எந்தத் தொழிலில் இறங்குவது?

By சொக்கலிங்கம் பழனியப்பன்

சென்ற வார கட்டுரைக்குப் பிறகு எனக்கு வந்த மின்னஞ்சல்கள் மூலம், முதன்முறையாக தொழில் செய்ய விரும்பும் தமிழர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதும், அவர்களின் ஆர்வமும் தெரியவருகிறது. எண்ணங்களைப் பரிமாறிக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

தொழில்செய்ய விரும்பும் பலர் எதிர்கொள்ளும் முதல் கேள்வி நான் எத்தொழில் இறங்க வேண்டும் என்பதுதான். பலருக்கும் இந்த நிலையைத் தாண்டி ஒரு தெளிவு பிறப்பதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடும். இந்த நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை தொழில் செய்பவர்களாக இருப்பார்கள் அல்லது தங்கள் குடும்பத்தினர் உள்ள தொழிலில் இறங்க விரும்பாதவர்களாக இருப்பார்கள்.

சிலருக்கு எத்தொழிலைக் கண்டாலும் அதைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் அல்லது என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கும். தொழில் செய்வதில் பிரசித்தி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தொடங்கப்படும் ஒவ்வொரு மூன்று தொழில்களுக்கும் ஒரு தொழில்தான் வெற்றி பெறுகிறது. ஆகவே நீங்கள் என்ன தொழில் செய்யப்போகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம்.

முதல்முறையாகத் தொழிலில் நுழைபவர்கள் எவ்வாறு தொழிலை தேர்ந்தெடுப்பது? இதற்கென்று தனியாக சூத்திரம் ஏதும் கிடையாது. தொழிலை தேர்ந்தெடுப்பவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். பலர் தனக்கு பரிச்சயமான தொழிலை செய்ய விரும்புவார்கள். ஆனால் சிலரோ, எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்குமோ அத்தொழிலில் இறங்க விரும்புவார்கள்.

இதில் முதலாமவர் சற்று ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புபவர்கள். தான் செய்யும் தொழிலை மிகவும் பரிசுத்தமாக செய்ய விரும்புபவர்கள். லாப விகிதாச்சாரங்கள் சற்றுக் குறைவாக இருந்தாலும் ஒப்புக் கொள்ளக்கூடியவர்கள். தனக்கு தெரிந்த தொழிலாதலால் மிகவும் ரசித்து செய்யக்கூடியவர்கள். அத்தொழிலில் லாபம் கிடைக்க சிறிது காலமானாலும், தொடர்ந்து தொழிலை நடத்தி வரும் தன்மையுடையவர்கள்.

இரண்டாமவர் தனக்கு தொழிலே தெரிந்திடாத போதிலும், அத்தொழிலில் வாய்ப்புகள் அதிகமென்பதால், நீச்சல் தெரியாமலேயே தண்ணீரில் குதித்துவிடக் கூடியவர்கள். இவர்கள் முதலாமவரைவிட ரிஸ்க் அதிகம் எடுக்க கூடியவர்கள். ஆனால் இவர்களுக்கு பொறுமை அதிகம் இருக்காது.

தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தொழிலில் லாபம் இல்லாவிட்டால் குறுகிய காலத்திலேயே அத்தொழிலை விட்டு வெளியே வர யோசிக்கமாட்டார்கள். அர்ஜுனனிற்கு எவ்வாறு பறவையின் கண் மட்டும் தெரிந்ததோ, அதைப் போலவே லாபம் ஒன்றே குறிக்கோளாக இவர்களுக்கு இருக்கும்.

ஒருவர் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், எத்தொழில் புதிதாக இருக்கிறதோ, எத்தொழிலில் வளர்ச்சி அதிகமாக உள்ளதோ, எத்தொழிலில் லாபங்கள் அதிகமாக உள்ளதோ அத்தொழிலில்தான் இறங்க வேண்டும். இது போன்ற தொழில்களில் தோல்வி சதவீதமும் அதிகம் என்பதையும் நினைவில் கொள்க! அதே சமயத்தில், வெற்றி கிடைத்தால் ஜாக்பாட் தான்!

நாம் மேல்பத்தியில் கூறிய தொழில்கள், பெரும்பாலும் புதிய பொருளாதார தொழில்களாகத்தான் இருக்கும் (New Economy Businesses). உலகெங்கிலும் புதிதாக வளர்ந்து வரும் தொழில்களான ஐ.டி, இன்டெர்நெட், இ-காமர்ஸ், பயோடெக்னாலஜி, மொபைல் அப்ளிகேஷன்ஸ் (IT, Internet, e-Commerce, Biotechnology, Mobile Applications etc.,) போன்ற பல அறிவுசார் தொழில்கள்தான் இன்றைய புதிய பொருளாதாரத் தொழில்கள்.

புதிய பொருளாதார தொழிலில் செல்லும் பொழுது பொதுவாக வரையறைகள் ஏதும் இருக்காது. உங்களையே நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்கு கூட ஒப்பீடுகள் இருக்காது. இவை எல்லாவற்றையும் கடந்துதான் நீங்கள் தொழில் செய்ய வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் முன்னோடியாக இருப்பதால், நீங்கள் செய்வதுதான் சட்டம் என்று ஆகிவிடும்.

பழைய பொருளாதாரத் தொழில்கள் (Old Economy Businesses) செய்யும்பொழுது எல்லா வரையறைகளும் உங்களுக்கு கிடைக்கும். ஒரு பொருளை என்ன விலைக்கு விற்க வேண்டும் அல்லது என்ன விலையில் விற்றால் எவ்வளவு லாபம் சம்பாதிக்கலாம், எந்த அளவு தொழில் செய்தால் லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் (BREAK-EVEN) இருக்கலாம், எது போன்ற இடத்தை தொழிலுக்குத் தேர்வு செய்ய வேண்டும் போன்ற அனைத்திற்கும் உண்டான விடையை நீங்கள் எளிதாகப் பெற்றுவிடலாம். நீங்கள் எடுத்துக்காட்டாக பார்த்துக் கொள்வதற்கு பலர் இருப்பர்.

நாம் மேற்கூறிய இரண்டில் உங்களுக்கு எது பொருந்தும் என யோசித்து பாருங்கள். இந்தியா போன்ற நாட்டில் இன்னும் வளர்ச்சியின் முதல் படியில்தான் நாம் இருப்பதால், பழைய பொருளாதார தொழில்களையும் விரிவுபடுத்தி பன்மடங்காக தொழிலை பெருக்குவதற்கு இன்னும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. உதாரணத்திற்கு கட்டுமானத் தொழில், போக்குவரத்து தொழில், சுற்றுலா சார்ந்த தொழில்கள், உணவகங்கள் போன்ற யாவும் பழைய பொருளாதார தொழில்கள்தான்!

இவையாவற்றிற்கும் இந்தியாவில் இன்னும் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. அதே சமயத்தில் சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜஸ்ட் டயல் (JUST DIAL) நிறுவனமும், இன்று இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்புள்ள டி.சி.எஸ் (TCS – Tata Consultancy Services) நிறுவனமும், பயோகான் (Biocon), ஃபிலிப்கார்ட் (Flipkart), ரெட்பஸ் (Redbus) போன்ற நிறுவனங்களும் இன்றைய புதிய பொருளாதாரத்தில் வாய்ப்புகள் எவ்வளவு உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

புதிய பொருளாதாரத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பு எப்பொழுதும் அதிகமாக இருக்கும்; ஏனென்றால் அந்நிறுவனங்களின் வளர்ச்சி பன்மடங்காக இருக்கும் என்பதுதான் முதலீட்டாளர்களின் கருத்து. இவை அனைத்தையும் ஒரு பரவலான முறையிலும் மற்றும் ஒரு மேக்ரோ (MACRO) கண்ணோட்டத்துடனும் உங்களுக்கு கூறியுள்ளேன். தனி நபர் ஆன நீங்கள் ஒரு சிறிய ஸ்டார்ட் அப் செய்யும் போது எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை வரும் வாரத்தில் காண்போம்.

prakala@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்