இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளது. ஃபிக்கி மற்றும் கேபிஎம்ஜி நடத்திய கருத்துக் கணிப்பில் விமான போக்குவரத்து 2020-ம் ஆண்டுகளில் மிகச் சிறந்த வளர்ச்சியை எட்டும் என்றும், 2030-ம் ஆண்டுகளில் விமான போக்குவரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா வளரும் என்றும் கணித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 0.5 (அரை) சதவீத மக்களையே விமான போக்குவரத்துத்துறை சென்றடைந்துள்ளது. இதனால் இத்துறைக்கு மிக வளமான எதிர்காலம் உள்ளது. ஹைதராபாதில் நடைபெறும் இந்தியன் ஏவியேஷன் 2014 மாநாட்டில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய விமான போக்குவரத்துத் துறை பெருமளவிலான மக்களைச் சென்றடையவில்லை. விமானத்தில் செல்வது என்பது இன்னமும் பெரும்பாலான மக்களின் கனவாகவே இங்கு உள்ளது. இதனால் இத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இருப்பினும் அதிகபட்ச வளர்ச்சியை எட்ட முடியாததற்கு சில பிரச்சினைகள் தடையாக உள்ளன.
வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் புதிய உத்தியான குறைந்தபட்ச கட்டணத்திலான விமான சேவையை அதிகரிப்பதாகும். மேலும் நவீன விமான நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். மேலும் தகவல் தொழில்நுட்ப உபயோகம் அதிகரிக்க வேண்டும். அதீத சோதனைகள் இல்லாத விமான நிலையம் மற்றும் உள்நாட்டில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இந்திய விமான போக்குவரத்துத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இத்துறையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் உத்திரவாதமான வருமானம் நிச்சயம் கிடைக்கும் என்று ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா கூறினார்.
பிராந்திய விமான நிலையங்கள் மூலமாகத்தான் இந்திய விமான போக்குவரத்தில் அதிகபட்ச வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது 450 விமான நிலையங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. உபயோகப்படுத்தப்படாத, கைவிடப்பட்ட விமான நிலையங்கள், விமான ஓடுதளங்கள் இங்கு ஏராளம் உள்ளன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக கிழக்குப் பகுதி மாநிலங்களில் விமான போக்குவரத்துக்கான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான எரிபொருளுக்கான விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கெடுபிடிகள் இல்லாத விமான நிலையங்கள் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. விமான அகாடெமி தொடக்கம் மற்றும் இத்துறையை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில்தான் முதல் முறையாக விமான எரிபொருளுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மெட்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் கூடுதல் விமானங்களுக்கு எரிபொருள் கட்டணத்தில் 15 சதவீதம் மட்டுமே விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது.
இதைப் போல விமான போக்குவரத்துத்துறையை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அனாவசிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு கெடுபிடிகள் விஷயத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டு போக்குவரத்தில் சங்கேத எண் பரிவர்த்தனை பகிர்தல், பயன்பாட்டு கட்டணத்தில் சலுகை, ஒருங்கிணைப்பு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை செய்யப்பட வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முதல் கட்டமாக அத்தியாவசிய விமான சேவை நிதியம் (இஏஎஸ்எப்) ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இது பல மடங்கு வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். சுற்றுலா மேம்படும், வேலை வாய்ப்பும் பெருகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்முக கலாசாரத்தை உள்ளடக்கிய நாடாக இந்திய திகழ்கிறது. புவியியல் அடிப்படையில் பல்வேறு சாதக அம்சங்கள் இந்தியாவுக்கு உள்ளன. மேலும் சுற்றுலாவுக்கு அதீத வாய்ப்புகள் உள்ளன. இப்போது விமான போக்குவரத்துத் துறையின் ஒரு முனையைத்தான் எட்டியுல்ளோம் என்று கேபிஎம்ஜி நிறுவனத்தின் நிறுவனர் அம்பர் துபே கூறினார்.
இந்தியாவுக்கு 1,600 விமானங்கள் தேவை
இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 1,600 விமானங்கள் தேவைப்படும் என்று போயிங் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. மொத்தம் 20,500 கோடி டாலர் முதலீடு இத்துறையில் வந்து சேரும் என்று கணித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மதிப்பீட்டில் 1,450 விமானங்கள் தேவைப்படும் என்றும் முதலீடு 17,500 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை அபரிமித வளர்ச்சியை எட்டும் என்று போயிங் நிறுவன துணைத் தலைவர் தினேஷ் ஏ கேஸ்கர் தெரிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவுக்கு 400 முதல் 1,000 விமானங்கள் தேவைப்படும் என்றும் அடுத்த 14 ஆண்டுகளும் மேலும் 1,000 விமானங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்ட டிரீம்லைனர் விமானங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏதும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விமானத்தில் இதுவரை 1.30 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் டிரீம் லைனர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 58 சதவீதம் பேர் தங்களது எதிர்பார்ப்புக்கும் மேலாக உள்ளதாக தெரிவித்தனர். 32 சதவீதம் பேர் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்ததாக கேஸ்கர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago