தொழில் முன்னோடிகள்: தாமஸ் ஆல்வா எடிசன் (1847 - 1931)

By எஸ்.எல்.வி மூர்த்தி

ஜெயிக்க ஒரே நிச்சய வழி, இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதுதான்.

-தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன் யார் என்று கேட்டால், சின்னக் குழந்தையும் சொல்லும், ‘‘எலெக்ட்ரிக் பல்ப், மின்சார விநியோகம், சினிமா காமெரா, ஒலிப்பதிவுக் கருவி உள்ளிட்ட 1093 கருவிகளைக் கண்டுபிடித்த மாபெரும் விஞ்ஞானி.”

சாதாரணமாக, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் காசாக்கத் தெரியாதவர்கள். பிசினஸ்மேன்களோ, பிறர் கண்டுபிடிப்பைக் கோடிகளாக்கும் சாமர்த்தியக்காரர்கள். கண்டுபிடிப்புக்கும், பிசினஸூக்கும் வேறு வேறு வகைத் திறமைகள் தேவை. இரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் அதிசயப் பிறவிகள். எடிசன் அப்படிப்பட்ட அபூர்வம்.

கனடாவில் வசித்த சாமுவேல், நான்சி தம்பதியருக்குத் தாமஸ் நான்காவது குழந்தை. பிறக்கும்போது அவன் தலை மிகப் பெரியதாக இருந்தது. அதிக காலம் வாழமாட்டான் என்று டாக்டர்கள் சொன்னார்கள். சாமுவேல், நான்சி இருவரும், கண்ணின் மணிபோல, மணியின் நிழல்போல் அவனைப் பாதுகாத்து வளர்த்தார்கள்.

தாமஸின் சிறுவயதில் குடும்பம் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. குழந்தைப் பருவத்தில் எடிசனுக்கு ஸ்கார்லெட் ஃபீவர் என்னும் ஜூரம் வந்தது. காது கேட்கும் சக்தி குறைந்தது. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் பல வருடங்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டார்கள். ஏ.டி.எச்.டி (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) என்னும் மனநோய் வந்தது. மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் பராக்குப் பார்த்தல், அளவுக்கு மீறிய துறுதுறுப்பு ஆகியவை இதன் அடையாளங்கள். இதனால், பிறர் இவர்களை முட்டாள்களாகக் கருதுவார்கள்.

ஒருநாள். அவர்கள் வீட்டில் கோழி, முட்டைமேல் உட்கார்ந்து அடை காத்துக் கொண்டிருந்தது. எடிசன் கேட்டான், ‘‘அம்மா, கோழி ஏன் முட்டை மேல் உட்கார்ந்திருக்கிறது?” அம்மா சொன்னாள், ‘‘கதகதப்பாக இருந்தால் தான் முட்டை, கோழிக் குஞ்சாகும்.” மறுநாள்; எடிசனைக் காணவில்லை. ஒரு மூலையில் முட்டையின்மேல் உட் கார்ந்து “அடைகாத்துக்கொண்டிருந் தான்.” நான்சிக்குப் பொறி தட்டியது. எடிசன் முட்டாள் அல்ல, அவனுக்குள் அறிவு தூங்கிக்கொண்டிருக்கிறது.

நான்சிக்குப் புரிந்தது உலகத்துக்குத் தெரியவில்லை. நான்சி மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார். வகுப்புச் சிறுவர்களும், ஆசிரியர்களும் அவனுடைய பெரிய சைஸ் தலையையும், காது கேளாமையையும் தினமும் கிண்டல் செய்தார்கள்.

மூன்று மாதங்கள் ஓடின. ஒரு நாள். வகுப்பு ஆசிரியர், ‘‘உனக்குக் குழப்ப புத்தி. உன் மூளை காலியாக இருக்கிறது” என்று அவனைத் திட்டினார். குழந்தை பட்ட அவமானத்தால் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். வீட்டில் தானே அவனுக்குப் படிப்புச் சொல்லித்தர ஆரம்பித்தார். ஒன்பது வயதிலேயே கெமிஸ்ட்ரி சோதனைகள் பற்றிப் படித்து, அந்தப் பரிசோதனைகளை வீட்டில் செய்துபார்க்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிட்டான்.

எடிசனுக்குப் பதின்மூன்று வயது. அப்பாவின் வருமானம் போதவில்லை. வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை எடிசன் வீடு வீடாகப்போய் விற்று வருவான். அப்போது, அவன் ஊருக்கு ரெயில் வந்திருந்தது. ரெயில் வண்டியில் நாளிதழ்கள், மிட்டாய்கள், வேர்க்கடலை, பழங்கள், சான்ட்விச் ஆகியவற்றை விற்கும் வேலையில் சேர்ந்தான். காலை 6 மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்படுவான். பத்தரை மணிக்கு ரெயில் டெட்ராய்ட் ஜங்‌ஷன் போய்ச் சேரும். அங்கேயே நிற்கும். நான்கரை மணிக்குத் திரும்பி வரும். அதாவது, 6 மணிநேரம் ஸ்டேஷனில் சும்மா உட்கார்ந்திருக்கவேண்டும். எடிசன் டிரைவரிடம் அனுமதி வாங்கினான். ரெயில் பெட்டியிலேயே ஒரு சோதனைச்சாலை அமைத்துக்கொண்டான். ஒரு நாள், ரெயில் மேட்டில் ஏறி இறங்கியபோது, பாஸ்பரஸ் என்னும் கெமிக்கல் கீழே விழுந்தது. காற்றுப்பட்டவுடன் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது பாஸ்பரஸ். ரெயில் பெட்டி தீப்பிடித்தது. ரெயில் நிர்வாகம் எடிசனின் பரிசோதனைச் சாலைக்கு மூடுவிழா நடத்தினார்கள்.

ஒரு நாள். எடிசன் ஓடும் ரெயிலில் ஏற முயற்சித்தான். அவன் காதைப் பிடித்து ஒருவர் அவனை உள்ளே இழுத்தார். காதில் ஒரு “கடக்” சப்தம். எடிசனின் கேட்கும் சக்தி இன்னும் குறைந்தது. மனதில் தாழ்வு மனப்பான்மை வந்தது. பிறரைச் சந்திப்பதைத் தவிர்த்தான். டெட்ராய்ட் நூலகம் போனான். கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்தான். “நான் புத்தகங்கள் படிக்கவில்லை. மொத்த நூலகத்தையும் படித்து முடித்தேன்.” என்று பின்னாட்களில் கூறியிருக்கிறார்.

எடிசன் ரெயில் பயணிகளைக் கூர்ந்து கவனிப்பான். ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டு வருவார்கள். உள்ளூர்ச் செய்திகளை வெளியிடும் நாளிதழ் எதுவும் இல்லை என்று அவன் பிசினஸ்மேன் மூளை சொன்னது. ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதி வாங்கினான். ரெயில் பெட்டியிலேயே சிறிய பிரிண்டிங் மெஷின் போடச் சம்மதித்தார்கள். கிராண்ட் டிரங்க் ஹெரால்ட் என்னும் பேப்பர் தொடங்கினான். பேப்பரின் நிருபர், ஆசிரியர், அச்சிடுபவர், விற்பவர் எல்லாமே ஒரே ஆள்தான், 13 வயதுப் பொடியன். வரிக்கு வரி பிழைகள். விரைவில் அந்த பேப்பரும் மூடு விழா கண்டது.

1860. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. லேட்டஸ்ட் செய்திகளைத் தெரிந்துகொள்ள மக்களிடையே பரபரப்பு. இந்த ஆர்வத்தில், பணம் பண்ணும் வாய்ப்பு எடிசனுக்குத் தெரிந்தது. ஸ்டேஷனில் இருக்கும் தந்தி அனுப்புபவர்கள் ஒவ்வொருவரோடும் பேசினான். அடுத்த ஸ்டேஷனுக்குப் போர் நிலவரம் பற்றி அவர்கள் சுருக்குச் செய்தி அனுப்பவேண்டும். அடுத்த பல நிமிடங்களில், விரிவான செய்திகள் தாங்கிய டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் பேப்பரை விற்றபடி எடிசன் வருவான். அவன் விற்பனை 200 இலிருந்து 1,000 த்துக்கு எகிறியது. இதைவிட முக்கியமாக எடிசன் பிசினஸின் ஆதார சுருதியைப் புரிந்துகொண்டுவிட்டான் “உலகத்துக்கு எந்தப் பொருள் தேவைப்படுகிறது என்று தெரிந்துகொள்வேன். அடுத்ததாக, அந்தப் பொருளைக் கண்டுபிடிப்பேன்.”

ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் உதவியால், எடிசன் தந்தி அனுப்பும் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டான். துறைமுகத்தில் தந்தி அனுப்புநர் வேலை கிடைத்தது. வேலைப்பளு மிகக் குறைவு. ஓய்வுநேரங்களைப் பரிசோதனைகள் செய்வதில் செலவிட்டான். வயது 21 ஆனது. ‘‘நான் 50 வருடங்கள் வாழலாம். அதற்குள் செய்யவேண்டியது ஏராளம் பாக்கி இருக்கிறது.”

முதலில் தந்தி மெஷின் கண்டுபிடித்தார். சுமார் விற்பனைதான். அடுத்து, தேர்தலில் ஓட்டுக்கள் பதிவு செய்யும் இயந்திரம் செய்தார். யாரும் சீந்தவில்லை. தந்தி இயந்திரத்தோடு இணைக்கக்கூடிய பங்குச் சந்தையில் பயன்படும் இயந்திரம் அடுத்த படைப்பு. உரிமையை ஒரு நிறுவனத்துக்கு விற்றார். கணிசமான பணம் வந்தது. புதுவிதத் தந்தி மெஷின் தயாரிக்கத் தொடங்கினார். முழுச் சேமிப்பையும் இழந்தார்.

புதுவாழ்வு தேடி நியூயார்க் போனார். தங்கத்தின் விலையைத் தினமும் கண்காணிக்கும் இயந்திரம் கண்டுபிடித்தார். இதை அடிப்படையாக வைத்து சொந்தக் நிறுவனம் ஆரம்பித் தார். வெற்றிமேல் வெற்றி வந்து சேர்ந்தது. சொந்த இடம் வாங்கி, பரிசோ தனைச் சாலை தொடங்கினார். தினமும் 18 மணிநேர ஆராய்ச்சி. தோல்விகள் கண்டு துவளாமல் விடாமுயற்சியோடு தொடரும் அணுகுமுறை எடிசனின் தனி அடையாளம். சில உதாரண அனுபவங்கள்:

ஒலிபெருக்கி இயந்திரக் கண்டுபிடிப் பில், ஜார்ஜ் என்பவர் எடிசனுக்கு உதவி யாளராக இருந்தார். 2 வருடங்கள் அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டன. “உங்கள் பணத்தை வீணாக் கிவிட்டேன். வேலையை விட்டுவிடு கிறேன்” என்றார். எடிசனின் உடனடி பதில், “கடவுள் ஒவ்வொரு சோத னைக்கும் ஒரு தீர்வை வைத்திருப்பார். நாம் கண்டுபிடிக்காவிட்டால், வேறொ ருவர் தீர்வைக் காண்பார். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.”

மின்விளக்குத் தயாரிப்பில் எடிசன் ஈடுபட்டிருந்தார். ஒளிவிடும் இழை எந்தப் பொருளால் செய்யவேண்டும் என்று தெரிய அவர் சோதனைசெய்து பார்த்தவை 2,000 வகை இழைகள்!

1931 இல், தன் 84 ஆம் வயதில் எடிசன் மரணமடைந்தார். ஆனால், மின்விளக்குகள், சினிமா, மியூசிக் சிஸ்டம் ஆகியவை இருக்கும்வரை, அவர் நிரந்தரமானவர், அழிவே இல்லாதவர்.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்