சேவை வரி கட்டாதவர்கள் மீது நடவடிக்கை: ப.சிதம்பரம் எச்சரிக்கை
தானாக முன்வந்து வரி செலுத்துவது தொடர்பாக வணிகம் மற்றும் தொழிற்சாலை, சேவைத் தொழிலில் உள்ள அமைப்புகளுக்கான கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம், சென்னையில் சனிக்கிழமை நடந்தது.
இதில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: இந்தியாவில் சேவை வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ரியல் எஸ்டேட், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாடகைக்கு விடுவோர், கன்சல்டன்சி நிறுவனங்கள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் தொழில் நிறுவனங்கள், கனிம வணிகத்தினர், தகவல் தொழில்நுட்பத் துறையினர், விளம்பர நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலுள்ள நிறுவனங்கள் ஆகியோர் சேவை வரி செலுத்தாமல் உள்ளனர்.
நீண்டகாலமாக, மிக அதிக அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளோரின் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, வரி ஏய்ப்பாளர்கள் விவரம் அரசிடம் இல்லை என்று நினைக்க வேண்டாம். வரி ஏய்ப்பாளர்களை, மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்.
ஏற்கனவே, சேவை வரி ஏய்ப்பு தொடர்பாக 10 பேர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் அரசுக்குக் கட்ட வேண்டிய ரூ.50 லட்சம் அளவிலான வரித் தொகையை, வட்டியில்லாத கடன் போல வைத்திருந்தனர். நாட்டில் 17 லட்சம் பேர் தங்களது சேவை வரி குறித்த விவரங்களை, அரசிடம் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், அதில் ஏழு லட்சம் பேர் மட்டுமே வரியை செலுத்தினர். தற்போது வரி ஏய்ப்பாளர்களுக்கு சிறந்த நியாயமான வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. தானாக முன்வந்து வரி பாக்கியை கட்டிவிட்டால், அவர்களிடம் அபராதமோ, வட்டியோ வசூலிக்கப்படாது. அவர்களது பழைய கணக்குகளும் முடித்து வைக்கப்படும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.