர்களைச் சந்திப்பது என வாட்சனுக்கு ஒவ்வொரு நாளும் திருநாளாக இருந்தது. சேல்ஸ்தான் தன் வாழ்க்கையே என்று முடிவு செய்தார்.

வாட்சனிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தது. வேலை முடிந்தவுடன், தையல் இயந்திரங்களையும், இசைக்கருவிகளையும் குதிரை வண்டியில் வைத்துவிட்டு மதுக்கடைக்குள் போனார். பல குவார்ட்டர்களை உள்ளே தள்ளியபின், தள்ளாடியபடி வெளியே வந்தார். குதிரை வண்டியையும், விற்பனை பொருட்களையும் காணோம். நடந்ததைக் கம்பெனிக்கு சொன்னார். சீட்டைக் கிழித்தார்கள்.

சின்ன ஊர்களில் இந்த மாதிரி செய்திகள் காட்டுத்தீயாகப் பரவிவிடும். யார் வேலை தருவார்கள்? கசாப்புக் கடை திறந்தால் எக்கச்சக்க லாபம் வரும் என்று யாரோ சொன்னார்கள். கையிருப்புப் பணத்தையெல்லாம் போட்டுக் கடை தொடங்கினார். உடன் பிறந்த `அதிர்ஷ்டம்’ தொடர்ந்தது. நஷ்டம். கடைக்குப் பூட்டு. கடையில் நேஷனல் கேஷ் ரெஜிஸ்டர் கம்பெனியின் (சுருக்கமாக NCR) பில் போடும் இயந்திரம் இருந்தது. அதற்குக் கட்டவேண்டிய தவணை பாக்கி. வாட்சன் அவர்கள் ஆபீஸ் போனார். அப்போது மனதில் ஒரு மின்வெட்டல் நமக்கோ சேல்ஸ்மேன் வேலை பிடிக்கும், இவர்களுடைய இயந்திரங்களை விற்கும் சேல்ஸ்மேன் வேலை தரும்படி கேட்டால்......

வாட்சன் ஏதாவது வேண்டுமென்று குறி வைத்துவிட்டால் உடும்புப் பிடிதான். தினமும் NCR கம்பெனிக்கு விசிட். சேல்ஸ் மேனேஜருக்காக மணிக் கணக்காகக் கார்திருத்தல், அவரைப் பார்த்தவுடன், ‘வேலை தாருங்கள்’ என்று இரண்டு வார்த்தை உச்சாடனம். வாட்சனின் நச்சரிப்புத் தாங்காமல் வேலை கொடுத்தார்கள். ஒரே வருடத்தில், வாட்சன் விற்பனை கம்பெனி நிர்ணயித்த இலக்கைவிடப் பல மடங்கு தாண்டினார்.

NCR கம்பெனி முதலாளிக்குத் துறுதுறுப்பான வாட்சனை மிகவும் பிடித்துப்போனது. சவாலான பல பணிகள் கொடுத்தார். அனைத்திலும் நம் சிங்கக் குட்டி ஜொலித்தார். பதவி உயர்வு, அதிக ஊதியம், போனஸ் ஆகியவை தாராளமாகக் கிடைத்தன. சிறுவயது முதலே அங்கீகாரத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்த வாட்சனுக்கு இவை உற்சாக டானிக். முதலாளியை ஆதர்ஷ புருஷராக, தெய்வமாக மதித்தார். அவர் சொல்வதையெல்லாம் வேதமாக நினைத்துச் செயல்பட்டார்.

முதலாளி ஒரு நாள் வாட்சனைக் கூப்பிட்டார். ‘உனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தருகிறேன். நம் கம்பெனியின் பழைய கேஷ் ரெஜிஸ்ட்டர் மெஷின்களை வாங்கி, ரிப்பேர் செய்து, விற்பனை செய்யும் பிசினஸ் தொடங்கு’ என்று சொன்னார். வாட்சன் பிசினஸ் தொடங்கினார். முதலாளியே பிரமிக்கும் விற்பனைச் சிகரங்களைத் தொட்டார்.

சில வருடங்கள் ஓடின. வாட்சன் காலை பேப்பரை வாசிக்கத் தொடங்கினார். கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி.

`நேஷனல் கேஷ் ரெஜிஸ்ட்டர் முதலாளி கைது.’

அதிர்ச்சியோடு தொடர்ந்து படித்தார். பழைய மெஷின்களை வாங்கி, புத்துருக்கொடுத்து விற்பது, போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக முதலாளி செய்த டுபாக்கூர் வேலை. செய்தியின் கடைசிப் பத்தியில், முதலாளிக்குக் குற்றக் கூட்டாளிகளாக இருந்தவர்களின் பெயர்கள் பட்டியல். அதில் ஒருவராக வாட்சன்! வழக்கு 50 நாட்கள் நடந்தது. வாட்சனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை. முதலாளி அப்பீலுக்குப் போனார். தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள, வாட்சனையும், பிற ‘குற்றவாளிகளையும்’ வேலையிலிருந்து நீக்கினார். தான் நம்பிய முதலாளி கடவுள் அல்ல, சாத்தான் என்று வாட்சனுக்குத் தெரிந்தது. வருங்காலம் பற்றிய அவர் மனக்கோட்டைகள் அத்தனையும் தூள் தூளாகச் சிதறின.

குடிப் பழக்கத்தால் வேலை இழந்தது, சிறைத் தண்டனை, ஆகிய பின்புலங்களால், அடுத்த வேலை தருவார் யாருமில்லை. அப்போது, அமெரிக்காவில் ஃபிளின்ட் என்பவர், கம்ப்யூட்டிங், டாபுலேட்டிங் ரிக்கார்டிங் கம்பெனி (CTR) நடத்திக்கொண்டிருந்தார். கம்ப்யூட்டர்களுக்கு முன்னோடியான கணக்கு இயந்திரங்கள் தயாரித்துக்கொண்டிருந்தார். ஏகப்பட்ட நஷ்டம். மூழ்கும் கப்பலுக்கு மாலுமி தேடினார். அவருக்கு மேனேஜர் வேண்டும்; வாட்சனுக்கு வேலை வேண்டும். இருவருக்கும் வேறு நாதியில்லா நிலை. 1914. வாட்சன் ஜெனரல் மேனேஜராகச் சேர்ந்தார்.

வாட்சன் வாழ்க்கையில் வசந்தம் ஆரம்பம். வழக்கில் விடுதலை கிடைத்தது. அடுத்த 42 வருடங்கள். மரணம் வந்து தழுவுவதுவரை வாட்சன் ஐ.பி. எம், கம்பெனியை வழி நடத்தினார். கம்ப்யூட்டர் யுகம் தொடங்கிக் கொண்டிருந்த நேரம். அதை ஐ.பி.எம் - இன் யுகமாக, பொற்காலமாக மாற்றிக் காட்டினார். சில புள்ளி விவரங்கள்:

வாட்சன் எப்படிச் சாதித்தார் இதை?

தவறுகளே செய்யாதவன் வாழ்க்கையில் புதிதாக எதையுமே முயற்சித்திராதவன் என்பது வாட்சன் கொள்கை. ஊழியர்கள் தவறுகள் செய்வதை ஊக்குவித்தார். ஒரு முறை ஒரு அதிகாரியின் செயல்பாட்டால் கம்பெனிக்கு 60,000 டாலர்கள் நஷ்டமானது. மிகப் பெரிய தொகை. அந்த அதிகாரியை வேலையைவிட்டுத் துரத்துமாறு எல்லோரும் சொன்னார்கள். வாட்சனின் பதில் என்ன தெரியுமா? ‘இந்தத் தவறால் அவரும், மற்றவர்களும் கற்றுக்கொண்டுள்ள பாடம், பல 60,000 டாலர்கள் மதிப்புக் கொண்டது. அவர் வேலையில் தொடரட்டும்.’

வாட்சன் சொல்வதைச் செய்பவர்!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்