‘அசோகர் சாலைகள் அமைத்தார்... மரங்கள் நட்டார்..’ என்று வரலாற்று பாடத்தை விருப்பமில்லாமல் மேம்போக்காக படித்தவர்கள் இங்கு அதிகம். ஆனால் பில் ட்ரேட்டனுக்கு தனது வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஆதர்ஷ நாயகனாய் அசோகர் தென்பட்டார். அதற்கு முன்னர் காந்தி மற்றும் வினோபா பாவே செயல்பாடுகளை அறிய இந்திய வரலாற்றை கரைத்துக் குடித்திருக்கிறார். இங்கு வந்து பாவேவின் களப்பணிகளை நேரில் பார்த்திருக்கிறார்.
“எப்படி முடிகிறது இவையெல்லாம்?” என நிறைய யோசித்திருக்கிறார் ஹார்வர்டில் பொருளாதாரம் படித்து, பின் சட்டம் படித்து நிர்வாக ஆலோசகராக இருந்தவர் பில் ட்ரேட்டன்.
பின்னர், அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் உதவி ஆட்சியாளராக 1978-ல் இருந்தார். அப்போது துவங்கப்பட்டது தான் அசோகா அமைப்பு. அசோகா சமூக மாற்றம் சார்ந்த தொழில் முனைவோருக்கான மூலதன நிறுவனம் என சுருக்கமாக சொல்லலாம்.
சமூக சிந்தனையையும் நிர்வாகத் திறமையையும் இணைக்கும் புள்ளிகள் எவை என்று ஆராய்ந்திருக்கிறார்.
சமூகத்தை மேம்படுத்தக்கூடிய, அதை தொழிலாக செய்யத்தக்க, பழுதில்லாத விழுமியங்கள் கொண்ட மனிதர்களை தேடிப் பிடித்து நிதி உதவி செய்கிறது அசோகா. 2004 வரை கிடைத்த புள்ளி விவரத்தின்படி உலகமெங்கும் 1400 சமூக முனைவோருக்கு இந்திய மதிப்பில் 180 கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
கிராமீன் வங்கி பற்றி புத்தகம் எழுதிய டேவிட் போர்ன்ஸ்டீன் எழுதிய புத்தகம் இது. 5 ஆண்டுகள் களப்பணி செய்து 90 சமூக முனைவோரை உலகம் முழுவதும் சென்று சந்தித்த பின் எழுதிய புத்தகம். பில் ட்ரேட்டனின் அசோகா அமைப்பு மூலம்தான் இந்த புத்தகம் எழுதப்பட்டது. பெங்குவின் வெளியிட்ட How to Change the World : Social Entrepreneurs and the Power of New Ideas இந்த புத்தகம் 2004-ல் வெளி வந்தது.
முதலிலேயே சொல்லி விடுகிறேன்: தமிழில் திரு. பொன் சின்னதம்பி முருகேசன் என்பவரால் மொழி மாற்றம் செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த Centre for Social Initiative and Management என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. “புதியதோர் உலகம் செய்வோம்” என்கிற தமிழ் தலைப்பும் மிக கச்சிதம்.
இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி அணிந்துரை வழங்கியிருக்கிறார். இந்த சமூக தொழில்முனைவோரின் கதைகள் மேம்பட்ட உலகை அமைக்கப் புறப்பட்டவர்களுக்குத் தூண்டுதலளித்து ஊக்குவிக்கும்” என்று இந்தப் புத்தகம் பற்றி கருத்து தெரிவிக்கிறார் சமீபத்தில் மறைந்து நம் நினைவில் வாழும் நெல்சன் மண்டேலா.
9 சமூக முனைவோரின் கதைகள் தான் இந்த புத்தகம். சமூக தொழில்முனைவோருக்கும், தொழில் முனைவோருக்கும் என்ன வேறுபாடு? முன்னவர்கள் சமூக மாற்றத்திற்கு வித்திடுபவர்கள். பின்னவர்கள் பொருளாதாரம் பெருக உழைப்பவர்கள். பொருளாதார முன்னேற்றம் சிலருக்கு சமூக மேம்பாட்டைத் தரும். ஆனால் சமூக மாற்றம் பொருளாதார விடுதலையை பெற்றுத்தரும்- மிகப் பெரிய அளவில்.
ஊனமுற்றோர் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கு பணியாற்றும் புது டெல்லியைச் சேர்ந்த ஜாவேத் அபிதி, குழந்தைகளுக்கான அவசர உதவி தொலைபேசியை நிறுவிய மும்பையைச் சேர்ந்த ஜெரு பில்லிமோரியா, மாற்றுக் கல்வி முறைகளை நடைமுறைப் படுத்தும் கிளோரியா தி சோசா, கிராமப்புறத்திற்கு குறைந்த விலை மின்சார வினியோகம் செய்யப் போராடிய பிரெசிலைச் சேர்ந்த ஃபெபியொ ரோசோ என மெய்சிலிர்க்க வைக்கும் கதைகள்.
எல்லா செயல்பாடுகளும் கல்வி, மருத்துவம், கிராமப்புற வளர்ச்சி, குழந்தைகள் / பெண்கள் மேம்பாடு போன்ற துறைகளிலேயே உள்ளது ஒவ்வொருவரையும் ஆசிரியர் நேரில் சந்தித்து பேசி அனுவங்களை எழுதியது கருத்தாக்கத்தின் மீதும் செயல்பாடுகள் மீதும் நம்பகத்தன்மையை கூட்டுகின்றன.
இவ்வளவு ஊக்கம் தரும், உண்மைக்கதைகள் கொண்ட, சமூக முனைவோர் பற்றி கருத்தாக்கம் கொண்ட, நம் நாட்டிற்கு பெரிதும் தேவையான இந்த ஆங்கிலப் புத்தகமும் அதன் தமிழாக்கமும் ஏன் பெரிதாகப் பேசப்படவில்லை எனத் தெரியவில்லை.
என்னைக் கேட்டால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக நலப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், தனியார் நிறுவன முதலாளிகள், அரசு அதிகாரிகள், திட்டப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் அவசியம் இதைப் படிக்க வேண்டும்.
நம்மாழ்வார் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி யோசித்துப்பார்த்தால் இன்னமும் அதிக ஆதரவு, அதிக உதவி, அதிக வெளிச்சம் அவருக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர் மரணத்திற்கு வந்த கூட்டம் பற்றி இதழியல் சார்ந்த நண்பர் கூறுகையில் 'ஜீன்ஸ்' இளைஞர்கள் தான் நூற்றுக் கணக்கில் வந்திருந்ததாகச் சொன்னார்.
நிஜ நாயகர்களை அறிந்து கொள்ள, கொண்டாட, இணைந்து செயல்பட என்றுமே இளைஞர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை சரியாக பதிவு செய்து, ஆதரவளித்து அவர்களின் கருத்தாக்கங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதுதான் குறைவாக உள்ளது.
நம்மில் பலருக்கு உலகை உன்னதப்படுத்தும் கனவுகள் உண்டு. அதற்கான ஆசை மட்டுமின்றி அதற்கான பல திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். லாபம் மட்டுமே குறியாக செயல்படும் நிறுவனங்கள் நடத்த தேவைப்படும் திறன்களில் பல சமூக
மாற்ற நிறுவனங்களுக்கும் தேவைப்படுகின்றன. ஒரு அரசியல் கட்சி நடத்த தேவைப்படும் திறன்களில் பல, இந்த சமூக மாற்ற நிறுவனங்களுக்கும் தேவைப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் பொதுவாக நிர்வாகத்தில் நேர்மையும், ஒளிவு மறைவற்ற தன்மையும் வழி நடத்தும் மனிதர்களின் ஒழுக்கமும் அதிமுக்கியமானவை.
தனியார் நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) சட்டம் மூலம் கட்டாயமாக்கப்பட்ட இந்தத் தருணத்தில் அரசும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து 100 புதிய சமூக முனைவோர்களை சுலபமாக தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். ஊடகங்கள் புதிய முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்லலாம்.
எந்த பின்புலமும் கட்சி கட்டமைப்பும் இல்லாத ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு நிதர்சனம் மேல் உள்ள தீராத வெறுப்பும், நம்பிக்கை தரும் புதிய முயற்சிக்கு ஆதரவளிக்கத் தயாரானதும்தான் காரணம்.
ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கணும் என்பவர்கள் அவசியம் இதைப் படிக்க வேண்டும்.
“கெட்ட போரிடும் உலகத்தை வேறோடு சாய்ப்போம்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் சூளுரைக்கு முதல் வரி தான் தீர்வாகத் தெரிகிறது. புதியதோர் உலகம் செய்வோம்!
புத்தகத்தின் அட்டை சிவப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago