மியூச்சுவல் ஃபண்ட்: புதிய கட்டுபாடுகள்

ஒன்பது லட்சம் கோடி மதிப்புடைய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கடுமையான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பார்கள். அந்த நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஓட்டு உரிமை இருக்கிறது. ஆனால் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்தாததால், தங்களுக்கு இருக்கும் ஓட்டுரிமையை எப்படி, எந்த காரணத்துக்காக பயன்படுத் தினீர்கள் என்று வெளியிடுமாறும் செபி தெரிவித் திருக்கிறது. காலாண்டுக்கு ஒரு முறை இதை வெளியிட வேண்டும் என்றும் கூறி இருக்கிறது.

இந்த உத்தரவுகள் அனைத்தும் நீண்ட கால கொள்கையின் கீழ் வரும். இப்படி செய்வது சிறு முதலீட்டாளார்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கையாகும். மேலும் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை கையாளுகின்றன என்பதை தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் செபி தெரிவித்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படும் தொகை பெரும்பாலும் 15 இந்திய நகரங்களில் இருந்துதான் வருகிறது. அதனால் இந்த முக்கிய நகரங்களை தவிர்த்து மற்ற நகரங்களிலிருந்து முதலீடுகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று செபி தெரிவித்திருக்கிறது, அது பங்குச்சந்தை சார்ந்த திட்டம் மற்றும் கடன் சந்தை சார்ந்த திட்டங்களுக்கும் சேர்த்துதான்.

மேலும், மியூச்சுவல் ஃபண்ட்களில் தங்களது குழும நிறுவனங்களின் முதலீடு எவ்வளவு இருக்கிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைளும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் வெளிப்படை தன்மையை கொண்டுவரும் என்று செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார். செபிக்கு எங்களது முழு ஆதரவும் இருக்கிறது என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தீப் சிக்கா தெரிவித்தார். இதன் மூலம் பங்குதாரர்களின் நலன் மட்டுமல்லாமல் சிறுமுதலீட்டாளர்களை கவரலாம் என்று தெரிவித்தார்.

குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சி.இ.ஒ. ஜிம்மி படேட் கூறும் போது, மாதந்தோறும் கையாளும் தொகையை வெளியிடுவதன் மூலம் ஃபண்ட் நிறுவனத்தின் வெளிப் படைத்தன்மை அதிகரிக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE