பணவீக்கம் விரைவில் குறைய வாய்ப்பு: மான்டெக் சிங் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

பணவீக்கம் விரைவில் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை பொருளாதார கல்வி நிறுவனம், தென்னிந்திய தொழில்வர்த்தக சபை சார்பில் பொருளாதார மேதை டாக்டர் ராஜா ஜெ.செல்லையா நினைவு சொற்பொழிவு பொருளாதார கல்வி நிலையத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா கலந்துகொண்டு பேசியதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தும்போது சில மாநிலங்களுக்கு நன்மையும், சில மாநிலங்களுக்குப் பாதிப்பும் ஏற்படலாம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு இருந்தால் அது இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்துக்கு சிறப்பாக அமையும்.

மானியங்களுக்கு அதிக செலவு

இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்திய கடந்த 20 ஆண்டுகளில் வரிவருவாய் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் சுங்கவரி அதிகம். சுங்கவரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும்.

அரசு செய்யும் செலவுகள் அதிகரித்து வருவதாக அனைத்து தரப்பினரும் குறை சொல்கிறார்கள். மானியங்களுக்காக அரசு அதிகம் செலவிடுகிறது. செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் மானியங்களை குறைத்தாக வேண்டும். உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசு மட்டுமே முதலீடு செய்ய முடியாது. அரசும் தனியாரும் கூட்டுசேர்ந்து செயல்படுவது சாத்தியம்தான் என்பதை அரசு-தனியார் கூட்டுமுயற்சி திட்டம் நிரூபித்துள்ளது. இதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை களைவதற்கு தீர்வு காண வேண்டும்.

நேரடி பணபரிமாற்ற திட்டம்

நிறுவனங்களுக்கான வரி நம் நாட்டில் அதிகமாக (34 சதவீதம்) உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் நிறுவன வரி 20 முதல் 22 சதவீதம் வரைதான் இருக்கிறது. வரிவிதிப்பு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நியாயமாக இருக்க வேண்டியது அவசியம். வரி அதிகமாக இருந்தால் வரிச்சுமை ஏற்படும்.

அரசு வழங்கும் மானியங்கள் 40 சதவீத பயனாளிகளை அடைவதில்லை. மானியத்தின் பயன் நேரடியாக பயனாளிக்கு கிடைக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் நேரடி பணபரிமாற்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. சாதாரணமாக மானிய உதவி வழங்கும்போது 30 சதவீதம் விரயம் ஏற்படுகிறது என்றால் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் மின்னணு பரிமாற்றம் மூலம் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியத்தை வழங்குவதால் பணவிரயம் முற்றிலும் தடுக்கப்படும் என்றார் அலுவாலியா.

வரிவருவாய் அதிகரிப்பு

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவரும், சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தலைவருமான சி.ரங்கராஜன் தலைமை தாங்கிப் பேசும்போது கூறியதாவது:-

அரசு செலவினங்கள் அதிகரிப்பதால் நிதி பற்றாக்குறை உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை உயர்வை குறைக்க வேண்டும். ஆரம்பக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு அரசு அதிகம் செலவிடுகிறது. ஒருசில பொறுப்புகளை ஆற்ற வேண்டியது அரசின் கடமை.

முன்னுரிமை

இந்த நிலையில், அரசின் செலவினங்களை ஈடுசெய்ய வரிவருவாயை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 2.6 சதவீதம் மானிய நிதிக்கு சென்றுவிடுகிறது. இதை 1.4 சதவீதமாக குறைக்க வேண்டும். எந்த மானியத்துக்கு முன்னுரிமை வழங்குவது என்பதை முடிவுசெய்ய வேண்டியது அரசுதான் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, தென்னிந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஜவகர் வடிவேலு வரவேற்றார். நிறைவாக, பொருளாதார கல்வி நிறுவன இயக்குனர் கே.ஆர்.சண்முகம் நன்றி கூறினார். சொற்பொழிவு முடிவடைந்த பின்னர் அலுவாலியா நிருபர்களிடம் கூறியதாவது:-

பணவீக்கம் குறையுமா?

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது முக்கியமான பிரச்சினைதான். பொருளாதார சூழலை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. பணவீக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் விரைவில் குறைய வாய்ப்புள்ளது. அது எவ்வளவு விரைவாக குறையும் என்று குறிப்பிட்டுச்சொல்ல இயலாது.

இந்தியாவில் கடைபிடிக் கப்பட்டு வரும் பொருளாதார கொள்கை சரியில்லை என்று சொல்லப்படுவதை ஏற்க முடியாது. 2004-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை கடந்த 9 ஆண்டுள் நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட்டுப் பார்த்தால் பொருளாதாரம் நன்கு வளர்ந்திருப்பதை அறிய முடியும். நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இதேநிலைதான் என்பதை உணர வேண்டும்.

தமிழகத்துக்கு நிதி குறைப்பு

தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக தமிழக முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார் என்று கேட்கிறீர்கள். இது மத்திய-மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம். இதுபற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது என்றார் அலுவாலியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்