இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர், மைக்ரோகிராம் நிறுவனத்தின் தலைவர், எக்ஸ்பினிட்டி வென்ச்சர் ஃபண்டின் நிறுவனர்களில் ஒருவர் என பாலகிருஷ்ணனிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பெங்களூருவில் இருக்கும் அவரது வீட்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்ஃபோசிஸ் வாழ்க்கை, வரவிருக்கும் தேர்தல்கள் என நிறைய விஷயங்கள் அவரிடம் பேச முடிந்தது. நந்தன் நிலகேணியின் சகாவிடம் நிகழ்த்திய உரையாடலிலிருந்து….
உங்கள் ஆரம்பகால வாழ்க்கை குறித்து?
நான் பிறந்தது வேலூரில். பள்ளிப் படிப்பும் வேலூரில்தான். சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கணிதம் படித்தேன். அதன் பிறகு சி.ஏ. படிப்பதற்காக பெங்களூரு வந்தேன். சி.ஏ. முடித்த பிறகு cost accounting மற்றும் company secretary முடித்து லிப்டன் இந்தியா நிறுவனத்தில் 3 வருடங்கள் பணியாற்றினேன். அதன் பிறகு ஆம்கோ பேட்டரீஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் பணி புரிந்தேன். 1991-ம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன்.
பெரிய நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, வளர்ந்து வரும்(அப்போது) ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் ஏன் சேர்ந்தீர்கள்?
நான் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது 250 பேர் மட்டுமே வேலை செய்தார்கள். அப்போது சாப்ட்வேர் வளர்ந்து வரக்கூடிய புதிய துறை, மேலும் சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் போது வேகமாக வளர முடியும். இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடும் சமயத்தில் என்னைக் கூப்பிட்டார்கள்..
என்ன பதவியில் வேலைக்குச் சேர்ந்தீர்கள்?
இப்போது போல சி.இ.ஓ., சி.எஃப்.ஓ. பதவிகள் அப்போது இந்தியாவில் கிடையாது. அப்போது நிர்வாக இயக்குநர், நிதி பிரிவு தலைவர் என்ற பதவிகள்தான் இருந்தன. நான் சீனியர் அக்கவுன்ட்ஸ் அலுவலராக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது பல விஷயங்களை நாங்கள் செய்தோம். முதலீட்டாளர்களுக்கு வெறும் பேலன்ஸ் ஷீட் மட்டும் கொடுக்காமல், அதில் கம்பெனியை பற்றிய பல விஷயங்களைச் சேர்த்தோம்.
குறிப்பாக பிராண்ட் மதிப்பு, பணியாளர்களின் மதிப்பு உள்ளிட்டவைகளையும் சேர்த்தோம். அப்போது இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிதி நிலைமையை வெளியிட்டால் போதும், ஆனால் நாங்கள் அமெரிக்க முறைப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிதிநிலை முடிவுகளை அறிவித்தோம். நாளடைவில் இந்தியாவில் அந்த முறை கட்டாயம் ஆக்கப்பட்டது.
22 வருடங்களுக்கு மேலாக இன்ஃபோஸில் இருக்கக் காரணம் என்ன?
இன்ஃபோஸிஸ் நிறுவனம் நேர்மையான வழிகளில் செயல்படும் நிறுவனம். மேலும் வளத்தை பணியாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிறுவனம். இந்திய நடுத்தர மக்களின் கனவாக இன்ஃபோசிஸ் இருந்தது. அது இன்ஃபோஸிஸ் பங்குகள் வாங்குவதாக இருக்கலாம், இன்ஃபோஸிஸில் பணி புரிவதாக இருக்கலாம். அல்லது இன்ஃபோஸிசில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியமாக இருக்காலம். அமெரிக் காவில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் என இங்கு தொடர்ந்ததற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
22 வருடங்கள் வேலை செய்தாகிவிட்டது. தலைமை நிதி அதிகாரியாக இருந்தீர்கள். இயக்குநர் குழுவிலும் இணைந்தீர்கள். அடுத்த சி.இ.ஓ. நீங்கள்தான் என்ற கணிப்புகள் இருக்கும்போது ஏன் திடீரென விலகினீர்கள்?
2011-ம் ஆண்டு அக்டோபரில் சி.எஃப்.ஓ. பதவியிலிருந்து விலகிக்கொண்டேன். அதன் பிறகு பி.பி.ஓ. பினாக்கிள் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பல பிஸினஸ்களை கவனித்துக்கொண்டேன். அப்போதே இன்ஃபோஸிஸ் தாண்டி வெளியே எதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் மூர்த்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். சரியான நேரத்துக்கு காத்திருந்தேன். இதைவிடவும் சி.இ.ஓ. பொறுப்பு எனக்கு வேண்டாம் என்று ஏற்கெனவே முடிவெடுத்திருந்தேன்.
ஆனால் நீங்கள் கம்பெனியை விட்டு வெளியேறும் வரையில் சி.இ.ஓ. பதவி வேண்டாம் என்பது போல நீங்கள் எங்கேயும் தெரிவிக்கவில்லையே? நீங்கள் வெளியேறும்போது ஏன் சி.இ.ஓ. பதவிக்கு தகுதியான நபர் வெளியேறினார் என்றுதான் வெளியே இருக்கும் நாங்கள் நினைத்தோம்
வெளி உலத்துக்கு தெரிவிக்க வில்லையே தவிர, சீனியர் மேனேஜ்மெண்டில் இருக்கும் சிலருக்கு என்னுடைய முடிவு தெரியும். மூர்த்தியிடம் கூட இதை பற்றி விவாதித்திருக்கிறேன்.
வெளியேறிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுத்திருந்தீர்களா?
அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களுடன் வேலை செய்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். இதற்காக எக்ஸ்பினிட்டி என்ற ஃபண்டை ஐ.டி துறையில் இருக்கும் முக்கியமான நபர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். ஒவ்வொரு வருடமும் பெங்களூரூவில் 1,000க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் ஆரம்பிக்கிறார்கள். அதில் சில ஐடியாக்கள் நன்றாக இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு பணம் கிடைக்கிறது. நாங்கள் அதை தாண்டியும் ஐ.டி. துறைக்குத் தேவையான அறிவையும் கொடுக்க முடியும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் இந்த ஃபண்டை ஆரம்பித்தோம். அடுத்த கூகுள் இந்தியாவில் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் என் எண்ணம். இதை அடுத்து மைக்ரோகிராம் என்ற மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனத்தில் தலைவராக இருக்கிறேன்.
நாராயணமூர்த்தி இன்ஃபோஸிஸ்க்கு திரும்பி வந்த பிறகு, மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட அவர் எடுக்கும் நடவடிக்கையால்தான் டாப் மேனேஜ்மெண்ட் ஆட்கள் வெளியேறுகிறார்கள் என்று எங்களை போல வெளியே இருக்கும் மக்களுக்குத் தோன்றுகிறதே?
நான் வெளியே வந்ததற்கு எனக்கு காரணம் இருந்தது. நான் 2011-ம் ஆண்டு அக்டோபரிலேயே வெளியேறும் முடிவை எடுத்துவிட்டேன். மூர்த்தி வந்ததால் சில காலம் தொடர வேண்டியதாக இருந்தது.
மேலும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெளியே தெரியும் காரணம் ஒன்றாக இருக்கலாம். உண்மை வேறாக இருக்கலாம். நீங்கள் தனித்தனியாக இருக்கும் புள்ளிகளை இணைத்து, வேறு புதிய விஷயத்தை உருவாக்க முயல்கிறீர்கள். சிலருக்கு புதிய தலைமைக்கு பொருந்திபோகாமல் இருந்திருக்கலாம். சிலருக்கு நல்ல புதிய வாய்ப்புகள் கிடைத்தது. இதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.
அதே சமயம் மூர்த்தி திரும்ப வந்தது இன்ஃபோஸிஸுக்கு நல்லது. மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டும் என்றால் முதலீட்டாளர் களுக்கு நம்பிக்கை வர வேண்டும், பணியாளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். பொருளாதாரம் மீண்டும் வரும்போது இன்ஃபோஸிஸ் வளரும்.
இன்ஃபோஸிஸ் மேல் இருக்கும் இன்னொரு குற்றச்சாட்டு தலைமை மீதானது. ஆரம்பத்தில் நாராயண மூர்த்தி, அடுத்தது நந்தன் நிலகேனி, அடுத்து கிருஷ் கோபால கிருஷ்ணன், இப்போது சிபுலால், மீண்டும் நாராயணமூர்த்தி. புதிய ஆட்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் நிறுவனத்தை நிறுவியவர்களே தலைவராக இருந்துவந்திருக்கிறார்கள். இந்த நிலைமையில் ரோஹன் மூர்த்தியை தன்னுடைய எக்ஸிகியூட்டிவ் அஸிஸ்டெண்டாக கொண்டுவந்திருக்கிறார். இது அரசியல் கட்சி நடவடிக்கை போல இருக்கிறது. அப்போது நீங்கள் இருந்தீர்களே என்ன நடந்தது?
கம்பெனி ஆரம்பிக்கும் போதே குடும்ப உறுப்பினர்கள் யாரும் நிறுவனத்துக்குள் வரக்கூடாது என்று மூர்த்தி சில விதிமுறைகளைக் கொண்டுவந்தார். அதனால் ரோஹன் வரும்போது எங்களுக்கு (போர்டு) கொஞ்சம் அசௌகர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் ஒருபோதும் சி.இ.ஓ.வாக வரப்போவதில்லை. அவர் உதவி செய்ய மட்டுமே என்பதால், ரோஹனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இன்னமும் அந்த விதிமுறை இருக்கிறது. நிறுவனத்தை மாற்றி மேலே கொண்டுவரும் நடவடிக்கைக்கு மன ரீதியான உதவிக்குத்தான் ரோஹன் வந்தார். மேலும் ரோஹனைப் போல இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நாராணய மூர்த்திக்கு உதவி செய்ய மட்டுமே.
மூர்த்தி ஏன் திரும்பி வந்தார்?
இயக்குநர் குழுதான் மூர்த்தியை திரும்ப அழைத்தது. ஏற்கெனவே சொன்னதுபோல முதலீட்டாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்க மூர்த்தி தேவைப்பட்டார்.
கொஞ்சம் அரசியல் பேசுவோம்.
ஆம் ஆத்மியில் சேரக் காரணம்?
மற்ற அரசியல் கட்சிகளை விட ஆம் ஆத்மி வித்தியாசமான கட்சி. அரசியல் கட்சிகளுக்கு யார், எவ்வளவு நன்கொடை கொடுக்கிறார்கள் என்பது வெளியே தெரியாது. ஆனால் எங்களுக்கு இவ்வளவு போதும் என்றும் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் லஞ்சம், ஊழல் ஆரம்பிப்பதே அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நிதியில் இருந்துதான். ஆனால் ஆம் ஆத்மி அப்படி கிடையாது. இந்த கொள்கைகள் காரணமாக இன்ஃபோஸிஸில் இருந்து வெளியேறிய அடுத்த நாள் (ஜனவரி 1) ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்.
அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தால் பிஸினஸுக்கு எதிராக சூழ்நிலை இருக்கும் என்று பல நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள், நீங்கள் அர்விந்த் கேஜ்ரிவாலை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீங்கள் எதைச் செய்தாலும் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. சில நாட்களுக்கு முன்பு இந்திய தொழிலகக் கூட்டமைப்பில் (சிஐஐ) கேஜ்ரிவால் பேசினார். அப்போது ’இந்தியாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் நேர்மையாக நடக்கின்றன. சிலர் மட்டுமே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நான் பெரும்பான்மையானவர்களின் பக்கம் நிற்பேன்’ என்று தெரிவித்திருக்கிறார். நேர்மையான அரசு, மக்களுக்கு அதிக அதிகாரம், ஊழலை ஒழிப்பது இவைதான் பிஸினஸுக்கு முக்கியம்.
டெல்லியில் அவர் ஆட்சியில் இருந்த போது டெல்லி டீ கடைகளில் 20 சதவீதம் விலை குறைக்கப்பட்டது. காரணம். அந்த 20 சதவீத தொகை லஞ்சம். லஞ்சம் தான் சாதகமான பிஸினஸ் சூழ்நிலையை உருவாக்கவில்லை. மேலும், அரசு பிஸினஸிலும் ஈடுபடக் கூடாது. தனியார் துறையை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இவர் எப்படி பிஸினஸுக்கு எதிரானவராக இருக்க முடியும்.
பிஸினஸில் நேர்மையை பற்றி பேசும்போது இன்ஃபோஸிஸ் ஞாபகம் வருகிறது. இன்ஃபோஸிஸ் மீதும் அமெரிக்காவில் குற்றச்சாட்டு இருந்ததே?
இது வேறு பிரச்சினை. அமெரிக்காவில் இருக்கும் இன்ஃபோஸிஸ் பணியாளர் ஒருவர் விசா நடைமுறைகளை இன்ஃபோஸிஸ் நிறுவனம் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தினார். இதனால் அரசாங்கம் விசாரணை நடத்தியது. ஆனால் எந்த விதமான முறைகேடும் அரசாங்கத்தால் நிரூபிக்க முடியவில்லை. பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் போது, ஒரு வழக்கை நீண்ட காலம் நடத்திக்கொண்டிருக்க முடியாது. அதனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் செட்டில்மெண்ட் முடித்தோம். இது அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதுதான்.
100 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று சமீபத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். 100 தொகுதிகள் என்றால் கட்டாயம் நீங்களும் அதில் இருப்பீர்கள் என்ற கருத்து நிலவுகிறது. பெங்களூருவில் உங்களுடைய முன்னாள் சக பணியாளர் நந்தன் நிலகேணியை எதிர்த்து நிற்கப்போகிறீர்களா?
நந்தன் தெற்கு பெங்களூருவில் நிற்கபோகிறார் என்று நினைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சி நான் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுவரை நான் போட்டியிடுவதைப் பற்றி முடிவு செய்யவில்லை. ஒரு வேளை போட்டியிட்டால் கூட நந்தனை எதிர்த்து நிற்கமாட்டேன். நந்தன் ஒரு நேர்மையான நபர். அவரை எதிர்த்து போட்டியிடுவதை விட வேறு தொகுதியில் நிற்கும் பட்சத்தில் நேர்மையான நபர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.
போராளிகளுக்கு அரசாங்கத்தை நடத்த தெரியாது என்று ஆம் ஆத்மி மீது ஒரு கருத்து இருக்கிறதே அதை பற்றி?
இது மீடியா சொல்லும் கருத்து. டெல்லி மக்களின் கருத்து வேறு. இந்த 49 நாட்களில் டெல்லியில் லஞ்சம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகளைத் தண்டித்திருக்கிறார். பள்ளிகளுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். முடிந்தவரை நிறைய செய்திருக்கிறார்கள். ஜன்லோக்பால் மிகவும் முக்கியம். அதனால் பதவியை ராஜினாமா செய்தார்.
எல்லா கார்ப்பரேட்களுக்கும் புத்தகம் எழுதும் ஆசை இருக்கும்? உங்களுக்கு இருக்கிறதா?
எனக்கும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் கற்றுக் கொண்டதை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் வேலையில் இருந்ததை விட இப்போது நேரம் குறைவாக இருக்கிறது. பார்ப்போம்.
உங்களுக்கு இருக்கும் அனுபவத்தில் நீங்களே ஒரு கம்பெனியை ஆரம்பித்திருக்கலாமே?
அதற்கு இன்போஸிஸ்லேயே இருந்திருக்கலாமே. என்னுடைய ஆசை, விருப்பம் அடுத்த தலைமுறை இளைஞர்களோடு பணிபுரிய வேண்டும் என்பதுதான்.
வாசு கார்த்தி- karthikeyan.v@kslmedia.in
முக்கிய செய்திகள்
வணிகம்
34 mins ago
வணிகம்
38 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
4 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago