ஒரு காலத்தில் சிகரெட் விற்பனையில் அதிக முக்கியத்துவம் செலுத்தி வந்த ஐ.டி.சி. நிறுவனம் இப்போது தன்னுடைய இமேஜை மாற்றி, முக்கியமான எஃப்.எம்.சி.ஜி. நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. பல்வேறு வர்த்தகப் பிரிவுகளிலும் ஐ.டி.சி. கால்பதித்திருக்கிறது. இதில் அகர்பத்தி மற்றும் தீப்பெட்டி பிரிவின் சி.இ.ஓ.வான வி.எம்.ராஜசேகரனை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கார்ப்பரேட் முடிவுகள் என பல விஷயங்களை பற்றி நம்மிடம் பேசினார். அந்த பேட்டியிலிருந்து...
உங்களது சொந்த ஊர் எது? ஆரம்ப காலம் எப்படி இருந்தது?
எனது சொந்த ஊர் வேலூர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்தேன். அதன் பிறகு எம்.எம்.ரப்பர் நிறுவனத்தில் புரடெக்ஷன் பிரிவில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு புராடக்ட் டெவலப்மெண்ட் அதன் பிறகு மார்க்கெட்டிங் என்று அடுத்தடுத்த நிலைகளை அடைந்தேன். அந்த நிறுவனத்தில் சில வருடங்கள் வேலை பார்த்த பிறகு ஐ.டி.சி நிறுவனத்தின் பேக்கேஜ் மற்றும் பிரிண்டிங் பிரிவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பல கட்டங்களை தாண்டிய பிறகு அகர்பத்தி பிஸினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, 2004-ம் ஆண்டு அத்துறையில் களமிறங்கினோம். பிறகு, 2010-ம் ஆண்டு தீப்பெட்டி பிஸினஸையும் கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டேன்.
அகர்பத்தி பிஸினஸ் ஆரம்பிக்க காரணம்?
இந்த பிஸினஸுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், சிறிய நிறுவனங்கள்தான் இந்த பிஸினஸில் இருந்தார்கள். அவர்களால் ஓர் எல்லைக்கு மேல் பிஸினஸை விரிவு படுத்த முடியாது. உதாரணத்துக்கு சென்னையில் அகர்பத்தி தயாரித்தால் கூட, குறிப்பிட்ட கடைகளில்தான் அவர்களால் விற்பனை செய்ய முடியும். ஆனால் ஐ.டி.சி. நினைத்தால், இந்த பிஸினஸை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம். அந்தளவுக்கு ஐ.டி.சி.யிடம் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் இருக்கிறது. இந்த நெட்வொர்க்கை வைத்துக்கொண்டு எந்த பொருளையும் எளிதாக விற்க முடியும். அடுத்து பிராண்ட் மதிப்பு. ஐ.டி.சி. பெயரில் எந்த பொருளையும் விற்க முடியும்.
ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பல சிறிய நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டி இருக்குமே?
போட்டி இருக்கும்தான். ஆனால் ஐ.டி.சி. பிராண்ட், நாங்கள் கொடுக்கும் தரம் ஆகியவை காரணமாக இந்த போட்டியை எளிதாகச் சமாளிக்க முடியும். மேலும் இந்தியா முழுக்க ஒரே தரத்தில் எங்களால் விற்பனை செய்ய முடியும். போட்டி இருந்தாலும் இந்த பிஸினஸில் அதிக சந்தை மதிப்பை வைத்திருக்கும் நிறுவனம் ஐ.டி.சி.தான்.
உங்களுக்கு சொந்தமாக தொழிற்சாலை கிடையாது. பல சிறிய நிறுவனங்களிடம் உற்பத்தி செய்ய கொடுத்துதான் விற்பனை செய்கிறீர்கள். இதனால் உங்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினை வராதா?
நல்ல கேள்வி. ஐ.டி.சி.க்கு இந்தியா முழுக்க பல இடங்களில் சரக்குகளை வைக்கும் இடம் இருக்கிறது. அங்கு எடுத்து செல்லும்பட்சத்தில், மற்ற பொருட்களுடன் சேர்ந்து அகர்பத்தி மற்றும் தீப்பெட்டிகள் நேரடியாக இந்தியா முழுக்க இருக்கும் கடைகளுக்கு சென்றுவிடும். இதனால் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினையும் இல்லை, பெரிய செலவுகளும் இல்லை.
சந்தையில் எப்படி ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறீர்கள்?
நாங்கள் தயாரிக்கும் பொருளுக்கு நான் வாடிக்கையாளராக இருக்கவே முடியாது. வாடிக்கையாளர்களிடம் தான் கருத்துகளை கேட்க வேண்டும். இந்தியா முழுக்க இருக்கும் பல இடங்களில் எங்களுடைய ஆய்வுக் குழுவினர் மக்களிடம் கருத்து கேட்பார்கள். அவர்களிடம் கருத்து கேட்ட பிறகு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். வாடிக்கையாளர்களிடம் உங்களுக்கு எந்த மாதிரி பொருள் வேண்டும் என்று கேட்டால் அவர்களால் சரியாக சொல்ல முடியாது. ஆனால் ஒரு பொருளைக் கொடுத்து அதை பயன்படுத்திய பிறகு அதில் என்ன பிடிக்கவில்லை என்று சொல்லும் போது அதை மாற்றிக்கொள்வோம். தவிர, நாங்களே ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளை தயாரித்து அதில் இருக்கும் நிறை குறைகளை பற்றிக் கேட்கும் போது அவர்கள் பல கருத்துகளை சொல்லுவார்கள்.
பெரும்பாலான சி.இ.ஒ.க்கள் ஐ.ஐ.எம்.மில் படித்தவர்கள். ஆனால் நீங்கள் எம்.பி.ஏ. படிக்கவில்லை! உங்கள் முடிவுகளை எப்படி எடுக்கிறீர்கள்.?
நான் எம்.பி.ஏ. படிக்கவில்லை என்றாலும் கூட என்னிடம் வேலை பார்ப்பவர்கள் படித்தவர்கள். நான் இதுவரை கற்றுக்கொண்டதில் இருந்து என் முடிவுகளை எடுப்பேன். அதே சமயத்தில் முறையாக படித்தவர்களிடமிருந்தும் கேட்டுக்கொள்வேன். நிறைய படிப்பேன். தற்போது சந்தையில், என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறீர்கள். உங்களுக்கு கீழே இருப்பவர்களை ரிஸ்க் எடுக்க அனுமதிக்கிறீர்களா?
ரிஸ்க் என்ற வார்த்தையே தவறு. மேலும் எந்த முடிவும் இங்கு தனியாக எடுக்கப்படுவதில்லை. பல பேர், அமர்ந்து பேசி, விவாதித்து பிறகுதான் முடிவுகளை எடுக்கிறோம். அதே சமயத்தில் ஒரு முடிவு எடுக்கும் போது சாதகமாக விளைவுகள் என்ன என்று கணக்கிடுகிறோமே அதேபோல ஒரு முடிவு எடுக்கும் போது அதிகபட்சம் நெகட்டிவாக என்ன நடக்கும் என்பதையும் யோசித்தே முடிவு எடுக்கிறோம். அதனால் எடுக்கும் முடிவுகளை ரிஸ்க் என்றே சொல்ல முடியாது.
எனக்கு கீழே இருப்பவர்களுக்கு அவர்களுக்கு தனியாக பொறுப்பு இருக்கிறது. சில கோடி ரூபாய் டீல்களை வரை அவர்களே முடிவு எடுக்கிறார்கள். ஏற்கெனவே சொன்னது போல, கலந்து பேசி எடுத்த முடிவுதான் என்றாலும் ஒவ்வொரு மாதமும் ரிவ்யூ மீட்டிங்கில் என்ன நடந்து என்று சொல்ல வேண்டி இருக்குமே.
ஒரு சி.இ.ஓ.வுக்கு அனைத்து துறை விஷயங்கள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமா?
அனைத்தையும் முழுமையாக தெரிந்திருக்க முடியாது. பத்து மதிப்பெண் என்று வைத்துக்கொண்டால் குறைந்த பட்சம் 5 என்ற அளவிலாவது ஒவ்வொரு துறையை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு துறை தலைவர்களும் அடிக்கடி உங்களை சந்திக்க வருவார்களே? நீங்கள் எப்படி தயாராக இருப்பீர்கள்?
டிவி-யில் ஒரு சேனல் ஓடிக்கொண்டிருக்கும். சேனல் மாற்றினால் உடனடியாக அடுத்த சேனல் வரும். அதுபோல எந்த துறை சம்பந்தபட்ட நபர்களை சந்திப்பதற்கும் நான் தயாராக இருப்பேன். ஆனால் ஒரே சமயத்தில் மேலே ஒரு சேனல், கீழே ஒரு சேனல் போல என்னால் இருக்க முடியாது, இருக்க கூடாது. அதாவது ஒரு சமயத்தில் இரண்டு துறை நபர்களை சந்திக்க மாட்டேன். அது தேவை இல்லாத குழப்பங்களை விளைவிக்கும்.
நிறுவனங்கள் மாறும் போதுதான் உயர் பொறுப்பு வர முடியும் என்ற பொதுவான கருத்து இருக்கிறதே! இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது சம்பந்தபட்ட நபர்களை பொறுத்ததுதான். நிறுவனங்கள் மாறி மாறி தலைமை பொறுப்புக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். என்னைப்போல ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்து தலைமை பொறுப்புக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். இதை பற்றி பொதுவாக கருத்து கூற முடியாது.
தலைமைப் பொறுப்புக்கு வர இருக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
என்னுடன் இருப்பவர்களுக்குச் சொல்வதையே உங்களுக்கும் சொல்கிறேன். வேலையில் பொறுப்பாகவும், விரைவாக செயல்படுங்கள். உதாரணத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வாருங்கள்.
தவறு செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள். அதை மறைக்க முயற்சி செய்து பிரச்சினையை பெரிதாக்காதீர்கள். தவறை ஒப்புக்கொள்ளும் போது அடுத்தது என்ன என்று யோசிக்க முடியும். மறைக்கும்போது விளைவுகள் அதிகமாக இருக்கும்.
எப்போதும் உற்சாகமாக இருங்கள். அர்ப்பணிப்போடு வேலை செய்யுங்கள். சுருக்கமாக RED. - Response (quick), Enthusiastic, Dedication.
தற்போது எம்.பி.ஏ படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?
முதலில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும் கல்லூரியாக பார்த்து சேருங்கள். வேலை இல்லாமல் நீங்கள் என்னதான் எம்.பி.ஏ. படித்தாலும், படித்ததை செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் படித்தது வீண் தான். பாடப்புத்தகத்தை தாண்டியும் நிறைய case study-யை படியுங்கள்.
முடிந்த வரை நிறைய நபர்களை, தொழில்முனைவோர்களை சந்தியுங்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago