மக்கள் தரத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் - ஏ. ஸ்ரீகாந்த் சிறப்புப் பேட்டி

நம் கண்ணுக்குத் தெரியாத பல பிஸினஸ் வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பல பிஸினஸ்களில் ஸ்டேஷனரி பிஸினஸும் ஒன்று. இந்த பிஸினஸில் இருக்கும் முக்கியமான கார்ப்பரேட் நிறுவனமான கோகுயோ கேம்ளின் நிறுவனத்தின் சி.இ.ஒ. ஏ.ஸ்ரீகாந்த் சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

அவரது வாழ்க்கை, ஸ்டேஷனரி பிஸினஸின் நெளிவு சுழிவுகள் மற்றும் இந்த பிஸினஸ் எதிர்காலம் குறித்து பல விஷயங்கள் பேசினோம். அந்த பேட்டியிலிருந்து...

பெரும்பாலான சி.இ.ஓ.களை போல நீங்களும் ஐ.ஐ.டி., ஐ.ஐ,எம். இரண்டிலும் படித்தவர்? உங்களின் ஐ.ஐ.எம். அனுபவம் குறித்து?

படித்து முடித்து பல வருடங்கள் ஆனதால் அப்போது நடந்த சின்ன சின்ன விஷயங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ஐ.ஐ.எம்.-ல் தியரிக்கு வேலை இல்லை. அனைத்து பாடங்களும் கேஸ் ஸ்டடியாகதான் இருக்கும். உதாரணத்துக்கு பேலன்ஸ் ஷீட் பற்றிய பாடம் என்றால், உண்மையாக ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை எடுத்துக் கொண்டு அதைப் பற்றி விவாதிப்போம். அது பாடமாக இல்லாமல் ஒரு விவாதமாக இருக்கும். ஆனால் அது மனதில் அப்படியே இருக்கும்.

பள்ளிகளில் கூட இதைப் பின்பற்றலாம். பள்ளியிலும் அப்படிப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது. வேதியியல் பாடத்தில் எப்படி ஒரு ஆய்வை செய்வது என்று சொல்லிக் கொடுக்காமல், ஒரு பொருளைக் கொடுத்து இதில் என்ன உப்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கச் சொல்லுவார்கள். படிப்பதை விட நாமாக இந்தச் சோதனையைச் செய்யும் போது குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். அப்படி எனக்குப் புரிந்ததால்தான் இந்த சம்பவம் எனக்கு நினைவில் இருக்கிறது.

எந்த பள்ளியில் படித்தீர்கள்?

அப்பா மத்திய அரசு பணியாளர். அவருக்கு வேலை டெல்லியில் என்பதால் அங்குதான் படித்தேன். இருந்தாலும் அங்கிருக்கும் தமிழ் பள்ளியில்தான். ஐ.ஐ.டி. கூட டெல்லியில் படித்தேன்.

கேம்ளின் நிறுவனத்துக்கு முன்பு எங்கு வேலை செய்தீர்கள்?

வட இந்தியாவில் படித்திருந்தாலும் தென் இந்தியாவில்தான் வேலை கிடைத்தது. ஆர்.பி.ஜி. குழுமத்தில் பெங்களூருவில் வேலை செய்தேன். அப்புறம் ஹெங்கல் நிறுவனத்துக்காக சென்னை வந்தேன். இங்கு சில வருடம் வேலை செய்தேன். மூன்று வருடத்துக்கு முன்பு கேம்ளின் நிறுவனத்துக்கு வந்தேன். வரும்போது சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறை தலைவராக வந்தேன். 10 மாதத்துக்கு முன்பு சி.இ.ஒ.வாக பொறுப்பேற்றுக் கொண்டேன்.

உங்களுடைய பிஸினஸின் பெரும் பகுதி எங்கிருந்து வருகிறது.?

65 சதவிகிதத்துக்கு மேல் பள்ளிக்குழந்தைகளுக்கு விற்கும் பொருட்களில் இருந்துதான் வருகிறது.

பெரியவர்களுக்கு ஒரு பிராண்டை எளிதாக அறிமுகப்படுத்த முடியும். ஆனால் நீங்கள் குழந்தைகளைச் சென்றடைவதன் மூலம்தான் வளர முடியும். மேலும் இதில் முறைப்படுத்தப்படாத சிறிய பிராண்ட்கள் இருக்கும்போது எப்படி சமாளிக்கிறீர்கள்?

நீங்கள் சொல்வது சரி. முறைபடுத்தப்பட்ட பிராண்ட்களும் இருக்கின்றன, முறைப்படுத்தப்படாத பிராண்ட்களும் இருக்கின்றன. முதலில் பிராண்ட் மதிப்பு. கேம்ளின் நிறுவனத்துக்கு என்று பிராண்ட் மதிப்பு இருக்கிறது. அடுத்து எங்கள் பொருட்களின் விலையும் சரியாகவே இருக்கும். உதாரணத்துக்கு சாதாரணமாக ஒரு பொருள் 10 ரூபாய்க்கு கிடைக்கும் என்றால், எங்களது பொருள் 12 ரூபாய்தான். கொஞ்சம் அதிக விலை என்றாலும், எங்களது பொருட்கள் தரமானது.

உதாரணத்துக்கு 2 வயது குழந்தை கிரையானை வைத்து வரைகிறது என்றால், கிரையானை வாயில் போடுவதற்கு வாய்ப்பு அதிகம். குழந்தையின் அம்மா எந்நேரமும் கவனித்துக்கொண்டு இருக்க முடியாது. விலை குறைவு என்பதற்காக நாங்கள் அலட்சியமாக இருப்பதில்லை. 19 அபாய கெமிக்கல்கள் எங்களது கிரையானில் இல்லை. இந்த பாதுகாப்பினை சிறிய நிறுவனங்கள் செய்ய முடியாது.

மேலும், ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கு போட்டி நடத்துகிறோம். வருடந்தோறும் 6600 பள்ளிகளையும், 48 லட்சம் மாணவர்களையும் சந்திக்கிறோம். தவிர, நீங்கள் படிக்கும் சமயத்தில் 12 வண்ணங்கள்தான் இருந்தது. இப்போது 50க்கும் மேற்பட்ட வண்ணங்கள் இருக்கிறது. புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தும்போது வளர்ச்சிக்கான சாத்தியம் அதிகம்.

போட்டிகளை நடத்த பள்ளிகள் அனுமதி கொடுக்கிறதா?

ஓவியம் வரைந்து என்ன செய்யப் போகிறாய்? என்ஜீனியரிங், டாக்டர் படிக்க வேண்டும் என்ற பொதுவான அபிப்ராயம்தான் இருக்கிறது. அதேபோல, ஓவியம் வரையும் அனைவரும் ஓவியராகவும் ஆக முடியாது. ஆனாலும் ஓவியங்களை குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை வளர்க்கும். ஒரு குழந்தையின் கையில் பேப்பரையும், கலர் பென்சிலையும் கொடுக்கும் பட்சத்தில் எதையாவது புதுமையாக வரையும். இந்த கிரியேட்டிவிட்டி குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லுவோம்.

எத்தனை என்ஜீனியர்கள் இருந்தாலும், டாக்டர்கள் இருந்தாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபட வேண்டும் என்றால் உங்களுக்கு கிரியேட்டிவிட்டி வேண்டும். அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி புரிய வைக்கும் பட்சத்தில் பள்ளிகளை சமாளிக்க முடியும்.

சிறு நகரங்களில் இருக்கும் பள்ளிகளுக்கும் செல்கிறீர்களா?

நாங்கள் செல்லும் பள்ளிகளில் 35 சதவிகிதம் மட்டும்தான் இந்தியாவின் முக்கியமான 10 நகரங்களில் இருக்கிறது. மீதம் இருப்பவை அடுத்த கட்ட நகரங்கள்தான்.

இந்த அனைத்து போட்டிகளையும் நீங்களே நடத்துகிறீர்களா இல்லை, அவுட்சோர்ஸ் மூலம் நடத்துகிறீர்களா?

இதுவரை நாங்கள்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் கூட ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாமல் இருந்திருக்கலாம். இதுவும் ஒரு வாய்ப்புதான். இனி வரும் காலத்தில் அதைச் செய்யலாம்.

உங்கள் நிறுவனத்தின் நிகர லாப வரம்பு சுமார் 1 சதவிகித்துக்கு கீழேதான் இருக்கிறது. ஏன்?

2011-ம் ஆண்டு எங்கள் நிறுவனத்தின் 65 சதவிகித பங்குகளை ஜப்பான் நிறுவனமான கோஹியோ வாங்கியது. அது ஜப்பானில் பெரிய ஸ்டேஷனரி நிறுவனம். இப்போதைய நிலைமையைப் பார்க்காமல் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதால் எங்களுக்கு செலவு அதிகமாகிறது. மார்க்கெட்டிங், ஆராய்ச்சி என செலவுகள் அதிகமாக இருக்கிறது. மேலும், புதிய தொழிற்சாலை கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம், அடுத்த கட்ட நகரங்களுக்கு செல்ல புதிய ஆட்களை எடுக்கிறோம்.

இதுபோல பல செலவுகள் எங்களுக்கு இருக்கிறது. அதனால் லாப வரம்பு குறைவாக இருக்கிறது. மேலும், பொதுவாக இந்த துறையின் லாப வரம்பே குறைவுதான்.

தவிரவும், லாப வரம்பு எவ்வளவு என்று பார்ப்பதை விட, ரிட்டன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் எவ்வளவு என்று பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்தத் துறையில் உங்களின் சந்தை மதிப்பு எவ்வளவு இருக்கிறது.?

ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் இல்லாததால் அதைப்பற்றி சொல்வது நன்றாக இருக்காது.

சந்தையில் பத்து ரூபாய்க்கே பேனா கிடைக்கும் போது எதற்காக உங்களது பேனாவை வாங்க வேண்டும்? எப்படியும் சில காலம்தானே பேனா எழுதப்போகிறது?

ஆனால் மக்கள் இப்போது தரத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனநிலை மாறி வருகிறது. இப்போது நகரங்களில் இருக்கும் இந்த சூழ்நிலை நாளை சிறிய நகரங்களுக்கும் செல்லலாம். விலை குறைவுதான் அதிகமாக விற்கும் என்றால் மிக விலை குறைவான கார்தானே அதிக எண்ணிக்கையில் விற்றிருக்க வேண்டும். குறைவான விலை இருக்கக் கூடிய சாதாரண வண்டிகள்தானே அதிகம் விற்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. இப்போது 80,000 ரூபாய் கொடுத்து கூட இரு சக்கர வாகனம் வாங்குகிறார்களே!

இந்தத் துறையில் நீங்கள்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தினீர்கள் என்று ஏதாவது சொல்ல முடியுமா?

நிறைய இருக்கிறது. முதன் முதலில் பென்சிலில் பெயரை பிரின்ட் செய்து கொடுத்தது கேம்ளின்தான்.

செல்போன் வந்த பிறகு வாட்ச் கட்டுவது குறைந்தபோல, நிறைய மாடல் பேனாக்கள், டெக்னாலஜி வந்த பிறகு பென்சிலின் விற்பனை குறைந்திருக்கிறதா?

பென்சிலின் விற்பனை அப்படியேதான் இருக்கிறது. என்னதான், நீங்கள் வீடியோகேம் விளையாடினாலும் கிரவுண்டில் விளையாடுவது போல இருக்காது. அதுபோலதான் பென்சிலும். குழந்தைகள் ஆரம்பகாலத்தில் இன்னமும் பென்சிலைதான் பயன்படுத்துகிறார்கள்.

படித்து முடித்து சி.இ.ஓ.களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்? அதேபோல நிறுவனத்தை ஆரம்பித்தவர்களே சி.இ.ஓ.வாகவும் இருக்கிறார்கள்? நிறுவனத்தை நடத்த முறையான படிப்பு இருப்பது அவசியமா? இல்லை புரமோட்டர்களே நிறுவனத்தை நடத்தலாமா?

இதுபற்றி கருத்துக்கூற முடியாது. அது சூழ்நிலையைப் பொறுத்துதான். இரண்டிலும் ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். உதாரணங்களும் நிறைய இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கூட புரமோட்டர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

10 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்