ஒவ்வொரு இண்டர்வியூவிலும் இதை நான் தவறாது கேட்கிறேன்: “இந்த பையன் ரொம்ப இன்ட்ராவர்ட்டா இருக்கான். உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கற இவன் தேறமாட்டான். வாயைத் திறந்து கூட பேசாதவனை வச்சு எப்படி வேலை செய்யறது?”
இன்ட்ராவர்ட்:
“Introvert” : இன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஆளுமைப் பண்பு. கார்ல் யூங் எனும் உளவியல் அறிஞர் ஆளுமைகளை வகைப்படுத்தினார். தன் இருப்பிற்குத் தேவையான சக்தியையும் உந்துதலையும் உள்ளிருந்து பெறுபவனை இன்ட்ராவர்ட் என்றார். இவற்றை வெளியிலிருந்து பெறுபவனை எக்ஸ்ட்ராவர்ட் என்றார்.
ஒரு இன்ட்ராவர்ட் தன் உலகில் திளைத்து இருப்பவன். யாரும் இல்லாமல் தன்னை நிறைவாக வைத்து கொள்ளத் தெரிந்தவன். இவர்கள் தனியாக செய்யும் வேலைகளை விரும்பி செய்வார்கள். உணர்வுகளை தாமாக முன் வந்து பகிராதவர்கள். பேசுவதை விட கேட்பதில் கவனம் செலுத்துவார்கள்.
எக்ஸ்ட்ராவர்ட்
எக்ஸ்ட்ராவர்ட் ஆசாமிக்கு சுற்றிலும் ஆட்கள் வேண்டும். ரயிலில் அன்னியர்களிடம் கூட இவர்கள் கேட்காமலேயே கருத்து சொல்வார்கள். அரட்டை பிரியர்களான இவர்களுக்கு சீக்கிரம் எல்லாம் போரடித்துவிடும். ஒரு நிமிடம் தனியே இருந்தாலும் உடனே செல்போனிலாவது யாரிடமாவது பேசினால் தான் உயிர் வரும். இவர்கள் பிறர் சொல்வதை கேட்பதை விட தாம் பேசுவதில் குறியாக இருப்பார்கள்.
இது ஆளுமை வகைகளில் ஒரு சிறிய வகைப்பாடு. அவ்வளவு தான். இந்த ஆளுமைப் பண்பிற்கும் அறிவுத்திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால், அதிகம் பேசுபவன் அறிவாளியாகவும், பேச நேரம் எடுத்துக் கொள்பவனை அறிவு குறைந்தவனாகவும் மதிக்கிறது கார்பரேட் சமூகம். பேசாதவன் எதற்கும் வக்கற்றவன் என்று பெரும்பாலான நேரத்தில் கழித்துக் கட்டப்படுவதைத் தொடர்ந்து பார்க்கிறோம்.
பேசாத நபரின் திறமைகளை சோதிப்பது அந்த நேர்காணல் நடத்துபவரின் தேர்வுத்திறனை சோதிப்பதாகவும் உள்ளது. இது தரும் பாதுகாப்பின்மை தான் பலரை கூச்ச சுபாவம் கொண்டவர்கள் மீது வெறுப்பு கொள்ள வைக்கிறது.
கம்யூனிகேஷன் மட்டும் போதாது!
இண்டர்வியூவில் நன்கு பேசும் ஆள் வேலை கிடைத்தபின் எதிர்பார்த்தபடி வேலை செய்வதில்லை என்பதையும் அடிக்கடி பார்க்கிறோம். “இண்டர்வியுவில் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசினான். இப்ப வேலை சுத்தமா பத்தலை. ஆனா ஏன்னு கேட்டா அதுக்கும் அழகா விளக்கம் கொடுக்கறான், இ மெயில் போடறான், என்ன செய்ய? கம்யூனிகேஷன் ஸ்கில் தான் முக்கியம்னு எடுத்தது தப்பா போச்சு. வேலை செய்யறதை விட நல்லா கம்யூனிகேட் மட்டும் பண்றான்!” என்று விரக்தியாய் சொன்னார் ஒரு மேலாளர்.
ஆனாலும் நன்கு சரளமாக பேசும் எக்ஸ்ட்ராவர்ட்கள் மிக விரைவில் எதிராளி களை வசியப்படுத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது.
இன்று பல ஆய்வுகள் எக்ஸ்ட்ராவர்ட்களை விட இன்ட்ராவர்ட்கள் நல்ல, நம்பத்தகுந்த மேலாளர்களாக உருவாகிறார்கள் என்று நிரூபித்துள்ளது. எல்லா வேலைகளும் இரு வகையினரும் செய்யக்கூடியவைதான். விற்பனைத் துறையில் இன்ட்ராவர்ட்களையும் பார்த்திருக்கிறேன். தனித்து இயங்கும் ஆராய்ச்சியில் சில எக்ஸ்ட்ராவர்ட்களையும் பார்த்திருக்கிறேன். தொழில் தேவைக்காக இவர்களால் இயல்பு மாறி இயங்க முடியும் என்பதுதான் உண்மை.
அசத்தும் இன்ட்ராவர்ட்கள்:
ரஜினிகாந்த், அமிதாப், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் இன்ட்ராவர்ட்கள் தான். தனி வாழ்க்கையில் அளந்து பேசினாலும் வெள்ளித்திரையில் அதிரடியாக அசத்தவில்லையா? டெண்டுல்கரின் பேட் தான் அதிகம் பேசியது அவர் வாயை விட. அவரை உலகமே கொண்டாடவில்லையா? ஏ.ஆர். ரகுமான் என்றைக்காவது நீட்டி முழக்கி பேசி கேட்டதுண்டா? அவர் இசை தான் அதிக பட்ச பூகோளத்தை சுற்றி வந்துள்ளதே! இப்படி ஒவ்வொரு துறையிலும் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அதிகம் பேசாதவர்களை உலகம் பல நேரங்களில் தவறாகவே புரிந்து கொள்கிறது. அறிவு குறைந்தவர்கள், பேசத்தெரியாதவர்கள், அகங்காரம் பிடித்தவர்கள், யாரிடமும் ஒட்டாதவர்கள் என்று தரக்குறைவாகவே நினைக்கிறது.
“குழந்தை என்ன படிக்கிறான்?” என்று விருந்தாளி கேட்டால் உடனே குழந்தையை பதில் சொல்ல கட்டாயப்படுத்தி, அதற்கு தெரிந்த பாட்டெல்லாம் பாடச்சொல்லி துன்புறுத்தி, குழந்தை சற்று பேசாதிருந்தால் அதற்காக கூனி குறுகி பொய் காரணங்கள் சொல்லும் பல பெற்றோர்களைப் பார்க்கிறோம். எல்லா கேள்விகளுக்கும் டக் டக் என்று பதில் சொல்லும் குழந்தையைத் தான் புத்திசாலி என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் நம்புகின்றனர்.
உங்கள் முதல் அபிப்பிராயங்களை மறந்துவிட்டு அதிகம் பேசாத நண்பருடன் பழகிப் பாருங்கள். மறைந்திருக்கும் திறமைகள் ஒவ்வொன்றாய் தெரிய வரும். இன்ட்ராவர்ட்களின் நகைச்சுவை உணர்வு அபாரமானது. அது ஆரவாரம் இல்லாமல் ஆழமாக வெளிப்படும். வார்த்தைகள் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதால் அவை அசாதாரண வீச்சு கொண்டவை.
அதிகம் வெளிகாட்டப்படாத குணம் சூட்சமமாக சுருக்கமாக வெளிப்படும் போது அது மிகுந்த வீரியமுள்ள வார்த்தைகளாகத் தான் வெளிப்படும்.
முக நூலில் படித்தேன்: இயக்குனர் பாலா தன் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்தித்து பெற்ற தாக்கத்தை அறிந்த ஒரு எழுத்தாள நண்பர் “பிறகு சென்னை வந்து அவரை பார்க்க முயற்சி செய்யவில்லையா?” என்று கேட்டதற்கு “எதுக்கு?” என்று கேட்டு விட்டு நகர்ந்தாராம்! இதை விட ஆழமாக தெளிவாக தன் மன ஓட்டத்தை கூறமுடியாது என்பது என் கருத்து.
பேசாத பிள்ளையை ஒரு நோயாளியைப் போலவே பாவித்து என்னிடம் உளவியல் ஆலோசனைக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் உண்டு.
இருபது பேர் உட்காரும் கார்ப்பரேட் மீட்டிங்கில் அதிகம் பேசுவது இரண்டு மூன்று பேர் தான். ஒன்றுமே பேசாமல் எழுந்து போகும் பெரும்பான்மையினரின் பங்கு இல்லாமல் தான் பெரும்பாலான மீட்டிங் பலனற்று போகின்றன.
செய்ய வேண்டியது என்ன?
உங்கள் முன் அமர்ந்துள்ள நபர் தானாக அதிகம் பேசவில்லயா? பேச வைக்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து கேள்விகளால் துளைக்காதீர்கள். மௌனத்தை அனுமதியுங்கள். சிறு பதில்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள். “ஆம்” மற்றும் “இல்லை” என்று பதில் கூற முடியாத open ended questions கேளுங்கள். மொழிப் பிரச்சினை என்றால் அவரை சொந்த மொழியில் பேச அனுமதி யுங்கள். சில வழி முறைகளை வரைந்து காட்ட, எழுதிக் காட்ட அனுமதியுங்கள். மிக முக்கியம்: நன்கு காது கொடுத்து கேளுங்கள். இடையூறுகளை தவிர்க்கவும். சற்று நேரம் எடுத்து கூர்ந்து கவனிக்கவும்.
உலகின் பெறு மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் அனைவரும் சில கேள்விகளை தங்களின் உள் உலகத்திற்கு எடுத்துச் சென்று அதனுடன் ரகசியமாக போராடி வெற்றி கண்டவர்கள்.
உள்ளும் புறமும் இசைந்து இருப்பது தான் இயற்கை. பேச்சும் மௌனமும் ஆணும் பெண்ணும் போல. ஒன்றைப் போல ஒன்றில்லை. ஒன்றில்லாமல் ஒன்றில்லை!
டாக்டர். ஆர். கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago