23 வருடங்களுக்கு மேலாக ஐசிஐசிஐ வங்கியின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர் என்.எஸ்.கண்ணன். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, மும்பை பாந்திரா குர்லா காம்பிளக்ஸில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தின் 10-வது மாடியில் இருக்கும் அவரது அறையில் சந்தித்தோம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல முறை இவர் பேசி இருந்தாலும் மீடியா ஒன்றுக்கு அளிக்கும் முதல் பிரத்யேக பேட்டி இதுவாகும். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த உரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே...
புதுக்கோட்டையில் பிறந்தவர். 10-ம் வகுப்பு வரைக்கும் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்து ஸ்ரீராம் பைபர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அங்கு அவரது உயரதிகாரிகளிடம் பேசும் போது நிர்வாகவியல் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஐஐஎம் பெங்களூருவில் இணைந்தார். முடித்தவுடன் ஐசிஐசிஐ வங்கியின் கடன் கொடுக்கும் பிரிவில் இணைந்தார். ஐசிஐசிஐ புரு லைப் இன்ஷூரன்ஸ் சி. இ.ஓ., ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
ஏ.டி.எம் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டது எதனால்?
வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சேவை கொடுக்க வேண்டும் என்பதால்தான் ஏ.டி.எம். கொண்டுவரப்பட்டது. ஆனாலும் ஏ.டி.எம். பராமரிப்பதற்கும் கட்டணம் இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் மொபைல், நெட்பேங்கிங், நேரடியாக வங்கிக்கு செல்ல முடியும் என பல வாய்ப்புகள் இன்னும் இருக்கிறது.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிக்கு பணம் செலவாகிறது. அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது பணம் செலுத்தப்போகிறார்கள்.
தவிர ஐசிஐசிஐ வங்கி இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க வில்லை. இப்போதைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் இல்லை.
வங்கிகளின் இதர வருமானமும், நிகர லாபமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது? அதனால் நிகர லாபத்தை அதிகரிக்கத்தான் இதுபோன்ற இதர கட்டணங்களை வங்கிகள் அதிகரிக்கின்றனவா?
இதர வருமானத்தில் பல வகைகள் இருக்கிறது. கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம். இதில் கிரெடிட் கார்டு கட்டணம், ஏடிஎம் கார்டு கட்டணம், கார்ப்பரேட்களுக்கு கடன் கொடுக்கும் போது விதிக்கப்படும் கட்டணம் என பல வகைகள் இருக்கிறது. அரசாங்க பத்திரங்களில் முதலீடு/வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம்.
அடுத்தது எங்களுடைய துணை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானம். உதாரணத்துக்கு ஐசிஐசிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு காலாண்டுக்கு 200 கோடி ரூபாய் டிவிடெண்ட் கொடுக்கிறார்கள். இவை அனைத்தும் சேர்த்ததுதான் இதர வருமானம். மொத்த இதர வருமானத்தில் ரீடெய்ல் பிரிவில் கிடைக்கும் வருமானம் 15%தான். ரீடெய்ல் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிப்பதன் மூலம் இதர வருமானத்தை அதிகரிக்க முடியாது.
தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக்கடன் அதிகமாக இருக்கிறதே? வருங்காலம் எப்படி இருக்கும்?
சிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட் டிருக்கும் கடன்களில் சிக்கல் இருக் கிறது. முன்பு இருந்ததை விட இப்போது நிலைமை பரவாயில்லை. இப்போதுதான் பொருளாதாரம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், பொருளாதாரத்தில் பிரதிபலிக்க சில காலம் ஆகலாம். அதுவரை கடன்களை மறுசீரமைப்பு செய்வது இருந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் இரண்டு மூன்று காலாண்டுகளுக்கு பிறகுதான் எதிர்காலத்தை பற்றி சொல்லமுடியும்.
எந்த துறை வாராக்கடன்கள் அதிகமாக இருக்கிறது?
ஏற்கெனவே சொன்னதுபோல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பிரச்சினையில் இருக்கிறது. அடுத்து கட்டுமான துறை கடன்கள். அதாவது தொழிற்சாலை, பாலம் என கட்டுமானத்துறை திட்டங்களில் சிக்கல் இருக்கிறது.
முன்னுரிமை கடன்களை ஐசிஐசிஐ சரியாக கொடுக்கின்றதா?
மொத்த கடன்களில் 40 சதவீதம் கொடுத்தால் போதும். ஆனால் கடந்த வருடம் ஐசிஐசிஐ 43% வரை கொடுத்தது. நடப்பாண்டில் செப்டம்பரில் 35% வரை கொடுத்திருக்கிறோம்.
துறைவாரியாக எப்படி கொடுத்திருக்கிறீர்கள்?
விவசாயத்துறைக்கு 18 சதவீதம் வரை நேரடியாக கடன் கொடுக்க வேண்டும். ஆனால் நேரடியாக 10 சதவீத (கடந்த நிதி ஆண்டில்) அளவிலே கொடுத்துவருகிறோம். ஆனால் இந்த விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இருக்கிறோம். இதற்காக தனியாக 10000 நபர்கள் வேலை செய்கிறார்கள். மேலும் 1.9 கோடி நோ பிரில்ஸ் (அடிப்படை வசதி இருக்கும் கணக்கு) வங்கி கணக்குகள் இருக்கின்றன. தனியார் வங்கிகளில் அதிக நோ பிரில்ஸ் கணக்கு கொடுத்திருப்பது நாங்கள்தான். இருந்தாலும் இது போதும் என்று சொல்லவில்லை. இது முதல் படிதான். இந்த பிரிவில் நாங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம்.
சந்தை மதிப்பில் 2005-ம் ஆண்டு முதல் இடத்தில் இருந்தீர்கள். ஆனால் இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள்?
நாங்கள் லாபவரம்பு செயல்பாட்டை மட்டுமே தீர்மானிக்க முடியுமே தவிர, சந்தை மதிப்பை தீர்மானிப்பது பங்குதாரர்கள்தான். ஆனால் ஒரு வங்கிக்கு சந்தை மதிப்பில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பது இலக்காக இருக்க முடியாது. நாங்கள் செய்ய முடிவதெல்லாம் ரிஸ்கினை குறைத்து, லாப வரம்பை அதிகரிப்பது மட்டுமே.
2007-ம் ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கி aggressiveவாக இயங்கியது. ஆனால் இப்போது சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப இருந்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டீர்களா?
நீங்கள் aggressive என்று சொல்லுகிறீர்கள், நான் speed and dynamic என்று சொல்லுவேன். ஆனாலும் நீங்கள் சொல்வதை மதிக்கிறேன்.
பேங்க் ஆப் ராஜஸ்தான், பேங்க் ஆப் மதுரா ஆகிய வங்கிகளை இணைத்தீர்கள்? வேறு வங்கிகளை இணைக்கும் திட்டம் இருக்கிறதா?
பேங்க் ஆப் ராஜஸ்தானில் 450க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் கிடைத்தது. அதனால் இணைத்தோம். இப்போது
இதே அளவுக்கு வங்கி கிளைகளை ஒரு வருடத்தில் நாங்கள் திறந்துகொண் டிருக்கிறோம். ஆனாலும் வங்கிகளை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இருந்தாலும் இப்போதைக்கு வங்கி இணைப்பு குறித்து யாரிடமும் பேசவில்லை. ஆனால் எதிர்காலத்தை பற்றி இப்போது சொல்ல முடியாது.
சர்வதேச அளவில் வங்கி கிளைகள் திறக்க காரணம் என்ன?
முதலாவது இந்தியர்கள் இங்கிருந்து வெளிநாடுக்கு வேலைக்கு, படிக்க செல்கிறார்கள். அதேபோல இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் நிறுவனத்தை வாங்குகிறார்கள். அதனால் இந்தியர்களை பின் தொடரவேண்டும் என்று வெளிநாடுகளில் வங்கி கிளைகளை திறக்கிறோம். ஆனால் இப்போது வெளிநாடுகளில் திரட்டப்படும் தொகையை அங்கேயே முதலீடு செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதனால் இப்போது வெளிநாடுகளில் வங்கி கிளைகள் திறப்பதை குறைத்துவிட்டோம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு கடன் வளர்ச்சி விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் இருந்தது. ஆனால் இப்போது 11 சதவீதத்துக்கு வந்துவிட்டதே?
இந்தியாவின் ஜிடிபியை விட 2.5 மடங்கு கடன் வளர்ச்சி விகிதம் இருக்கும். இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறது. அடுத்த வருடம் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 15 சதவீத அளவுக்கு இருக்கும். இதைவிட 2 சதவீத அளவுக்கு நாங்கள் இருப்போம்.
ரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) குறைக்க வேண்டும் என்று ஒரு வருடத்துக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சி.ஆர்.ஆர்.-யை குறைக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எஸ்.எல்.ஆர் விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன்.
வட்டி விகித குறைப்பு எப்போது இருக்கும்?
பணவீக்கத்தில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி இருப்பதால் இப்போதைக்கு வட்டி குறைப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. அதே சமயம் அதிகரிப்பும் இருக்காது.
ஐசிஐசிஐ குழும நிறுவனங்களை பட்டியலிடும் வாய்ப்பு இருக்கிறதா?
ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஐசிஐசிஐ புருடென்சியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்படலாம். இதில் ஐசிஐசிஐ வசம் 74 சதவீதமும் புருடென்சியல் வசம் 26 சதவீதமும் இருக்கிறது. இன்ஷூரன்ஸ் துறையில் எப்டிஐ 49 சதவீதம் உயர்த்தப்பட்டால், புருடென்சியல் நிறுவனத்துக்கு 23% பங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் இருவரும் முடிவு செய்தால் பட்டியல் செய்வோம். ஆனால் மசோதா எப்படி வரும் என்பதை பொறுத்து இருக்கும்.
வாசு கார்த்தி - தொடர்புக்கு karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago