உங்களால் உலகை மாற்றமுடியும் என்று நம்புங்கள்.
- வில்லியம் ஹியூலெட், டேவிட் பக்கார்ட்.
தொழில் நுட்பத்தின் முன்னணியில் நிற்கும் நிறுவனங்கள் எவை என்று கேட்டால், எல்லோரும் சொல்லும் பதில், கூகுள், ஆப்பிள், அமேசான். உங்களுக்கு முன்னோடி யார் என்று கூகுள், ஆப்பிள், அமேசானைக் கேளுங்கள். அவர்கள் பதில் நிச்சயமாக, ஹியூலெட் அண்ட் பக்கார்ட் என்றுதான் இருக்கும். ஏன் தெரியுமா? தொழில் தொடங்கப் பணம்தான் முக்கிய தேவை, வசதிகள் இல்லாவிட்டால் தொழில் அதிபர் ஆகமுடியாது என்று எல்லோரும் நினைத்த காலத்தில், தங்கள் மூளையை மட்டுமே மூலதனமாக வைத்து, தங்கள் வீட்டு காரேஜில் நிறுவனத்தை தொடங்கி, அதை பல்லாயிரம் கோடி நிறுவனமாக்கியவர்கள் ஹியூலெட்டும், பக்கார்டும்.
இரண்டு நண்பர்கள் சேர்ந்து நிறுவனத்தை தொடங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆரம்ப காலங்களில் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள்.
கம்பெனி வளரும்போது, சில ஆண்டுகளில் வெற்றி என்னால்தான் என்று இருவர் மனங்களிலும் தன்முனைப்பு தலைதூக்கும், உரசல் வரும், விரிசலாகும். இருவரும் மனக் கசப்போடு பிரிவார்கள். பிசினஸுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் முற்றுப்புள்ளி வரும். இதற்கு எதிர்மறையாக,
‘இரண்டு கைகள் நான்கானால், இருவருக்கேதான் எதிர்காலம்’ என்னும் உறுதியோடு 57 வருடங்கள் இணைந்திருந்து கம்பெனியைச் சிகரங்கள் தொடவைத்த ஹியூலெட், பக்கார்ட் ஆகியோர் வாழ்க்கை, கூட்டுத் தொழில் தொடங்கும் அனைவருக்கும் அற்புதப் பாடம்.
இருவருக்குள்ளும் எத்தனை ஆழமான புரிதல் தெரியுமா? கல்லூரித் தோழர்கள் இருவரும் 1938 இல் பிசினஸ் தொடங்க முடிவெடுக்கிறார்கள். நிறுவனத்துக்கு பெயர் வைக்கவேண்டும். யார் பெயர் முதலில் வரவேண்டும்? ஹியூலெட் அண்ட் பக்கார்ட் என்னும் பெயரா, அல்லது பக்கார்ட் அண்ட் ஹியூலெட் என்னும் பெயரா? பூவா, தலையா போட்டுப் பார்க்கிறார்கள். பூ விழுந்தால் முதல் பெயர்; தலை விழுந்தால் இரண்டாம் பெயர். ஒரு வயது மூத்த பக்கார்ட் நாணயத்தைச் சுண்டுகிறார். தலை விழுகிறது. அப்படியானால், பெயர், பக்கார்ட் அண்ட் ஹியூலெட்தான். இப்போது ஒரு டுவிஸ்ட். தன் பெயர் முதலாவதாக வரக்கூடாது என்று அடம் பிடிக்கிறார் `சுண்டுதலில்’ ஜெயித்த பக்கார்ட். ஹியூலெட் அண்ட் பக்கார்ட் என்று பெயர் வைக்கிறார்கள். நண்பேன்டா!
ஹியூலெட்டின் அப்பா வழக்கறிஞர். சிறு வயது முதலே ஹியூலெட் சூட்டிகையான பையன். அறிவியலில் அபார ஈடுபாடு. வீட்டில் பரிசோதனைகள் செய்வான். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே வெடிமருந்துகள் உபயோகித்தார்கள். காலி டிரம்களில் இருந்த வெடிமருந்தை எடுத்துக்கொண்டு வந்தான். ஒரு குழாயில் போட்டுச் சுத்தியலால் அடித்தான். வீடே குலுங்கியது. அவன் இடதுகைக் கட்டைவிரல் உருத்தெரியாமல் போனது. வாழ்நாள் முழுக்க அடையாளம். அலறி துடித்து ஓடிவந்த அம்மா, இனிமேல் அவன் வெடிமருந்து பக்கமே போகக்கூடாது என்று தடை உத்தரவு போட்டார். ஹியூலெட் கவனம் ரேடியோ பக்கம் திரும்பியது. பள்ளி நாட்களிலேயே, பாகங்களை வாங்கி ரேடியோ அசெம்பிள் செய்யும் திறமைசாலியானான். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர் ஆகவேண்டும் என்பது அவன் கனவு. உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் எலெக்ட்ரிக் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தான். அங்கே, ஹியூலெட் வகுப்பில் இருந்த இன்னொரு மாணவன் பக்கார்ட்.
பக்கார்ட் அப்பா டாக்டர். அவன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். பிறவியிலேயே அவனுக்கு டிஸ்லெக் ஷியா (Dyslexia) என்னும் நரம்புக் குறைபாடு நோய் இருந்தது. இதை உரை மாறுபாடு என்று தமிழில் சொல்வார்கள். இதனால், சொற்களை உச்சரிக்கவும், படித்துப் புரிந்துகொள்ளவும் இயலாத நிலை. இதனால், பக்கார்ட் ஆங்கிலத்தில் எலியாக இருந்தான்; ஆனால், அறிவியலிலும், கணிதத்திலும் புலி. மின் சாதனங்களை வீட்டில் அசெம்பிள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு.
ஒருமித்த சிந்தனையும், விருப்பங்களும் கொண்ட இருவரும் சந்தித்தனர். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. நெருங்கிய நண்பர்களானார்கள். 1934 இல், பல்கலைக் கழகப் படிப்பு முடிந்தவுடன், இருவரும் சேர்ந்து மின்கருவிகள் தொடர்பான பிசினஸ் தொடங்க முடிவெடுத்தார்கள்.
திட்டத்தில் ஒரு இடைவேளை. பக்கார்டுக்குப் பிரபல ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை கிடைத்தது. ஜெனரல் எலெக்ட்ரிக் வேலை எல்லோரும் ஏங்கித் தவிக்கும் வாய்ப்பு. ஆகவே, பக்கார்ட் அங்கே சேர்ந்தார். ஹியூலெட் எம்.ஐ.டி கல்லூரியில் முதுகலைப் படிப்புக்குச் சேர்ந்தார். படிப்பை முடித்தார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த டெர்மன், இரு இளைஞர்களின் நட்பையும், தொழில் முனைப்பு ஆசையையும் அறிவார். அதனால், இருவருக்கும் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை வாங்கித் தந்தார்.
வேலை நேரம் தவிர்த்த வேளைகளில், இரு நண்பர்களும், தங்கள் பிசினஸின் பூர்வாங்கத் திட்டங்களைத் தீட்டத் தொடங்கினார்கள். இருவரிடமும் மனம் நிறைய ஆசை இருந்தது. ஆனால், நோ மணி. மொத்தச் சேமிப்பைக் கூட்டினார்கள். 538 டாலர்கள்! ஆமாம், வெறும் ஐநூற்று முப்பத்தி எட்டு டாலர்கள். ஒரு மாதச் சாப்பாட்டுக்கே போதாத பணம். ஆனால், மனதில் உறுதி இருந்தால், ஜெயிக்கும் வெறி இருந்தால், வெறும் கையால் முழம் போடலாம் என்னும் வைரநெஞ்சம் இருவருக்கும்.
1938. ஆஸிலேட்டர் (Oscillator) என்னும் எலெக்ட்ரானிக் கருவி தயாரிக்க முடிவெடுக்கிறார்கள். பாலா ஆல்ட்டோ என்னும் இடத்தில், அடிசன் அவென்யூவில் 367 ஆம் எண் வீட்டில் தங்கியிருந்தார்கள். அங்கே, ஹியூலெட் அன்ட் பக்கார்ட் கம்பெனி (சுருக்கமாக HP) பிறந்தது.
தொழிற்சாலைக்கான இடத்துக்கு வாடகை தரக் கையிருப்பு இல்லை. ஆகவே, வீட்டில் இருந்த கார் நிறுத்தும் இடத்தில் `தொழிற்சாலை’ ஆரம்பம். முதலாளிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எல்லோருமே ஹியூலெட், பக்கார்ட் இருவரும்தான். மிகத் தரமான தயாரிப்பு. வால்ட் டிஸ்னி கம்பெனி எட்டு ஆஸிலேட்டர்களுக்கான முதல் ஆர்டர் தருகிறார்கள். அவர்கள் கை ராசியான கை. ஆர்டர்கள் குவிகின்றன. இரண்டு வருடங்கள். கேரேஜில் இடம் போதவில்லை. தொழிற்சாலையை வாடகை இடத்துக்கு மாற்றவேண்டிய சந்தோஷக் கட்டாயம்.
1950 களில் நிறுவனம் அமோக வளர்ச்சி காண்கிறது. புதுப் புது எலெக்ட்ரானிக் கருவிகள் நம்பர் 1 தரத்தில். ஜெர்மனியில் தொழிற்சாலை, ஸ்விட்சர்லாந்தில் மார்க்கெட்டிங் அலுவலகம் என அமெரிக்கா தாண்டிய வளர்ச்சி. 1962 இல் அமெரிக்காவின் பிரம்மாண்ட நிறுவனங்கள் பட்டியலில் 460 ஆம் இடம் பிடிக்கிறது. 1966. கம்ப்யூட்டர் தயாரிப்பு தொடக்கம். ஹியூலெட் பக்கார்ட் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் கள் விற்பனையிலும், லாபத்திலும் சிகரங்களை எட்டுகிறது.
பக்கார்ட், 1996 ஆம் ஆண்டு, தன் 84 ஆம் வயதில் மரணமடைந்தார்: ஐந்து வருடங்களுக்குப் பின், ஹியூலெட், தன் 88 ம் வயதில் உயிர் நண்பரைப் பின் தொடர்ந்தார்.
ஹியூலெட் பக்கார்ட் நிறுவனம் தொடங்கபட்ட கேரேஜ் இன்று அருங்காட்சியகமாக மாற்றப்படிருக்கிறது. அமெரிக்க அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுள் ஒன்றாக, இந்த அருங்காட்சியகத்தை அறிவித்திருக்கிறது.
ஹியூலெட், பக்கார்ட் ஆகிய இருவருக்கும், அரசும், தொழில்நுட்ப வல்லுநர்களும் சல்யூட் அடிப்பது ஏன்? இரட்டையரின் வியாபார வெற்றியா, கோடீஸ்வரர்களான சாதனையா? இல்லை, இவர்களைவிடப் பிரம்மாண்ட பிசினஸ் சாம்ராஜ்ஜியம் அமைத்த ஏராளமானவர்களை உலகம் சந்தித்திருக்கிறதே? ஹியூலெட், பக்கார்ட் இருவரும் பிசினஸில் அறிமுகம் செய்திருக்கும் மனிதநேயம்தான் இதற்குக் காரணம்.
இருவரின் குறிக்கோளும் லாபம் பார்ப்பதைத் தாண்டி நின்றது. ஊழியர்களின் அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே நெடுநாள் வளர்ச்சி சாத்தியம் என்று இருவரும் நம்பினார்கள். இதற்காக ஹியூலெட்டும், பக்கார்டும் எடுத்த சில நடவடிக்கைகள் 1940 களிலேயே அவர்களால் செயல்படுத்தப்பட்டவை என்பதை நினைக்கும்போது பிரமிக்கவைக்கின்றன.
கம்பெனி காலூன்றத் தொடங்கிய இரண்டாம் வருடமே, 1940 இல், பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் கேட்காமலேயே, கிறிஸ்மஸ் போனஸ் தருகிறார்கள். அடுத்து வருகிறது, இலக்கை எட்டும், மிஞ்சும் அனைவருக்கும் ஊக்க போனஸ். 1942. அனைத்து ஊழியர்களுக்கும், கம்பெனிச் செலவில் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள். ’நாம் வெறும் சம்பளத்துக்கு உழைக்கும் வேலையாள் இல்லை. இது நம்ம கம்பெனி’ என்னும் பாசப் பிணைப்பு ஒவ்வொருவர் மனதிலும். உற்சாக ஊற்று பொங்க, தங்கள் முழுத் திறமையையும் வேலையில் காட்டுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் பரிமளிக்கிறான். இதைவிடச் சிறந்த சமுதாயத் தொண்டு வேறென்ன இருக்கமுடியும்.
தொடர்புக்கு: slvmoorthy@gamil.com
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago