தொழில் ரகசியம்: முடிவெடுக்கும் பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம்

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

முடிவெடுப்பதில் எப்படி சார் நீங்கள். முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாக அடுக்கி அனைத்தையும் நிதானமாக அலசி ஆழமாய் ஆராய்ந்து அதற்கப்புறமும் அனேகமாக முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுபவரா?

பலே. கையை கொடுங்கள். நானும் அப்படித்தான். இன்னும் சொல்லப் போனால் நாம் அனைவருமே அப்படித்தான். பலரை பரவலாய் பிடித்திருக்கும் இந்த வியாதிக்கு பெயர் ‘முடிவு பக்கவாதம்’. முடிவெடுக்கும் போது ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருந்து அனைத்தையும் அலசிக்கொண்டே இருந்து, எதை எடுப்பது எதை விடுப்பது, எதை தொடுவது, எதை விடுவது என்று முடிவெடுக்க முடியாமல் அவஸ்தைப் படும் வியாதி. உங்கள் மனைவி கடையில் புடவை செலக்ட் செய்ய ஒரு மாமங்கம் எடுப்பது இதனால்தான். டீவியில் எதைப் பார்ப்பது என்று புரியாமல் சேனலை நீங்கள் மாற்றிக்கொண்டே இருப்பதும் சாட்சாத் இந்த வியாதியினாலேயே. போன வாரம் இந்த பகுதியைப் படித்தவர்களுக்கு இது இன்னமும் விவரமாய் தெரியும்!

ஒன்றும் வேண்டாம். அல்ப தோசை. அதிலேயே ஆயிரத்தெட்டு வகைகள். ஹோட்டல் சென்று அங்கு மெனு கார்டை பார்த்தால் பள்ளி பருவத்தில் படித்த புத்தகங்களே தேவலை என்பது போல் குழப்பம். எதை தின்பது என்று திண்டாட்டம். ’சே, பேசாமல் நமக்கு தெரிந்த ‘ஒரு பிளேட் தோசை, காபி’ என்று கேட்டு போட்டதை தின்றுவிட்டு போய் தொலைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆயிரத்தெட்டு ஆப்ஷன்கள் இருக்கும் போது அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாமல் மனம் திண்டாடுகிறது. இதுதான் முடிவு பக்கவாதம்!

தேர்ந்தெடுக்க ஆப்ஷன்கள் இருப்பது நமக்கு அளிக்கப்படும் வரம் போலத் தெரியும். ஆனால் அதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யும் சோதனை நமக்கிடப்படும் சாபம்!

இந்த வியாதியிலிருந்து விமோசனம் உண்டா? உண்டு. உங்கள் அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்ய நீங்கள் தயாராய் இருந்தால் முடிவெடுக்கும் பிரச்சினைக்கு முடிந்தவரை முடிவு கட்டி முடிக்க முடியும்!

முடிவெடுக்க வேண்டிய வேலை அதை முடிக்க தரப்படும் நேரத்திற்கு ஏற்ப விரியும் தன்மை கொண்டது. இதற்கு ‘பார்கின்ஸன்’ விதி என்று பெயர். ஒரு வேலையை முடிக்க எத்தனை நேரம் தரப்படுகிறதோ அத்தனை நேரத்தை எடுப்போம். முடிவெடுப்பதும் ஒரு வேலை தானே. அரை நொடிக்குள் முடிவெடுக்கவேண்டும் என்றால் அரை மணி நேரம் எடுப்போம். அதே முடிவை மூன்று நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென்றால் மூன்றாவது நாள் முடிவில் முடிவெடுப்போம். கடைசி நேரம் வரை காத்திருந்து முடிவெடுக்கும் போது முடிவு பக்கவாத வியாதி இன்னும் முற்றிப் போய் நம்மை பாடாய்படுத்தும். அதனால் முடிவெடுக்க ஒரு நேர காலத்தை வரையறுத்து அதற்குள் முடிவெடுக்கவேண்டும் என்று கங்கனம் கட்டி முடிவெடுப்பது உசிதம். கடைசி நேரம் வரை வைத்து செய்ய நினைத்தால் அத்தனை ஆப்ஷன்களும் அமோகமாக நம்மை சேர்த்து வைத்து செய்யும்!

முடிவெடுக்க முடியாது தவிக்க ஒரு முக்கிய காரணம் இருக்கும் ஆப்ஷன்கள் அனைத்துமே முக்கியம் என்பது போல் நமக்குத் தோன்றுவதால். உங்கள் பிராண்டிற்கு பத்திரிகை விளம்பரம் டிசைன் செய்யும் போது உங்கள் பிராண்ட் பற்றிய அனைத்து தகவல்களும் அவசியம் போல் தோன்றி அனைத்தையும் எப்படியாவது விளம்பரத்தில் நுழைக்கத்தான் மனம் நினைக்கும். அப்படி செய்யும் போது தான் பத்திரிக்கை விளம்பரம், டெண்டர் விளம்பரம் போல் மாறி கடுகு தாளித்து கொட்டியது போல் பார்க்கவே கண்றாவியாய் இருக்கிறது. எதற்கு விளம்பரம், எந்த விஷயத்தை சொல்ல விரும்புகிறோம் என்பதை முதலில் தெளிவாய் புரிந்துகொண்டு பிறகு முடிவெடுக்க துவங்குங்கள். அப்படி செய்யும் போது தேவையானவை மட்டுமே கண்ணில் படும். தேவையற்றவை, அதிமுக்கியமில்லாத ஆப்ஷன்களை ஒதுக்கித் தள்ளமுடியும். ஈசியாக முடிவெடுக்க முடியும்!

டீ-ஷர்ட் போல் முடிவெடுப்பதிலும் ஸ்மால், மீடியம், லார்ஜ் என்று அதன் முக்கியத்திற்கேற்ப அளவு உண்டு. முடிவின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப நேரத்தை முயற்சியை செலவழிப்பதே புத்திசாலித்தனம். திருமண ஏற்பாட்டிற்கு ஏகப்பட்ட நேரத்தை செலவழிக்கும் பலர் திருமணத்திற்கு மணமகன், மணமகள் தேர்வில் நேரத்தை செலவழிக்காமல் இருப்பதால் தான் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. இதை உணர்ந்தால் முடிவெடுக்கும் விஷயத்தின் வீரியத்திற்கு ஏற்ப நேரம், முயற்சி செலவழிக்கும் முக்கியத்துவம் புரியும்!

எடுக்கும் முடிவால் ஏற்படும் விளைவுகள் எத்தகையவை? முடிவு தவறாகிப் போனால் அதிகபட்சம் என்ன ஆகும்? இதை உணர்ந்து அதற்கேற்ப முடிவெடுக்க முயற்சிப்பது உசிதம். டீவி விளம்பரம் எடுக்கும் போது அதிகம் சிந்திக்கவேண்டும். ஏனெனில் ஏதோ எடுத்தோம், எங்கோ ஒலிபரப்பினோம் என்று இருக்க முடியாது. ஆனால் எந்த டீவி சேனலில் ஒலிபரப்புவது என்பது அதை விட சிறிய முடிவே. தவறாகிப் போனால் திருத்திக்கொள்ளமுடியும்.

பள்ளி பரீட்சையில் மல்டிபில் சாய்ஸ் என்ற ஒன்று உண்டே, ஞாபகம் இருக்கிறதா? கேள்விக்கு நான்கு பதில்களை தந்து அதில் எது சரியான பதில் என்று டிக் செய்யும் வகை. அதை எப்படி அணுகினோம் என்று யோசித்துப் பாருங்கள். தரப்பட்ட நான்கு ஆப்ஷன்களில் எது கண்டிப்பாக தவறு என்று நினைத்தோமோ அதை முதலில் ஒதுக்கினோம். பின் மீதமுள்ள ஆப்ஷன்களை மட்டும் யோசித்து டிக் செய்தோம். வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் கூட முடிவெடுக்கும் சூழ்நிலைகளில் பல ஆப்ஷன்கள் இருக்கும். முதல் காரியமாக அதில் தவறான அல்லது சரியில்லாத ஆப்ஷன்களை எவையோ அதை ஒதுக்குங்கள். மீதமுள்ள ஆப்ஷன்களை அலசுவது கொஞ்சத்துக்கு கொஞ்சம் எளிதாவதை உணர்வீர்கள்.

ஹோட்டலில் தனியாய் சென்று சாப்பிட உட்கார்ந்து சர்வரிடம் தெரியாத் தனமாக ‘என்னப்பா இருக்கு’ என்று கேட்கிறீர்கள். அவர் கடகடவென்று ஏகப்பட்ட ஐடங்களை அடுக்குகிறார். எதை ஆர்டர் செய்வது என்று புரியாமல் அவரிடமே ‘நீங்களே எது நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்’ என்று கேட்கிறீர்கள். நீங்கள் அறியாத, ஊர் பெயர் தெரியாத ஒருவரிடம் முடிவெடுக்க உதவி கேட்கிறீர்கள். ஏன்?

ஏனெனில் நம்மை விட அவருக்கு அந்த ஐட்டங்களைப் பற்றியும் அதன் தரம், சுவையை பற்றியும் அதிகம் தெரியும் என்று நாம் நினைப்பதால். தான் சொன்னது சரியில்லை என்றால் நீங்கள் கோபப்படுவீர்கள் என்பது அவருக்கு தெரிந்திருப்பதால். உங்களுக்கு திருப்தியில்லையென்றால் டிப்ஸ் தரமாட்டீர்கள் என்று அவர் அறிந்திருப்பதால். இத்தனை இருப்பதால் நல்லதையே அவர் சொல்வார் என்று நீங்கள் நம்புவதால்.

முடிவெடுக்கும் பொறுப்பு உங்களுடையதென்றாலும் அவர் ஆலோசனை பெறுகிறீர்கள். இதை உங்கள் ஊழியர்களிடம் செய்யலாமே. எல்லா முடிவுகளையும் நீங்களே எடுக்க முயற்சிப்பதால்தான் முடிய மாட்டேன் என்கிறது; முடியை பிய்த்துகொள்ள வேண்டியிருக்கிறது; முக்கால்வாசி முடிவுகள் தவறாகியும் போகிறது. எதைப் பற்றி முடிவெடுக்க வேண்டுமோ அத்துறையை, அதைச் சார்ந்த ஊழியர் களின் உதவியை நீங்கள் நாடலாமே. இருக்கும் ஆப்ஷன்களை அலசும் அறிவும் அனுபவமும் உங்களை விட அவர்களுக்கு அதிகமென்றால் அவர் கள் அறிவுரையை நீங்கள் நாடலாமே. தெரியாத சர்வர் பேச்சை கேட்டு நடக் கும் நீங்கள் உங்கள் ஊழியர் பேச்சை கேட்டால் குறைந்தா போவீர்கள்.

தலை என்று ஒன்று இருந்தால் தலைவலி வந்தே தீரும் என்பது போல் முடிவெடுக்கும் தருணங்களில் முடிவு பக்கவாதம் என்ற நோய் வந்தே தீரும். இதை முழுவதுமாய் நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும் வியாதியின் வீரியத்தை குறைக்க வெகுவாக முடியும். குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் முடியும்!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

25 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்