பணவீக்கம் 7.52 சதவீதமாக உயர்வு

By செய்திப்பிரிவு

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் நவம்பர் மாத முடிவில் 7.52 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உணவுப் பொருள் விலையேற்றம் ஆகியவை காரணமாக பணவீக்கம் உயர்ந்ததாக அரசு வெளியிட்ட அட்டவணை தெரிவிக்கிறது.

கடந்த 14 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

நாட்டின் பணவீக்க விகிதம், ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 7.24 சதவீதமாக இருந்தது என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அட்டவணை தெரிவிக்கிறது.

உணவுப் பொருள்களின் விலை 19.93 சதவீதம் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் இது 18.19 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை 11.08 சதவீதம் உயர்ந்திருந்தது. அக்டோபர் மாதம் இது 10.33 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 9.97 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு விலை 10.90 சதவீதமும், பெட்ரோல் விலை 4.42 சதவீதமும், டீசல் விலை 15.65 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது.

உற்பத்தி பொருள்களின் பணவீக்கம் 2.64 சதவீதம் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இது 2.5 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 5.41 சதவீதமாக இருந்தது.

கடந்த வாரம் வியாழக்கிழமை சில்லறை வர்த்தக பணவீக்கம் வெளியிடப்பட்டது. இது நவம்பர் மாதத்தில் 11.24 சதவீதமாக உயர்ந்திருந்தது. அக்டோபர் மாதத்தில் இது 10.17 சதவீதமாக இருந்தது.

சில்லறை வர்த்தக பணவீக்கம் அதிக அளவு உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை 61.60 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. பழங்களின் விலை 15 சதவீதம் அதிகரித்திருந்தது. பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை 12.07 சதவீதமும், முட்டை, மீன், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை 11.96 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது.

உணவு, குளிர்பானங்களின் விலை 14.72 சதவீதம் உயர்ந்ததாக அரசு வெளியிட்ட அட்டவணை தெரிவிக்கிறது.

நகர்ப்பகுதிகளில் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்பட்டதாக அட்டவணை தெரிவிக்கிறது. நகர்ப்பகுதிகளில் ஒட்டுமொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் 11.74 சதவீதமாக உயர்ந்திருந்தது. காய்கறிகள் விலை 57.75 சதவீதமும், பழங்களின் விலை 18.38 சதவீதமும், பருப்புகளின் விலை 12.01 சதவீதமும், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 10.83 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது.

கிராமப்பகுதிகளில் சில்லறை வர்த்தகக் குறியீடு 10.53 சதவிகிதம் உயர்ந்திருந்தது. காய்கறிகள் விலை 71 சதவீதமும், முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றின் விலை 14.17 சதவிகிதமும், பருப்பு வகைகளின் விலை 12.43 சதவிகிதமும் உயர்ந்திருந்தது.

அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி -1.8 சதவீதமாகக் குறைந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 8.4 சதவீதமாக இருந்தது. சுரங்கம், உற்பத்தித்துறை செயல்பாடு குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது

தொழில்துறையினர் கோரிக்கை

பொருள் விநியோகத்தில் நிலவும் குறைபாடுகளைப் போக்கினால் பணவீக்கம் குறையும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் எதிர்வரும் நிதிக் கொள்கையில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என்று ஃபிக்கி தலைவர் நைனாலால் கித்வாய் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்பிஐ நிதிக் கொள்கை வெளியாக சில நாள்களே உள்ள நிலையில் பணவீக்க குறியீடு வெளியாகியிருப்பது நிச்சயம் ரிசர்வ் வங்கிக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்.

அதிக வட்டி விகிதம், தொழில்துறை வளர்ச்சியில் சரிவு, சேவைத் துறையிலும் முன்னேற்றமில்லை என்று அசோசேம் இயக்குநர் ஜெனரல் டி.எஸ். ரவாத் சுட்டிக் காட்டினார்.

இப்போதாவது வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும். இல்லையெனில் அதிகரித்துவரும் உணவுப் பொருள்கள் குறிப்பாக காய்கறிகள், பழங்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தொழில்துறை பாதிக்கப்படும், விநியோகத்தில் உள்ள குறைகளைப் போக்காத பட்சத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையாது என்றும் ரவாத் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்