நிதிக்குழு - என்றால் என்ன?

By செய்திப்பிரிவு

நிதிக்குழு ( Finance Commission )

மத்திய அரசிடம் உள்ள அதிக நிதி வருவாயிலிருந்து மாநில அரசுக்குத் தேவையான நிதிகளை வழங்க பரிந்துரை செய்வதுதான் நிதிக்குழு. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நிதி ஏற்றத்தாழ்வு எல்லா கூட்டாட்சிகளிலும் இருக்கக்கூடிய ஒன்றாகும். மத்திய அரசுகளிடம் அதிகமான நிதி வருவாய்களும் மாநில அரசுகளிடம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கான செலவுப் பொறுப்புகளும் இருக்கின்றன; எனவே மாநிலங்களுக்கு நிதி அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் எவ்வளவு தொகை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நடுநிலையாக தீர்மானிக்க வேண்டி நிதி குழு அமைக்கப்படும்.

மாநிலங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியினை 28 மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பதும் சிக்கலான காரியம்தான். எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் அதிகாரங்களும், பொது செலவு செய்யும் கடமைகளும் பெற்றிருந்தாலும், மாநிலங்களுக்கிடையே உள்ள பொருளாதார வேறுபாடுகள் அவர்களின் நிதிச் சுமையை வேறுபடுத்துகின்றன.

உதாரணமாக ஒரு மாநிலம் அதிக தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் பெற்றிருந்தால் அதிக வரி வருவாய் பெற முடியும். ஒரு மாநிலம் அதிக நிலப் பரப்பளவும், மக்கள் தொகையும் பெற்றிருந்தால் அதிக பொது செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். மாநிலங்களுக்கிடையே உள்ள நிதி நிலை வேறுபாடுகளை கணக்கில் கொண்டு நிதி குழு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கும். ஆக, மத்திய அரசு வரி வருவாயில் எவ்வளுவு மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டும், அவ்வாறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 28 மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பன பற்றி பரிந்துரைகள் வழங்குவது நிதிக் குழுவின் முக்கிய கடமைகளாகும்.

அரசியலமைப்புச்சட்டதின் 280 பிரிவின் கீழ், நிதிக்குழு ஐந்து ஆண்டுக்கொருமுறை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும். இக்குழு மத்திய, மாநில நிதி ஆதாரங்களை ஆராய்ந்து, தனது பரிந்துரைகளை வழங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE