அமெரிக்க நடவடிக்கை இந்தியாவை பாதிக்காது - ரகுராம் ராஜன்

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் மானியக் குறைப்பு நடவடிக்கை இந்தியாவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் மானியக் குறைப்பு குறித்த அறிவிப்பை ஃபெடரல் ரிசர்வ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் அரையாண்டு பொருளாதார அறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டு ரகுராம் ராஜன் மேலும் கூறியது: இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் வங்கிகளின் செயல்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது. வாராக் கடனுக்கு மேலும் கடன் தருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைந்துள்ளது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகள். எனவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மானியக் குறைப்பு நடவடிக்கைகள் இந்தியாவை பாதிக்காது. மேலும் அவ்விதம் நமது பொருளாதாரத்தை பாதிக்குமேயானால் அது மிகக் குறுகிய காலமே நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.

இப்போதைய கணக்குப்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 3 சதவீதத்துக்கும் கீழாக இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அளவானது நம்மால் சமாளிக்கக்கூடிய அளவாகும். நம்மிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு இதை சமாளிக்கலாம் என்றார். டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 29,500 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளின் செயல்பாடு ஜூன் 2013-க்குப் பிறகு மிகவும் அபாயகரமானதாக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ஜனவரி மாதத்திலிருந்து 8,500 கோடி டாலருக்கான கடன் பத்திரங்களை திரும்பப் பெறுவது என முடிவு செய்துள்ளது.

நாட்டில் இப்போதுள்ள அதிக பண வீக்கம் காரணமாக கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பில்லை என்று அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள ராஜன், நமது பொருளாதாரம் மீட்சியடைவதற்கான வாய்ப்புகள் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி அதிகரிப்பதற்கான சமிக்ஞைகள் தோன்றுவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் பொருளாதார வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். பணவீக்கத்தைக கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையே சிறந்த வழியாக உள்ளது என்று தெரிவித்தார்.

பணவீக்கம் அடிப்படையிலான ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 7.52 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது. கடந்த 14 மாதங்களில் இது அதிகபட்ச அளவாகும். நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 9 மாதங்களில் இல்லாத அளவாக 11.24 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.

வங்கிகளின் வாராக் கடன் குறித்து கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன் இப்போதைய சூழலில் வாராக் கடன் அளவு 2014 செப்டம்பரில் 4.6 சதவீத அளவுக்கு உயரும் என்று குறிப்பிட்டார். 2013 செப்டம்பரில் இது 4.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு ரூ. 167 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது ரூ. 229 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது என்று குறிப்பிட்டார்.

மறுகடன் மாற்றியமைப்பு தொகை அதிகபட்சமாக ரூ. 400 லட்சம் கோடியாக உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு 4.5 சதவீத அளவுக்குக் குறையும் என்றும் ஒரு வேளை பொருளாதார நிலைமை மோசமடைந்தால் இது 7 சதவீத அளவுக்கு உயரும் என்றும் ராஜன் தெரிவித்தார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 68.85 என்ற நிலையில் இருந்தது. இதைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு கடன் திரட்டியது. இதன் மூலம் 3,400 கோடி டாலர் திரட்டப்பட்டது.எதிர்வரும் தேர்தலில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டால் அது முதலீடுகளை பாதிக்கும் என்றும் ராஜன் எச்சரிக்கை விடுத்தார். தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் என்றும் சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் இக்கருத்தை ராஜன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்