தொழிலில் பிரதானமானது நிதிதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொழிலுக்கு நிதி என்பது முதுகெலும்பைப் போன்றது. ஒரு நிறுவனத்திற்கோ அல்லது குடும்பத்திற்கோ அல்லது நாட்டிற்கோ அல்லது தனி மனிதனுக்கோ நிதி என்பது மிக மிக முக்கியமான ஒன்று.
நிதி நிலைமை சரியாக இல்லாவிட்டால் நாடாகினும், வீடாகினும், தொழிலாகினும் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு வந்துவிடும். நம்மில் பலர் மிகவும் போற்றுதற்குரிய தொழில்களை/ ஐடியாக்களை வைத்திருப்போம். ஆனால் நம்மிடம் சரியான நிதி ஒழுக்கம் இல்லாவிட்டால், தொழிலைத் திறம்பட நடத்த முடியாது அல்லது அந்த ஐடியாவைத் தொழிலாக்க முடியாது. இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் முதல் தலைமுறை தொழிலதிபர்கள் பலரும் கோட்டை விடுவது நிதி சம்பந்தபட்ட விஷயத்தில்தான்! அவர்களுக்கு நிதி பற்றின அறிவு அவ்வளவு இல்லாததால், அப்பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்துவிடுவர். ஆனால் அந்த மற்றொருவர் என்ன செய்கிறார் என்பதில் தான் இத்தொழிலதிபரின் வாழ்க்கையே அமையும்!
தவறுகள்
தொழிலில் நுழைந்தவுடன் செய்யும் பொதுவான தவறுகள் என்று பார்த்தால் மிகவும் அதிகமான வட்டிக்கு வெளியில் கடன் வாங்குவது, வேலையாட்களுக்கும் தனது சப்ளையர்களுக்கும் சரியான நேரத்தில் பணம் கொடுக்காமல் இருப்பது, கடனுக்கு பொருளை வெகுவாரியாக விற்பது, லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் இயந்திரங்களை வாங்கிவிடுவது, தன்னையும் தனது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளா மல் விடுவது, தனது சுகாதாரத்தைப் பேணிக்காக்காமல் இருப்பது என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அனுபவம் அவசியம்
இவற்றையெல்லாம் தவிர்ப்பது எப்படி? ஏற்கெனவே வேலை செய்து, பிறகு தொழில் ஆரம்பித்தவர்களுக்கோ அல்லது தொழில் பின்புலத்திலிருந்து வருபவர்களுக்கோ, நிதி எவ்வளவு முக்கியம் என்பதை தங்களின் கடந்த கால அனுபவங்களில் இருந்தே புரிந்து கொண்டிருப்பார்கள். அதனால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கன்சர்வேட்டிவ்வாகவும் (CONSERVATIVE) தொழிலில் ஈடுபடுவார்கள். ஆனால் முதல் தலைமுறை தொழிலதிபர்கள் எடுத்த எடுப்பிலேயே யோசிக்காமல் கையில் உள்ள பணத்தை செலவழித்து விடுவார்கள்; பிறகு தொழிலைத் தொடர முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
மூலதனம்
முதலில் பொதுவான வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம். உங்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் உள்ளது என வைத்துக்கொள்வோம். மேலும் நீங்கள் சுயமாக தொழில் ஆரம்பிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். நீங்கள் முழுநேர தொழிலில் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் தற்போது உங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானம் நின்று விடும். ஆனால் உங்கள் குடும்பச்செலவிற்கோ பணம் தொடர்ந்து தேவைப்படும். இதற்கும் மேல் நீங்கள் தொடங்கப் போகும் புதிய தொழிலுக்கு மூலதனம் தேவை. ஆக மொத்தத்தில் உங்களது சம்பளம் சுழி ஆகிவிட்டது. அதற்கு மேல் இரண்டு வகையான செலவுகள் (அன்றாட குடும்பச் செலவு மற்றும் தொழிலுக்கான மூலதனம்) உள்ளது.
திட்டமிடல்
இந்த இரண்டு செலவுகளுக்கும் முதலில் நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும். அவ்வாறு திட்டமிடும்பொழுது, முதலில் உங்களது குடும்பச் செலவை எவ்வளவு குறைக்க முடியும், எவ்வாறெல்லாம் குறைக்க முடியும் என்று பாருங்கள். நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழில் பிரேக் ஈவன் (BREAK–EVEN) அடைவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும். அந்த காலகட்டத்திற்கு உண்டான உங்கள் குடும்பச் செலவை தொழிலில் இறங்கும் முன்பே ஒதுக்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். இரண்டாவதாக உங்கள் தொழில் தன்னை தானே நிதியில் பூரணம் அடைவதற்கு மூன்று ஆண்டுகளாவது ஆகிவிடும் – பிரேக் ஈவன் வரைக்கும்! அதுவரை அத்தொழிலுக்கு உண்டான செலவுகளை நீங்கள் மூலதனமாக கொண்டு வரவேண்டும்.
தொழில் செலவுகளை பல வகையாக பிரிக்கலாம் - இடத்திற்கான வாடகைச் செலவு, வேலையாட்கள் ஊதியச் செலவு, லைசன்ஸ் (LICENSE) செலவுகள், ஆரம்பத்தில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு உண்டான பணம், தொலைபேசி, மின்சாரம் மற்றும் இதர செலவுகள் ஆகும். இச்செலவுகளை எல்லாம் முடிந்த அளவு துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது சாலச்சிறந்தது.
பிறகு நீங்கள் செய்யப் போகும் தொழிலில் இருந்து அடுத்த மூன்று வருடங்களில் கிடைக்கக் கூடிய லாபத்தையும் கன்சர்வேட்டிவ்வாக கணக்கிடுங்கள். உங்கள் தொழிலின் மூன்று வருட மொத்தச் செலவில் இருந்து இந்த லாபத்தை கழித்து கொள்ளுங்கள். மிஞ்சும் தொகைதான் நீங்கள் தொழிலுக்காக தயார் செய்ய வேண்டிய தொகை.
உதாரணத்துக்கு உங்கள் குடும்பத்தின் மாத செலவு ரூபாய் 15,000 என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்களுக்கு மூன்று வருடத்திற்கு தேவையான தொகை ரூபாய் 5.40 லட்சம் ஆகும். நீங்கள் செய்ய போகும் தொழிலுக்கு, அடுத்த மூன்று வருடங்களுக்கு, மாதத்திற்கு ரூ 15,000 வீதம், இன்னும் ஒரு 5.40 லட்சம் செலவாகும் என்று எடுத்துக்கொள்வோம்.
அப்படியென்றால், நீங்கள் தொழில் தொடங்கப் போகும் முன் ரூபாய் 10.80 லட்சம் சேகரித்துக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது!
பார்ட்னர்ஷிப்
நீங்கள் செய்யப் போகும் தொழில் மேல் நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றும் மேலும் உங்களிடம் இந்த அளவு பணம் இல்லை என்றும் வைத்துக் கொள்வோம். அதுபோன்ற சமயங்களில் உங்கள் திட்டத்துடன் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நாடுங்கள். அவர்களிடம் உங்கள் தொழில் திட்டத்தைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறி பார்ட்னர் அல்லது பங்குதாரராக ஆக்கிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்பம் மற்றும் தொழில் செலவு ஆகிய இரண்டையும்! உதாரணத்திற்கு நீங்கள் வசிக்கும் இடத்திலேயே ஆரம்பத்தில் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களுக்கு வாடகைச் செலவு மிச்சம். உங்களது வாழ்க்கைத் துணை அல்லது உறவினர்கள் வேலையை பகிர்ந்துகொள்ள வந்தால், உங்களுக்கு சம்பள ஆள் செலவு கிடையாது. இவ்வாறு வெகுவாக செலவுகளை குறைக்கும்போது உங்கள் தொழிலுக்கு தேவைப்படும் மூலதனம் வெகுவாக குறைக்கப்படும்.
அதே சமயத்தில் உங்களது வாழ்க்கை துணைவர் அல்லது துணைவி வேலைக்குப் போய் மாத மாதம் சம்பளம் கொண்டு வந்தால், உங்கள் குடும்ப செலவுகளுக்கு பிரச்சனை இருக்காது. நீங்கள் குடும்பச் செலவுகளுக்காக தொகையை தயார் செய்யாமலேயே குறைந்த மூலதனத்துடன் தொழிலை ஆரம்பிக்கலாம். இவ்வாறுதான் செலவுகளைக் குறைத்து பழைய தலைமுறையினரும் சரி, இன்றைய தலைமுறையினரும் சரி வெற்றிகரமாக தொழிலதிபர்கள் ஆகியுள்ளார்கள்.
நீங்கள் தொழிலில் இறங்குமுன்பு நிதிதிட்டமிடல் என்பது மிகவும் இன்றியமையாததாகும். உங்களால் வரவு செலவுகளை உத்தேசிக்க/ கணிக்க முடியாவிட்டால், நாம் ஏற்ெகனவே பார்த்தது போல் உங்கள் மானசீக குருவுடன் ஒரு நாள் அமர்ந்து ஆலோசியுங்கள். சிற்சில வரவு செலவுகளை அவராலும் உத்தேசிக்க முடியாவிட்டால் அது சம்பந்தப்பட்ட உங்கள் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் நிதியை திட்டமிடும் பொழுது, நீங்கள் செய்யப் போகும் தொழில் பற்றிய பல சிந்தனைகளும் கேள்விகளும் எழும். இவ்வாறு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நீங்கள் செய்யப்போகும் தொழில் லாபகரமானதா இல்லையா, உங்களுக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்து விடும். நிதிதிட்டமிடலின் முடிவின் பொழுது, ஒன்று நீங்கள் நினைத்த தொழிலின் மேல் மிகவும் நம்பிக்கை ஏற்படும் அல்லது இத்தொழில் சரியில்லை என்று உங்களுக்கு முடிவாகிவிடும்.
இந்த பயிற்சியின் முடிவு எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே! நீங்கள் அலசிய தொழில் சரியில்லை என்று முடிவானால், அடுத்த பிராஜக்ட்டை அலச ஆரம்பியுங்கள்! வரும் வாரத்தில் நீங்கள் எந்தெந்த விதமாக தொழிலை ஆரம்பிக்கலாம் என்பது குறித்தும் அவற்றில் உள்ள லாப நஷ்டங்கள் குறித்தும் பார்ப்போம்.
prakala@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago