கார் இருக்கும் வரை வர்த்தகம் இருக்கும்: சஞ்சய் நிகாம் சிறப்புப் பேட்டி

By எம்.ரமேஷ்

தென் இந்திய நிறுவனமாக இருந்த டிவிஎஸ், இன்று இந்திய அளவில் வளர்ந்து ஆட்டோமொபைல் துறையின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நிறுவனமாக உள்ளது. இந்த குழுமத்தின் அங்கமான மை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் நிகாமுடன் நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

தொழில்முறை நிபுணர்களின் துணையோடு சர்வதேச போட்டிகளை எதிர்கொள்வது, விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் தன்னுடைய வாழ்க்கை என்பது குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இனி அவருடனான உரையாடலிலிருந்து…

மேற்கு வங்கத்தில் பிறந்த இவருக்கு ஆரம்ப காலத்தில் இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம். இவரது தந்தை, மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு காலத்தில் மாநில காவல்துறை தலைவராக இருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் நிகாம்.

பின்னர் கல்லூரியில் ஐஐடி-யில் சேர்வதற்கு புத்திசாலித்தனம், கடுமையான உழைப்பு வேண்டும் என்று நண்பர்கள் கூறியதைக் கேட்டு அதற்காகப் படித்ததில் ஐஐடியில் சேர்ந்து வாழ்க்கை மாறிப்போனது.

1987-ல் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற வாய்ப்பு வந்தபோது, இலங்கைக்கு இந்திய அமைதிகாப்புப் படை (ஐபிகேஎப்) அனுப்பும் பணி தீவிரமாக இருந்தது. மேலும் எல்லையில் சியாச்சின் பிரச்னை தலைதூக்கவே ஒரே மகனான தன்னை அனுப்ப பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.

பின்னர் எம்பிஏ படித்ததில் ஆரம்ப கால வாழ்க்கை அரசு நிறுவனமான செயிலில் தொடங்கியது. 5 ஆண்டு காலத்துக்குப் பிறகு சவூதி அரேபியா சென்றது, பின்னர் அங்கிருந்து நிசான், அதைத் தொடர்ந்து மாருதி என

பல்வேறு பணி மாற்றங்களுக்குப் பிறகு மை டிவிஎஸ் பணிக்காக சென்னைக்கு ஓராண்டுக்கு முன் வந்ததோடு தன்னைப் பற்றிய முன்னுரையை முடித்துக் கொண்டார். அரபு மற்றும் ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டதோடு, இப்போது தமிழ் கற்றுக்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

குடும்ப நிறுவனமான டிவிஎஸ், இப்போது தொழில்முறை நிறுவனமாக மாறி விட்டது. இந்த மாற்றத்தைப் பற்றி?

டிவிஎஸ் நிறுவனம் குடும்பத் தொழிலிலிருந்து தொழில்முறை நிறுவனமாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. போட்டிகளைச் சமாளிக்கவும், சர்வதேச தரத்துக்கு உயர்த்திக் கொள்ளவும் இத்தகைய நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். நிறுவனத்துக்கென்று ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கை, இருக்கும் மனித வளத்தைக் கொண்டு நிறைவேற்ற வேண்டியதுதான் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களது கடமை.

மை டிவிஎஸ் செயல்பாடு குறித்து…

குழுமத்தின் ஒரு அங்கம்தான் மை டிவிஎஸ். இதில் 8 விதமான செயல்பாடுகள் உள்ளன. 8 பிரிவுகளுக்கும் தனித்தனி தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் எனது தலைமையில் செயல்படுகின்றனர். மை டிவிஎஸ் மல்டி பிராண்ட் கார் சர்வீஸ், 24 மணி நேர அவசரகால சாலையோர உதவி, டெலிமேடிக் அடிப்படையில் வாகனங்களைக் கண்டறியும் வசதி, வாரண்டி நீட்டிப்பு, வாகன காப்பீடு, காரேஜ் விற்பனை, ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை, பெட்ரோல் நிலையங்கள் நிர்வாகம், வாகனங்களை பழுது நீக்குவதற்கு என மொத்தம் 80 பணி மனைகள் உள்ளன. இவற்றை படிப்படியாக விரிவாக்கம் செய்யும் திட்டமும் உள்ளது.

உங்களது இலக்கை எவ்விதம் எட்டுகிறீர்கள்?

இரண்டே இலக்குகள்தான். ஒன்று நேரம், அடுத்து மனிதவளம். குறிப்பிட்ட நேரத்துக்குள், இருக்கும் மனிதர்களைக் கொண்டு அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பணியாளர்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். வேலைக்கு வருவதை சிரமமானதாகக் கருதக் கூடாது. மாறாக வேலையை சந்தோஷத்துடனும் விரைவாகவும் செய்வதற்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.

ஊக்குவிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்று நினைக்கிறீர்களா?

இதுவும் ஒருவகை. ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அல்லது அடிக்கடி ஊக்க பரிசு என்பதை விட, நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளேன். இது ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நிறுவனத்தின் பணி மனைகளில் எந்த பணி மனையில் அதிக வருவாய் ஈட்டப்படுகிறதோ, அதில் ஒரு பகுதி ஊழியர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

இது தவிர ஊழியர்களை பணிச் சுமையிலிருந்து விடுவிக்க யோகாசனப் பயிற்சி, முற்றிலும் ஒருநாள் வேலை சூழலிலிருந்து வெளியேற்றி அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. வார விடுப்பு அளி்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஊழியர்களின் உடல் நலனிலும் அக்கறை காட்டப்படுகிறது. கற்பது என்பது தொடர் நடவடிக்கை. புதிய விஷயங்களை அது தொழில்நுட்பமாக இருந்தாலும் உடனுக்குடன் ஊழியர்களுக்குக் கற்றுத் தருகிறோம். தேவைப்பட்டால் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டுக் கார்களைக் கையாளவும் ஊழியர்கள் பயிற்சி பெற்று திகழ்கின்றனர்.

வேறென்ன சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்?

இந்த நிறுவனத்தில் மூன்று தலைமுறைகளாக பணிபுரிவோர் உள்ளனர். இவர்களுக்கு பழமையும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் மாறிவரும் உலகிற்கேற்ற போட்டிகளை சமாளிக்கத் தெரியாது. அதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இலக்கு இருக்கும். அதைப்போல நிறுவனத்தின் இலக்கையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதைச் சொல்லி வேலை வாங்க வேண்டும்.

கார்களின் விற்பனையில் மந்தநிலை இருக்கும்போது அது சார்ந்த உப தொழிலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா?

அப்படிச் சொல்ல முடியாது. புதிய கார்கள் விற்பனை குறைந்திருக்கலாம். ஆனால் ஏற்கெனவே சாலைகளில் ஒடிக் கொண்டிருக்கும் கார்களுக்கு பழுது நீக்குவது அவசியம். அந்த வகையில் இந்தத் தொழிலுக்குப் பாதிப்பில்லை.

மேலும் கார் பழுது நீக்குவது என்ற ஒன்றை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. அது தொடர்புடைய 8 விதமான பணிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். இதனால் வேலை இருந்து கொண்டேயிருக்கும்.

ஒரு பணிமனையில் மாதத்துக்கு 300 முதல் 400 கார்கள் பழுது நீக்கப்படுகின்றன. அந்த வகையில் 80 பணி மனைகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையான கார்கள் பழுது நீக்கப்படுகின்றன.

இத்துறையில் போட்டி எப்படி இருக்கிறது?

போட்டி இல்லாத துறையே கிடையாது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் போட்டி அதிகம். ஆனால் பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. ஆனால் சிறிய நிறுவனங்கள், சிறிய வொர்க்‌ஷாப்கள் என அதிக போட்டி இருக்கிறது.

சிறிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க எத்தகைய உத்தியைக் கடைப்பிடிக்கிறீர்கள்?

அடிப்படையில் டென்னிஸ் விளையாட்டு வீரன். ஸ்குவாஷ் விளையாடவும் பிடிக்கும். இரு போட்டிகளிலும் ஒவ்வொரு பந்தையுமே கவனமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும், ஒரு முறை பந்தை மிஸ் செய்தால் ஆட்டமிழக்க நேரிடும். அதைப் போல நேரம்தான் இந்தத் தொழிலில் பிரதானம். வாடிக்கையாளர்கள் எப்போதுமே பொறுமையாக இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில், குறித்த நேரத்தில் வாகனத்தை அளிக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதன் மூலமே போட்டியைச் சமாளிக்க முடியும்.

இருக்கின்ற பணிமனைகள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் கார்கள் வராது. சில சமயம் குறையும், சில சமயம் அதிகமாக இருக்கும். இதற்கேற்பத்தான் பணியாளர்களை ஒரு ஷிப்ட் அல்லது இரு ஷிப்ட்களில் ஈடுபடுத்த வேண்டும். இப்போது அனைத்து பணிமனைகளும் இரண்டு ஷிப்ட்கள் செயல்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மூன்று ஷிப்ட் செயல்படுத்தி வருகிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு விரைவான, திருப்தியான சேவை அளிக்க வேண்டும். அப்போதுதான் நம்பகத்தன்மை ஏற்படும். நம்பகத்தன்மை உருவாக்குவதோடு அதைத் தொடர்ந்து காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பும் உள்ளது.

பொதுவாக சி.இ.ஓ.க்கள் பரபரப்பாக, டென்ஷனாக இருப்பார்கள், உங்களால் எப்படி மிக இயல்பாக இருக்க முடிகிறது?

வேலையின் தன்மை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அதைச் செயல்படுத்தும் மனித வளத்தை சரியாக புரிந்து கொண்டால் பரபரப்பும், டென்ஷனும் இருக்காது. மேலும் சிஇஓ என்பவரின் தனிப்பட்ட இலக்கும், நிறுவனத்தின் இலக்கும் ஒரே திசையில் செல்ல வேண்டும். இரண்டும் வேறாக இருக்கும்பட்சத்தில் பிரச்னை ஏற்படும். இலக்கை எட்ட முடியாது.

அடுத்த இலக்கு?

ஒரே சமயத்தில் கூடுதலாக பணி மனைகளைத் திறப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஒரு பணி மனை திறக்கப்பட்டால், அதற்கான முதலீடு மற்றும் வருவாய் தொடர்ந்து கிடைக்கும் என்ற உறுதி செய்யப்பட்ட பிறகே அடுத்ததைத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இருப்பினும் 200 பணிமனைகள் தொடங்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது. ஆண்டுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீத அளவுக்கு வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதுதான் இலக்கு.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிளை தொடங்குவது குறித்து உரிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்