இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

தேடிப்போய் கிடைத்த புதையலை விட தானாகத் தட்டுப்பட்டு கிடைத்த பொக்கிஷங்கள் எனக்கு அதிகம். உடனடி குறிக்கோள்கள் இல்லாமல் செய்த வாசிப்புகள் பிற்காலத்தில் என் குறிக்கோள்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருக்கின்றன. அப்படி கிடைத்ததுதான் “What if” உத்தி. இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? இதுதான் படைப்பாற்றல் திறன் பயிற்சியில் பிற்காலத்தில் பெரிதும் உபயோகிப்பேன் என்று தெரியாமல் கற்ற உத்தி.

எழுத்தாளர் சுஜாதாவின் “திரைக்கதை எழுதுவது எப்படி” புத்தகத்தில் போகிற போக்கில் இந்த பெரிய விஷயத்தை அவருக்கே உள்ள லாவகத்தில் தொட்டுச் செல்கிறார். ஒரு நல்ல சினிமா ஒரு What if ல் துவங்குகிறது என்கிறார். இது இல்லாவிட்டால் அந்த சினிமா பிழைப்பது சிரமம் என்று விளக்குகிறார். மணிரத்னம், ஷங்கர் படங்களில் இது தவறாது இருக்கிறது என்கிறார். யோசிக்கையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் கதைகள் அனைத்தும் இந்த வாட் இஃப் இருப்பது தெரிகிறது.

கதைக்குப் பொருந்தும் இந்த உத்தி எல்லா படைப்புப் பணிகளுக்கும் பொருந்தும். ஒரு புதிய ஐடியா வேண்டுமா, ஒரு வாட் இஃப் யோசியுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இது வலிமையானது.

தர்க்க சிந்தனையில்லாமல் “இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?” என்று கற்பனை செய்வது குழந்தை மனதின் செயல்பாடு. அதுதான் வாட் இஃப் உத்தி.

முதலில் சில சினிமாக் கதைகள் உதாரணங்கள் பார்க்கலாம்.

ஒரு சாமானியன் ஒரு நாள் மட்டும் முதல் அமைச்சராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?- முதல்வன்.

ஒரு மனித வெடி குண்டுப் பெண் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டவனை காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?- உயிரே.

ஒரு டைனோசார் பல நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி உயிர்பெற்று வந்தால் எப்படி இருக்கும்?- தி ஜுராசிக் பார்க்.

இவை அனைத்தும் தர்க்கரீதியாக சாத்தியம் குறைவான நிகழ்வுகள். விவாதம் செய்தால் விஷயம் நிற்காது. ஆனால் ஒரு கற்பனைக்கு இப்படி நடந்தால் என நினைக்கும் போது ஒரு கதை பிறக்கிறது.

இதையே வாழ்க்கையின் புதிய படைப்புகளிலும் பார்க்கலாம். மிருகங்கள் சண்டையிடுதல் போல மனிதர்கள் சண்டையிட்டால் எப்படி இருக்கும்? அப்படி பிறந்ததுதான் தற்காப்பு கலைகளும்.

ஒவ்வொரு கண்டுபிடிப்புமே ஒரு வாட் இஃப் முயற்சி தான்.

மனிதன் பறக்க எப்படி இருக்கும்? விமானம்.

உடலுக்குத் தேவையான மருந்தை ரத்தக்குழாயில் நேரடியாக செலுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? ஊசி.

கூரை மேல் கூரை வைத்து வீடு கட்டினால் எப்படி இருக்கும்? கான்கிரீட்.

நாம் தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதற்கு பதில் அயர்ன் பாக்ஸிலிருந்தே தண்ணீர் வந்தால் எப்படி இருக்கும்? தண்ணீர் தெளிப்பானுடன் அயர்ன் பாக்ஸ் மாடல்.

கிரிக்கெட்டை பொழுபோக்கு சார்ந்த வியாபாரம் ஆக்கினால் எப்படி இருக்கும்? 20-20.

வங்கிக்கு போய் பணம் எடுப்பதற்கு பதில் வங்கியே வீட்டருகே வந்து பணம் தந்தால் எப்படி இருக்கும்? ஏ.டி.எம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு நிறுவனமும் வாட் இஃப் உத்தியைத் தன் பணியாளர்களுக்குக் கற்றுத்தந்து, அதை நடைமுறையில் பயன்படுத்தினால், நம்ப முடியாத அளவு முன்னேற்றம் கிட்டும்.

ஒரு வினோதமான விஷயம் கம்பெனிகளின் பயிற்சி தலைப்புகளில் பார்க்கலாம். படைப்புத்திறன் பயிற்சிகள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அடிமட்ட தொழிலாளிகளுக்கு இது வழங்கப்படுவது மிகக் குறைவு. ஆனால் என் பார்வையில் கையால் வேலை செய்கிறவர்கள் அனைவருக்கும் கற்பனைத்திறன் அதிகம். மிக விரைவில் கற்று உடனே பணியில் காட்டும் உத்வேகம் தொழிலாளிகளுக்குத் தான் அதிகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு அறிவுரைகள் நிரம்பிய வாழ்க்கைத் தரம், குழு மனப்பான்மை என்றுதான் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிந்தனைத்திறன்கள் மற்றும் கற்பனைத் திறன்கள் சார்ந்த பயிற்சிகள் அவர்களை தங்கள் வேலையில் பெரும் உற்பத்தித்திறன் காட்ட வழி வகுக்கும். ஆக்க சக்தி தரும் சாதனை உணர்வும் ஆரோக்கிய மன நிலையும் தொழிலாளர்களின் பணி வாழ்விற்கும் நிறுவன அமைதிக்கும் வழி வகுக்கும்.

இருந்தும் இது போன்ற பயிற்சிகளை உயர்நிலை மேலாளர்களுக்குத்தான் தொடந்து மேற்கொள்ள நேர்கிறது.

ஆனால் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் எல்லாம் தொழிலாளர்களுக்கு புரியாது என்று வைத்திருக்கும் பல விஷயங்களை அவர்களிடம் கடத்தியிருக்கிறேன். பிரமிக்கத் தகுந்த புது சிந்தனைகளை அங்கு எதிகொண்டிருக்கிறேன்.

தொழிலாளர்களுக்கு இணையான கிரகிப்பு சக்தியும் ஆர்வமும் கொண்ட இன்னொரு பிரிவினர் மாணவர்கள். ஆனால் அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கவே விடக்கூடாது என்று இங்கு ஒரு அமைப்பு ரீதியான சதி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கற்பனை சக்தியை முதல் 20 ஆண்டுகள் மழுங்கடித்து விட்டு பின்னர் அவர்களை “லாயக்கில்லை” என்று குறை கூறுகிறோம்.

இந்த வாட் இஃப் போன்ற படைப்புத்திறன் பயிற்சிகளை வளரும் பருவத்தில் விதைத்து விட வேண்டும். அவர்கள் அதை வாழ்க்கை முழுவதும் அறுவடை செய்து கொள்வார்கள்.

இதுபோல பல சுலப வழி சிந்தனை உத்திகள் உள்ளன. இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று எந்த பிரச்சினைக்கும் கையைப் பிசைய வேண்டாம். 3எம் போன்ற நிறுவனங்கள் பணி நேரத்தின் 10% புது எண்ணங்களை / புது சோதனைகளை உருவாக்க செலவிட தங்கள் பணியாளர்களை ஊக்குவிக்கிறது. இதனால்தான் இன்னொவேஷன் என்றாலே 3எம் என்று சொல்லும் அளவிற்கு உலக அளவில் வளர்ந்து நிற்கிறது.

பல நிறுவனங்களில் பிரச்சினைகளுக்கு தொழிலாளிகளிடம் தீர்வு கேட்பதில்லை. அதையும் தாண்டி புது ஐடியாக்கள் வந்தால் அதை சுட்டுத் தள்ளுவார்கள்.

புது ஐடியாவை சுட்டு வீழ்த்துவது எப்படி (அட, புத்தகத் தலைப்பு ரெடி!). இப்படித்தான்:

இதையெல்லாம் நாங்க எப்பவோ செஞ்சு பாத்துட்டோம். வேலைக்கு ஆகாது.

நல்ல ஐடியா. பிராக்டிகலா முடியுமான்னு தெரியலை.

இருப்பதே நல்லாதானே இருக்கு. எதுக்கு புதுசா?

இதுக்கு பட்ஜட் இருக்கா?

இதுக்கு ஒரு கமிட்டி போட்டு ஆராயலாம்.

நல்லா இருக்கு. நம்ம ஜனங்க ஒத்துக்க மாட்டாங்க!

ஓகே... ஆனால்..

“ஆஹா...நம்ம கம்பெனி கதை மாதிரி இருக்கேன்னு.. நம்ம பாஸ் பேசற மாதிரியே இருக்கே”ன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இது எல்லா பணியிடங்களுக்கும் பொருந்தும். எல்லா இடங்களிலும் பல நக்கீரர்கள் பாட்டில் பிழை கண்டு பிடிப்பதையே முழு நேர வேலையாக செய்து வருகிறார்கள்.

மாற்றத்தின் முதல் முகமாக உங்கள் மகளையோ, மாணவனையோ, பணியாளரையோ அழைத்து, “இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?” என்று வாட் இஃப் விளையாட்டை ஆரம்பியுங்கள்.

மாற்றம் வரும்!

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்