ஐஐஎம்-ல் படித்தவர்களுக்கு, குறிப்பாக ஐஐஎம். அகமதாபாத்தில் படித்தவர்களுக்கு எப்போதுமே தனிமதிப்புதான். ஐஐஎம் அகமதாபாத்தின் நான்காவது பேட்ச் மாணவர் எஸ்.சாண்டில்யா. ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்புத்தலைவர். இந்திய ஆட்டோமொபைல் நிறுவன சங்கங்களின் முன்னாள் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரிடம் ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட பல விஷயங்களை பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து..
ஐஐஎம் பற்றி இப்போது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோவையில் இருக்கும் உங்களுக்கு 1967-ம் ஆண்டே ஐஐஎம் பற்றி எப்படி தெரியும்?
பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நிர்வாகம் சொல்லிக்கொடுத்து, இரு வருட இறுதியில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. இந்த விளம்பரத்தைப் பார்க்காவிட்டால் நானும் என் அப்பாவை போல சிஏ முடித்திருப்பேன். வேலைக்கான வாய்ப்பு இருக்கிறது. இது ரிஸ்க் என்றாலும், அந்த முடிவினை எடுத்தேன். ரிஸ்க் எடுக்கும்போது அதனால் கிடைக்கும் வாய்ப்புகளையும் பட்டியலிட்டேன். வாய்ப்புகளே அதிகமாகத் தெரிந்தது. அதனால் ஐஐஎம்-ல் படித்தேன். இதேபோலதான் யூனியன் கார்பைட் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருந்தபோதிலும் அப்போது சிறிய நிறுவனமான ஐஷரில் வாய்ப்பு வந்தது. ரிஸ்க்கை விட வாய்ப்புகள் அதிகமாக தோன்றியதால் ஐஷரில் சேர்ந்தேன்.
நீங்கள் படித்தது பி.காம் மற்றும் எம்.பி.ஏ. ஆனால் ஒரு ஆட்டோமொபைல் துறையில் தலைமை பொறுப்பு வரைக்கும் உங்களால் எப்படி வரமுடிந்தது?
காமர்ஸ் படித்தால் இன்ஜீனியரிங் அறிவு இல்லை என்றோ, இன்ஜினீயரிங் படித்தால்தான் ஒரு நிறுவனத்தை நடத்த முடியும் என்பதோ இல்லை. இன்ஜினீயரிங் முடித்து நிதி நிர்வாகத்தில் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பலரை எனக்குத் தெரியும். நேரடியாக தொழிற்சாலையில் வேலை செய்வதற்குத்தான் ஆழமான இன்ஜினீயரிங் அறிவு தேவைப்படும். தொழிற்சாலையை நிர்வாகம் செய்வதற்கு ஓரளவு அறிவும் ஈடுபாடும் இருந்தால் போதும். நமக்குத் தேவையான டெக்னிக்கல் அறிவை அங்கு வேலை செய்யும் நபரிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். மேலும் நிறுவனத்தை நடத்த தொழில்நுட்ப அறிவு மட்டுமே போதாது. நிதி, வாடிக்கையாளார் மனநிலை, பணியாளர் சூழ்நிலை என பல விஷயங்களை பற்றித தெரிந்திருக்கவேண்டும். புதியதாக வேலைக்குச் சேரும் போதுதான் நீங்கள் இன்ஜினீயரா, காமர்ஸ் பட்டதாரியா என்பது பார்க்கப்படும். வேலையில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு உங்களது ஈடுபாடு, கடமை, கட்டுப்பாடு கொண்ட மனப்பான்மை மட்டுமே காரணமாக இருக்க முடியும். நமக்கு தெரியாதவற்றை மற்றவரிடமிருந்து கற்க ஆவலும் ஆர்வமும் தேவை. முன்னேற அவை தான் வழி காட்டும்.
இப்போதைய தலைமுறை இளைஞர்கள் வேலை மாறுவதை வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரே நிறுவனத்தில் நீண்ட வேலை பார்த்தே தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறீர்கள். எது சரி? இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
எனக்கும் இது மூன்றாவது வேலை. இதில் சரி தவறு என்று சொல்ல முடியாது. அவரவர்கள் முடிவை அவரவர்கள் தான் எடுக்கவேண்டும். இருந்தாலும் அடிக்கடி நிறுவனம் மாறும்போது, நம்பிக்கை போய்விடும். மேலும் ஒவ்வொரு நிறுவனமும், பணியாளர்களின் பயிற்சிக்காக பெரிய தொகையை செலவு செய்கிறார்கள். எனவே அடிக்கடி வேலை மாறும் நபரை வேலையில் எடுக்க பலமுறை யோசிப்பார்கள். இதை உணர்ந்து நிறுவனம் மாறுவது நல்லது.
ஒரு காலத்தில் லாரி என்றாலே, டாடா அல்லது அசோக் லேலண்ட் ஆகியவைதான் அதிகமாக இருந்தன. இந்த நிலைமையில் ஐஷர் லாரிகளை எப்படி சந்தையில் பொசிஷனிங் செய்தீர்கள்?
அச்சமயம் டாடா, அசோக் லேலன்ட் கன ரக வாகனங்களைத் தயாரித்தனர். நாங்கள் ஆரம்பத்தில் இலகு ரக வாகனங்கள்தான் தயாரித்தோம். இந்த சந்தையில் போட்டி குறைவு. ஆனால் நிசான், டிசிஎம், மாஸ்தா ஆகிய நிறுவனங்கள் எங்களுடன் இலகு ரக வாகன உற்பத்தியில் இறங்கினர். எரிபொருள் செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் லாரி உரிமையாளர்களின் முக்கியமான தேவை. அதற்கேற்ற வடிவமைப்பை ஆரம்பித்தோம். வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் மூலம் மிக அதிக வருமானம் / லாபம் ஏற்படவேண்டும் என்ற குறிக்கோளை முன்னிட்டு விற்பனை செய்தோம்.
டீலர் தேர்விலும் கவனம் செலுத்தினோம். சந்தையில் விற்பனைக்கு வரும்போது வாகனங்களை விற்பது மட்டுமல்லாமல், அவருக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறதா என்பதையும் நாங்கள் பார்ப்போம். மேலும் அனைத்து இடங்களிலும் உதிரி பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்தோம். வாகனங்களைப் பராமரிக்க பயிற்சியையும் அளித்தோம். இவை அனைத்தையும் செய்த பிறகே விற்பனையை ஆரம்பித்தோம்.
தொழிற்சாலையில் உற்பத்தியாகும் புதிய வாகனத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏற்கெனவே சந்தையில் இருக்கும் வாகனத்துக்கும் கொடுத்தோம். வாடிக்கையாளர் முன்னேற்றத்தில் தான் நம் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்ற அடிப்படையில் நிறுவனம் நடை பெற்றது.
மேலும் எங்களிடம் அதிகமான வாகனங்கள் வாங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களது வாகன பராமரிப்புச்செலவு குறைந்தது. மேலும் எங்களுடைய தயாரிப்புகள் விலை அதிகம் என்பதால் இந்த பாதை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. இருந்தாலும் எங்களின் நம்பிக்கையும், மனப்பாங்கும் அடுத்த நிலைக்கு உயர்த்தியது.
ஜப்பானின் யென் கரன்ஸி பிரச்சினை பெரிதாக இருந்த சமயத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். அதை பற்றி?
உதிரி பாகங்களை அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டி இருந்ததால் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. எங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்குமே இருந்தது. அதனால் இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து மொத்தமாக உள்நாட்டிலே தயாரிப்பதற்கான வேலையை ஆரம்பித்தோம். 1986இல் துவங்கிய நாங்கள் 1992-ம் ஆண்டே மொத்த இறக்குமதியை நிறுத்திவிட்டோம். அதைத்தவிர பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து யென் பிரச்சினையிலிருந்து விடுபட்டோம்.
எம்.என்.சி. நிறுவனங்களின் இந்திய பிரிவுகள் தாய் நிறுவனத்துக்கு (டெக்னாலஜிக்கு) அதிக ராயல்டி கொடுப்பதால் இந்திய நிறுவனங்களின் பங்குதாரர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களே? இது ஆட்டோ துறையிலும் இருக்கிறதே?
இது சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பொறுத்தது. நாங்களும் தொழில்நுட்பத்துக்கான ராயல்டி கொடுத்துவந்தோம். ஆனால் அப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடு இருந்தது. அதை நீக்கிய பிறகு அதிக ராயல்டி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட இரு தனி நிறுவனங்களின் இடையே எடுக்கும் முடிவை பற்றி நான் கருத்து ஏதும் சொல்ல முடியாது.
சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையின் லாபிதான் மிக அதிகம் என்று கேள்விப்படுகிறோம்...
லாபி என்பதை தவறாக புரிந்துக்கொள்கிறார்கள். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை பொறுத்துதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்பதை எடுத்துச்சொல்கிறோம். அரசு அதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கிறார்கள். அதற்கேற்ற வசதியை ஏற்படுத்தி தருகிறார்கள். இங்கு இவ்வளவு கார்கள், லாரிகள் ஓடுகின்றன என்றாலும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்தியா தேவை/நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரத்தில் இயங்குகிறது. அதனால் வாய்ப்பு இருக்கிறது. இதில் ஆட்டோ துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் இதில் சில நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கவில்லை. உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு வளர்ச்சி ஏற்படுகிறது. அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நாட்டுக்குத்தான் ஆதாயம்.
கடந்த சில காலாண்டுகளாக ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி குறைந்து வருகிறதே?
பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்தான் ஆட்டோமொபைல் துறையும் குறைந்தது. இதற்கு பல காரணங்கள். அதை விவரிக்க வேண்டும். கூடவே பணவீக்கமும் அதிகரித்தது. இருந்தாலும் எதிர்காலத்தில் இந்த துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
வளர்ச்சி இருக்கிறது சரி. ஆனால் லாரியை ஓட்டுவதற்கு டிரைவர்கள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. டிரைவருக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லையே?
முதலில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை சொல்லிவிடுகிறேன். அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுகிறேன். பல பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். இதில் உள்ள வாய்ப்புகள், எவ்வளவு சம்பாதிக்க முடியும், பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவற்றை பயிற்சி வகுப்புகளில் சொல்லித்தருகிறோம். ஆனால் டிரைவர்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. பாதுகாப்பு பற்றிய பயம், குடும்பத்துடன் இருக்க முடியாதது, அதனால் ஏற்படும் இதர பிரச்சினைகள் தனி.
இதை தவிர்ப்பதற்கு, இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஒரு நெட்வொர்க் அமைக்க வேண்டும். லாரி டிரைவர்களுக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு நாமக்கல்லில் இருந்து டெல்லிக்கு ஒரு லாரி செல்கிறது என்றால் எட்டு மணி நேரம் மட்டும் டிரைவர் ஓட்டவேண்டும். அதன் பிறகு வண்டியை அந்த நெட்வொர்க்கில் இருக்கும் இன்னொரு டிரைவர் அடுத்த எட்டு மணிநேரம். முதல் டிரைவர் வேறு வண்டி எடுத்து தான் வந்த இடத்துக்கு திரும்புவார். இம்மாதிரி ரிலே போல்
டிரைவர்களை உபயோகப்படுத்தவேண்டும். இதன் மூலம் பல நன்மைகள். டிரைவர்கள் அதிக நேரம் ஓட்ட மாட்டார்கள். அடுத்தநாள் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள். லாரி உரிமையாளர்களுக்கும் வண்டி அதிக ஓட்டம் இருக்கும். இதற்கு லாரி உரிமையாளர்கள் முயற்சி எடுக்கவேண்டும். இறுதி வாடிக்கையாளர்க்கு பொருள் வேகமாக வந்து சேர்கிறது. அனைவர்க்கும் நன்மையே.
விமானம், ரயில் போல லாரியை இயக்க வேண்டும். இவ்வாகனங்களை இயக்குபவர்கள் இறுதி வரை செல்வதில்லை.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago