எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் இறந்த காலம் மறைந்து, வருங்காலத்தின் கதவுகள் திறக்கும் காலம் வரும். கேள்விக்குறிகள் நிறைந்த எதிர்காலத்தைச் சந்திக்கும் தருணம். சிலர் தங்களுக்குப் பரிச்சயமான பழங்காலத்துக்குத் திரும்பிவிடுவார்கள். இன்னும் சிலரோ, புரியாத புது உலகுக்குள் நுழைவார்கள். இந்த இரண்டில் எது சரியானது என்று எனக்குத் தெரியாது. ஆனால், எது சாகசமானது, சந்தோஷம் தருவது என்று தெரியும்.
- ஃபில் நைட்
1960ஃபில் நைட் வயது 22. ஒவ்வொரு விநாடியையும் ருசித்து, அனுபவித்து வாழவேண்டும். இதற்கு எந்த வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்? மனம் முழுக்கக் கேள்விகள்.
பத்திரிகையாளராக பட்டம் வாங்கியிருந்தான். அப்பா ‘ஒரேகான் ஜர்னல்’ என்னும் நாளிதழ் நடத்திவந்தார். அதில் சேரலாம். ஆனால், அவன் சொந்தக் காலில் நிற்க விரும்பினான். ஆகவே, பத்திரிகைக்கு நோ, நோ.
படிப்பை முடித்தவுடன், ராணுவத்தில் சேர்ந்தான். ஒரு வருட அனுபவம். போர்கள் வரும்போது, களத்தில் இருந்தால் மட்டுமே த்ரில். பிற நேரங்களில் கட்டுப்பாடுகள் மனதுக்கு விலங்குகள் போடும். அவன் சுதந்திரப் பறவை. இந்த வாழ்க்கை சரிவராது.
தன் மனம் எந்தத் துறையில் நேரம் காலம், பசி, தூக்கம் பார்க்காமல் ஈடுபடுகிறது என்று ஆலோசித்துப் பார்த்தான். அந்தத் துறை, ஸ்போர்ட்ஸ். அதுவும், ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கெடுக்கும்போது அவன் நாடி நரம்புகளில் உற்சாகம் பாயும். வீடு முழுக்கப் பள்ளி, கல்லூரி நாட்களில் வாங்கிய கோப்பைகள், மெடல்கள். ஒரே ஒரு பிரச்சினை. எந்தத் துறையில் நுழைந்தாலும், அவனுக்கு நம்பர் 1 ஆக இருக்கவேண்டும். ஒலிம்பிக் ஸ்டாரோ, உலகச் சாம்பியனோ ஆகும் அளவுக்குத் தனக்குத் திறமை கிடையாது என்று அவனுக்குத் தெரியும். ஆகவே, ஸ்போர்ட்ஸூம் வருங்காலப் பாதையில்லை.
வேறு என்ன செய்யலாம்? நினைக்க, நினைக்க மனதில் குழப்பம். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படிப்புக்குச் சேர்ந்தான். வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம் என்பதால்.
ஸ்டான்ஃபோர்டில், ஃப்ராங்க் ஷாலென்பெர்கர் என்னும் பேராசிரியர் ``தொழில் முனைவு” பாடம் நடத்தினார். தொழில் முனைவோர்களின் ஒவ்வொரு நாளும், போட்டியாளர்களோடு நடக்கும் ஓட்டப் பந்தயம்; வெற்றியா, தோல்வியா என்னும் த்ரில் என்பதை உணர்ந்தான். கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. சொந்த பிசினஸ் தொடங்க வேண்டும். இப்போது மூளையில் ஒரு மின்வெட்டல். ஸ்போர்ட்ஸையே பிசினஸாக்கிவிட்டால்…
எப்படி அடுத்த அடி வைப்பது? ஷாலென்பெர்கரின் வகுப்பே இதற்கும் பதில் தந்தது. படிப்பில் ஒரு புராஜெக்ட் செய்யவேண்டும். அன்றைய காலகட்டத்தில் ஜப்பான் உயர்ந்த தரம் குறைந்த விலை என்னும் யுக்தியோடு உலகச் சந்தையில் புகுந்திருந்தது. டி.விக்கள், கார்கள் எனப் பல்வேறு பொருட்களில் அமெரிக்கத் தயாரிப்பாளர்களை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருந்தது. ஸ்போர்ட்ஸ் ஷூக்களிலும் இந்த மாற்றம் வரலாம் என்று ஃபில் நினைத்தான். ஜப்பான் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் என்பதையே புராஜெக்டாக எடுத்துக்கொண்டான்.
ஃபில் இந்த புராஜெக்டை வெறும் மதிப்பெண்ணுக்காகச் செய்யவில்லை; வாழ்க்கை இலக்காகச் செய்தான். தகவல்களைத் தேடித் தேடிச் சேகரித்தான். அமெரிக்க விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஜெர்மனியின் அடிடாஸ் ஷூக்களை பயன்படுத்தினார்கள். அடுத்த இடத்தில் இருந்தது ஜெர்மனியின் பூமா. ஜப்பானில் ``டைகர்” என்னும் பிராண்ட் இருந்தது. ஏனோ, அவர்கள் தங்கள் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவேயில்லை.
மூன்று மாதக் கடும் உழைப்பு. 50 பக்க அறிக்கை. வகுப்பின் சிறந்த அறிக்கைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. டைகர் ஷூக்களை இறக்குமதி செய்து அமெரிக்காவில் விற்பதுதான் தன் பிசினஸ் என்று ஃபில் முடிவெடுத்தான். அதற்காக ஜப்பான் போகவேண்டும்.
பிசினஸில் இறங்கும் ஆசையை அப்பாவிடம் சொன்னான். பயணத்துக்கு அனுமதியும், 15,000 டாலர்கள் பணமும் கேட்டான். 1962 காலகட்டம். 86 சதவீதப் புதுக் கம்பெனிகள், தொடங்கிய ஒரே வருடத்தில் மூடப்பட்டு வந்தன. 90 சதவீத அமெரிக்கர்கள் விமானத்தில் ஏறியதேயில்லை. ஏன், சராசரி அமெரிக்கன் தன் வீட்டிலிருந்து நூறு மைல்களைத் தாண்டி உள்ளூர்ப் பயணம்கூடச் செய்ததில்லை. அதுவும், வெளிநாட்டுப் பயணம். இந்தக் காரணங்களால், அப்பா சம்மதிப்பார் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை. ஆச்சரியமோ ஆச்சரியம். அனுமதியும், பணமும் தந்தார்.
டைகர் தொழிற்சாலை ஜப்பானின் கோபே நகரத்தில் இருந்தது. போனான். அன்போடு வரவேற்றார்கள். தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பித்தார்கள். கருத்தரங்கு அறையில் சந்திப்பு. ஏராளமான உயர் அதிகாரிகள்.
பேச்சு வார்த்தைகள் தொடங்கின.
“மிஸ்டர் நைட், நீங்கள் எந்த கம்பெனியிலிருந்து வருகிறீர்கள்?”
ஃபில் கம்பெனியே தொடங்கவில்லையே? எப்படிப் பெயர் இருக்கும்? ஒரு கணம் தயங்கினான். தான் வாங்கிய மெடல்கள், அவை கட்டப்பட்டிருக்கும் நீல நிற ரிப்பன் நினைவுக்கு வந்தது. தன்னையறியாமலேயே சொன்னான், “ப்ளூ ரிப்பன் கம்பெனி.”
அமெரிக்க ஷூ மார்க்கெட் பற்றிக் கேட்டார்கள். புராஜெக்ட் பண்ணியிருந்தபடியால் அத்தனை விவரங்களும் விரல் நுனியில். பிரமித்தார்கள். அமெரிக்காவின் ஏகபோக ஏஜென்டாக ப்ளூ ரிப்பனை நியமித்து ஒப்பந்தம் போட்டார்கள். ஃபில் சொர்க்கத்தில்.
டைகர் தங்கள் ஷூ சாம்பிள்களை அனுப்பித் தருவதாகச் சொன்னார்கள். அவை வந்துசேர சில மாதங்களாகும். ஏஜென்ஸி கிடைத்ததைக் கொண்டாட வேண்டாமா? கையிலோ பணம். சாதாரணமாக அப்போது யாரும் பயணித்துக்கொண்டிராத நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடிவெடுத்தான். புதிய வானம், புதிய பூமி, புதிய அனுபவம். சாகசம், சாகசம். அது ஒன்றுதானே வேண்டும் அவனுக்கு?
அடுத்த எட்டு மாதங்கள். ஹாங்காங், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, நேபாளம், இத்தாலி, இஸ்ரேல், துருக்கி, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இங்கிலாந்து, க்ரீஸ் எனப் பதினைந்து நாடுகள். இந்தியாவில் காசி, மும்பை, கொல்கத்தா. இந்தியாவில் ஒரு விசித்திர அனுபவம். காசி. கங்கை நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்தோடு குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே, சுடுகாட்டில் அரைகுறையாக எரிந்து, தூக்கியெறியப்பட்ட பிணங்கள் மிதந்து வந்துகொண்டிருந்தன. அவரே சொல்கிறார், “மாயையிலிருந்து நிஜத்துக்கு அழைத்துப் போ என்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. நான் இந்த மாயையிலிருந்து நிஜ வாழ்க்கைக்கு ஓடினேன்.”
ஃபில் ஊர் திரும்பினார். சாம்பிள்கள் வரவில்லை. ஒரு நிதி ஆலோசனைக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். பதினெட்டு மாதங்கள் ஓடின. ஒரு நாள். டைகர் ஷூ 15 ஜோடி சாம்பிள்கள் வந்து சேர்ந்தன. கல்லூரியில் தனக்குப் பயிற்சியாளராக இருந்த பெளவர்மேனிடம் காட்டினார். அவர் அவற்றின் தரத்தைப் பாராட்டினார். அது மட்டுமல்ல, பிசினஸில் பங்காளியாகவும் சம்மதித்தார். அவர் அனுபவம் பெரிய பலம். ஃபில் சம்மதித்தார். ஜனவரி 25, 1964. ப்ளூ ரிப்பன் கம்பெனி தொடங்கியது.
ஃபில் ஷூக்களைக் கடை கடையாய்க் கொண்டுபோய்க் காட்டினார். ஒருவர்கூட வாங்கத் தயாராக இல்லை. அடுத்து என்ன செய்யலாம்? நம் ஊரில் தள்ளுவண்டியில் சாமான்களை விற்பதுபோல், அமெரிக்காவில் காரில் கொண்டுபோய் விற்பார்கள். ஃபில் டிக்கியில் ஷூக்களை ஏற்றினார். ஒட்டப் பந்தயங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் போய்க் கூவிக் கூவி விற்கத் தொடங்கினார். விற்பனை சூடு பிடித்தது. அஞ்சல் முறை விற்பனைக்கு மாறுமளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. முதல் வருட விற்பனை 8,000 டாலர்கள்.
பெளவர்மேன் ஆலோசகர் மட்டுமே. வேலைச்சுமையைத் தனி ஆளாக ஃபில் சமாளிக்க முடியவில்லை. 1965. ஓட்டப் பந்தயத் தோழர் ஜாக்சன் ஊழியராகச் சேர்ந்தார். தன் சொந்தக் கம்பெனிபோல் ராட்சசத்தனமாக இரவும், பகலும் உழைத்தார். விற்பனை எகிறத் தொடங்கியது.
1966 20,000 டாலர்கள்
1967 84,000 டாலர்கள்
1968 1,00,000 டாலர்கள்
1969 1,50,000 டாலர்கள்
1970 3,00,000 டாலர்கள்
``பலமான அடித்தளம் போட்டுவிட்டோம். டைகரோடு சேர்ந்து மாளிகை எழுப்புவோம்” என்று ஃபில் மனக்கோட்டைகள் கட்டத் தொடங்கினார்.
டைகர் இப்போது தன் விஷ நகங்களை நீட்டியது. ப்ளூ ரிப்பனின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று குற்றம் சாட்டினார்கள். ப்ளூ ரிப்பன் கம்பெனியை விலைக்குக் கேட்டார்கள். ஃபில் மறுத்தார். பிற முகவர்களோடு பேச்சுவார்த்தைகள் தொடங்கினார்கள். ஏழு வருட உறவுக்கு, உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்கு, நம்பிக்கைக்குத் துரோகம். ஃபில் நெஞ்சம் சுக்கு நூறாகச் சிதறியது. முதுகில் குத்து, மனதில் ரணம். சபதம் எடுத்தார் - ஜெயித்துக் காட்டுகிறேன்.
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago