டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு உயர்வு

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 60 ரூபாய்க்கும் கீழாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் ஒரு டாலருக்கு ரூ. 59.92 தர வேண்டிய நிலைக்கு ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமடைந்தது.

டாலர் வரத்து அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு உயரக் காரணமாகும். கடந்த 8 மாதங்களில் ரூபாயின் மாற்று மதிப்பு 60-க்குக் கீழ் குறைந்தது இதுவே முதல் முறையாகும். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான மதிப்பு 59.68 என்ற நிலையை எட்டியது. வர்த்தகம் முடிவில் ஒரு டாலருக்கு ரூ. 59.92 தர வேண்டிய நிலை இருந்தது.

பங்குச் சந்தையில் ஏற்றம் காணப் படுவதால் அன்னிய முதலீட்டு நிறுவனங் களின் முதலீடு அதிகரித்துள்ளது. இருப் பினும் ரிசர்வ் வங்கி டாலர்களை வங்கிகள் மூலம் வாங்கியதால் ரூபாயின் மதிப்பு ஸ்திரமடைந்தது. இதன் மூலம் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நியச் செலாவணி வரத்து

மார்ச் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 290 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. மொத்த வரத்து 330 கோடி டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 75 ஆயிரம் கோடியை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. மொத்த வரத்து ரூ. 1.40 லட்சம் கோடியாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சி

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டும் கூட்டாக நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தன. அத்துடன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் துணிந்து தங்கத்தில் முதலீடு செய்தன. மேலும் பணவீக்கமும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த பங்குச் சந்தை

வளரும் நாடுகளில் இந்திய பங்குச் சந்தை சிறந்த முதலீட்டு சந்தையாகக் கருதப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இல்லை. எந்த நேரத்திலும் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக அரசு எடுத்த நடவடிக்கையின் பலன் இப்போது தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடிவு

பெரும்பாலான கருத்து கணிப்புகள் தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான அணி ஆட்சியமைக்கும் என்று தெரிவிக் கின்றன.

தொடர் எழுச்சி

பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் அதிகபட்சமாக 22363 புள்ளிகயும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் அதிகபட்சமாக 6702 யை தொட்டன. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தை 125 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை 54 புள்ளிகளும் உயர்ந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை ஏதும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதனால் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE