நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பொருள் ஈட்டச் செல்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு பொருள் ஈட்டச் செல்லும் போது, சிலர் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்கிறார்கள். இன்னும் சிலரோ, குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு, தாங்கள் மட்டும் செல்கிறார்கள். வெளிநாடு செல்லும் பலரும் தங்கள் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்கிறார்கள். தங்களின் ஓய்வுக் காலத்திற்காகவும் மற்றும் குழந்தைகளின் நலனிற்காகவும் இந்தியாவில் சேமிக்க/ முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இவை அனைத்திற்கும் வங்கிக் கணக்கு என்பது இன்றியமையாதது ஆகிவிடுகிறது. வங்கிக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் (PIO – Persons of Indian Origin) ஆகிய இருவரும் செயல்படுத்திக் கொள்ளலாம். வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை இந்த இருவகையினரும் ஒன்றாகவே கருதப்படுகின்றனர். இக்கணக்குகளைத் திறப்பதற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. அன்னியச் செலவாணியில் பரிமாற்றம் செய்யும் வங்கிகள் அனைத்திலும் இந்தக் கணக்குகளைத் தொடங்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென்று பொதுவாக வங்கிகள் மூன்று விதமாக கணக்குகளை செயல்படுத்துகின்றன. அவையாவன:
1.என்.ஆர்.ஓ [NRO Account – Non-Resident Ordinary Rupee Account]
2.என்.ஆர்.ஈ [NRE Account – Non-Resident (External) Rupee Account]
3.எஃப்.சி.என்.ஆர் (பி) [FCNR (B) Account – Foreign Currency Non-Resident (Bank) Account].
ஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசிக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்கும் சேமிப்புக் கணக்கை, தான் வெளிநாடுவாழ் இந்தியர் ஆகிவிட்டதை குறிப்பிட்டு, என்.ஆர்.ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். இனி வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கணக்கைத் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1.பாஸ்போர்ட்
2.விசா
3.பான் கார்டு
4.வெளிநாடு மற்றும் உள்நாட்டு முகவரிக்கான ஆதாரம்
5.பாஸ்போர்ட் சைஸ் போஃட்டோ
6.முதல் சேமிப்பிற்கான காசோலை
பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களை இதுபோன்ற கணக்குகளைத் தொடங்குவதற்கு நேரடியாக வரச் சொல்கின்றன. ஆகவே அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் முன்போ அல்லது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும்பொழுதோ இக்கணக்குகளைத் தொடங்கிக்கொள்ளலாம். சில வங்கிகள் வெளிநாட்டில் இருந்தவாறே கணக்குகளைத் தொடங்குவதற்கும் வழிவகை செய்து தருகின்றன.
இனி நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான கணக்குகளுக்கான குணாதிசியங்களை கீழே காண்போம்.
என்.ஆர்.ஓ (NRO) (நான் ரெசிடண்ட் ஆர்டினரி – NON-RESIDENT ORDINARY)
இந்த வகையான சேமிப்பு கணக்கினை வங்கிகளில் அல்லது அஞ்சலகங்களில் திறந்து கொள்ளலாம். என்.ஆர்.ஓ அடிப்படையில் கீழ்க்கண்ட வகையான பிற கணக்குகளையும் திறந்து கொள்ளலாம்: நடப்புக் கணக்கு, டெப்பாஸிட் கணக்கு, ரெக்கரிங் டெப்பாஸிட் கணக்கு. வங்கிகள் தங்கள் விருப்பம் போல இந்தக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை அளிக்கலாம். ஆனால் என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டுகளுக்கு கொடுக்கப்படும் வட்டி, உள்நாட்டு டெப்பாஸிட்டிற்கு கொடுக்கப்படும் வட்டியைவிட அதிகமாக இருத்தல் கூடாது.
இந்தக் கணக்கினில், வெளிநாடு வாழ் இந்தியர் வெளிநாட்டிலிருந்தோ அல்லது உள்நாட்டிலோ பணத்தைச் செலுத்தலாம். அவர்கள் பெயரில் இந்தியாவில் கிடைக்கும் வீட்டு வாடகை, டிவிடெண்ட் மற்றும் பிற வருமானங்களை இந்த கணக்கில் செலுத்தலாம். இந்த கணக்கில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்பம் போல காசோலை கொடுக்கலாம். ஆனால் இக்கணக்கிலிருந்து என்.ஆர்.ஈ (NRE) கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியாது. என்.ஆர்.ஓ கணக்கிலிருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். மூலத்தில் வரி பிடித்தமும் (TDS – Tax Deduction at Source) இவ்விதமான கணக்குகளுக்கு உண்டு. இந்தக் கணக்கு இந்திய ரூபாயில்தான் இருக்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு வரும்பொழுது, வெளிநாடுகளில் இருந்து தாங்கள் கொண்டுவந்த டிராவலர் செக், கரன்சி நோட்டுகள் போன்றவற்றை இந்தக் கணக்கினில் டெப்பாஸிட் செய்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் உள்ள பணத்தை (சொத்துவிற்ற பணம் உட்பட) வருமான வரி விதிமுறைகளுக்கு உள்பட்டு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இன்றைய மதிப்பில் ரூ 6.10 கோடி) வரை தாங்கள் வசிக்கும் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதியும் இந்த கணக்குகளில் உள்ளது.
என்.ஆர்.ஓ கணக்கினை வெளிநாட்டில் வசிக்கும் அல்லது இந்தியாவில் வசிக்கும் மற்றொருவருடன் இணைந்து வைத்துக் கொள்ளலாம். நாமினியை பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டினை அடமானம் வைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ வங்கிகள் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது.
சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago