தொழில் முன்னோடிகள்: ஜாம்ஷெட்ஜி டாடா (1839 - 1904)

By எஸ்.எல்.வி மூர்த்தி

சேவை செய்வது என்றால் ஏழைகளுக்கு உணவு, உடை நலிந்த நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தருவது என்பவை மட்டுமே என்று நினைக்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்யும் கருணை நெஞ்சங்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால், பள்ளத்தில் விழுந்தோரைக் கைதூக்கி விடுவதால் மட்டுமே ஒரு நாடு முன்னேற முடியாது. திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் தந்து, அவர்களையும், நாட்டையும் உயர்த்துவதுதான் அனைத்திலும் மிகச் சிறந்த சேவை.

ஜாம்ஷெட்ஜி டாடா

இரான் நாட்டில் காலம் காலமாக மக்கள் ஜோராஸ்ட்ரிய மதத்தைக் கடைபிடித்தார்கள். (பின்னாட்களில் இவர்கள்) பார்ஸிகள் என்று அழைக்கப்பட்டார்கள். பத்தாம் நூற்றாண்டில், இரானில் இஸ்லாம் பரவியது. பார்ஸிகள் சொந்த மண்ணைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வந்தார்கள். இந்தியாவில் இவர்கள் குடியேறிய மாநிலம் குஜராத். விவசாயிகளாகவும், பூசாரிகளாகவும் வாழ்க்கை நடத்தினார்கள்.

பதினாறாம் நூற்றாண்டு. குஜராத் முகலாயப் பேரரசர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. சூரத்தில் தொழிற்சாலை தொடங்கும் தனி உரிமையை முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் இங்கிலாந்து அரசின் ஆசிபெற்ற கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். 1662 இல் இந்தத் தொழிற்சாலை வந்தது, முக்கிய வர்த்தக மையமாகவும் சூரத் மாறியது. 1668 இல் பிரிட்டிஷர் மும்பைத் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இந்த வர்த்தக வளர்ச்சி பார்ஸிகளுக்குப் பல வாய்ப்புக் கதவுகளைத் திறந்தது. ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள். பிரிட்டன் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்தார்கள்.

குஜராத் மாநில நவ்ஸாரி என்கிற ஊரில் டாடாக்கள் என்னும் குடும்பப் பெயர்கொண்ட அர்ச்சகர்கள் வசித்தார்கள். இந்தப் பரம்பரையில் வந்த நஸர்வான்ஜி டாடா அர்ச்சகர் வட்டத்திலிருந்து வெளியே வந்தார். ஆங்கிலம் படித்தார். அந்தக் காலகட்டத்தில், மதக் கட்டுப்பாடுகளால், இந்துக்கள் கடல் பயணம் செய்யத் தயங்கினார்கள். பார்ஸிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் கிடையாது. ஆங்கில அறிவும், தயக்கமில்லாக் கடல் பயணமும் தன் தனித்துவ பலங்கள் என்று நஸர்வான்ஜி உணர்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்கினார்.

நஸர்வான்ஜிக்கு வயது ஐந்து. அவரைவிடக் குழந்தையான ஜீவன்பாயோடு திருமணம் நடந்தது. பதினேழாம் வயதில், முதல் குழந்தை, ஆண் குழந்தை, ஜாம்ஷெட்ஜி டாடா. நஸர்வான்ஜியைப் பொறுத்தவரை, படிப்புத்தான் மிகப் பெரிய சொத்து. டியூஷன் மாஸ்டர்களை அமர்த்தினார். சிறுவயது முதலே, ஜோராஸ்ட்ரிய மந்திரங்களையும், கணக்கு வாய்ப்பாடுகளையும் மகன் மனப்பாடம் செய்யவைத்தார். அற்புதமான கணிதத் திறமையும், ஞாபகசக்தியும் ஜாம்ஷெட்ஜியின் கர்ண குண்டலங்களாயின.

ஜாம்ஷெட்ஜி மும்பையில் பட்டப் படிப்பு முடித்தார். பதினெட்டாம் வயதில் அப்பாவின் தொழிலில் சேர்ந்தார். அப்பா அவரை நிறுவனத்தின் கிளையை நடத்த ஹாங்காங் அனுப்பினார். இந்தக் கிளை சீனாவுக்குப் பருத்தி, அபின் (அப்போது மருந்தாக உபயோகிக்கப்பட்டது.) ஆகிய இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்தது; தேயிலை, பட்டு, கற்பூரம், பட்டை, செம்பு, பித்தளை, தங்கம் ஆகியவற்றைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவுக்கு அனுப்பியது. ஜாம்ஷெட்ஜி சீனாவிலும் நிறுவனத்தின் கிளை திறந்தார்.

இங்கிலாந்தில் இருந்த பஞ்சாலைகள் தங்களுக்குத் தேவையான பருத்தியை அமெரிக்காவிலிருந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இங்கிலாந்துப் பஞ்சாலைகளுக்கு அமெரிக்க சப்ளை கிடைக்கவில்லை. இந்தியாவிலிருந்து வாங்க முடிவு செய்தார்கள். டாடா அவர்களுக்கு இந்தியப் பருத்தியை ஏற்றுமதி செய்தார். வியாபாரம் அமோகமாக வளர்ந்தது. இதனால் டாடா லண்டனில் கிளை திறந்தார். அங்கே குடியேறினார். தொழில் வளர்ச்சிக்காகப் பலரிடம் கடன் வாங்கினார்.

1865 - இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்தது. அமெரிக்கப் பருத்தி சந்தைக்கு வந்தது. இந்தியப் பருத்தியை வாங்க ஆளில்லை. டாடாவின் நிறுவனம் திவாலானது. டாடா இந்தியாவுக்கு ஓடி வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. தனக்குக் கடன் கொடுத்த எல்லோருக்கும், நிலைமை சீரானவுடன் கடனைத் திருப்பித் தருவதாக வாக்களித்தார். இரண்டு வருடங்களில் மொத்தக் கடனையும் அடைத்தார். கடன் கொடுத்தவர்களுள் ஒருவரான ஹைதர், டாடாவின் நேர்மைகண்டு ஆச்சரியப்பட்டார். சொன்னார், “இளைஞனே, நீ வாழ்க்கையில் பல சிகரங்களைத் தொடுவாய்.’’வாழ்நாள் முழுக்க நேர்மை டாடாவின் சித்தாந்தமாக இருந்தது.

பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தொடங்கிய தேசத் தலைவர் தாதாபாய் நெளரோஜி அப்போது இங்கிலாந்தில் இந்தியர்கள் சங்கம் தொடங்கியிருந்தார். அந்தக் கூட்டங்களுக்கு அடிக்கடி டாடா போனார். அவர் மனதில் ஒரு உறுத்தல். இந்தியாவின் பருத்தியை மூலப்பொருளாக வைத்து இங்கிலாந்தின் நெசவாலைகள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றனவே? நம் நாட்டிலேயே ஏன் ஆலை தொடங்கக்கூடாது?

டாடா ஒரு நாள் தாமஸ் கார்லைல் என்னும் சிந்தனையாளர், எழுத்தாளரின் கூட்டத்துக்குப் போனார். கார்லைலின் ஒரு வாக்கியம் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்தது எல்லா நாடுகளுக்கும் உருக்குதான் பொன்னான செல்வம். இந்தியாவில் உருக்கு உற்பத்தி செய்வது காலத்தின் கட்டாயம் என்பதை டாடா உணர்ந்தார்.

டாடாவின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் இன்னொரு முக்கிய தேவையையும் அவருக்குக் காட்டியது. மின்சாரம் உற்பத்தியின் அச்சாணியாக இருந்தது. அன்று தேவைக்குப் போதுமான மின்சாரம் மட்டுமே மும்பைக்கு அருகில் தயாரிக்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத நீர்மின்சக்தி நிலையம் நிறுவ முடிவெடுத்தார்.

டாடா தினமும் காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பார். மதியம் 1 மணிக்குத்தான் அலுவலகம் போவார். அதுவரை, வாசிப்பு. இரவிலும் 2, 3 மணி நேரங்கள் துணைக்குப் புத்தகங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் முன்னேற்றக் கதைகளை அடிக்கடி படிப்பார். அறிவியல் கல்வி, தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் ஆகியவைதாம் இந்த நாடுகளின் வெற்றி ரகசியங்கள் என்று டாடாவுக்குப் புரிந்தது. ‘‘இந்திய இளைஞர்கள் மேலை நாட்டினருக்குச் சமமானவர்கள் மட்டுமல்ல, அவர்களை மிஞ்சும் திறமை படைத்தவர்கள்” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். ஆனால், அவர்களின் திறமையைப் பட்டை தீட்டும் உயர் கல்வி வசதிகள், ஆராய்ச்சிக் கூடங்கள் இந்தியாவில் இல்லை. இங்கிலாந்துக்குப் போகவேண்டிய கட்டாயம். தன்னைப்போன்ற வசதி படைத்தவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் படிக்க முடிந்தது. இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும்.

டாடா மனதில் இப்போது நான்கு கனவுகள் பருத்தி நெசவாலை, உருக்கு ஆலை, நீர்மின்சக்தி நிலையம், இளைஞர்களின் உயர்கல்வி நிலையம் ஆகியவற்றை உலகத்தரத்தில் தொடங்கவேண்டும். இந்தியா திரும்பினார். கனவுகளை ஒவ்வொன்றாக நிஜமாக்கும் முயற்சிகள் தொடங்கினார்.

மும்பையில் மூடப்பட்டிருந்த ஒரு மில்லைக் குறைந்த விலைக்கு வாங்கினார். தன் நிர்வாகத் திறமையால் லாபம் காட்டவைத்தார். விற்றார். கணிசமான பணம் கிடைத்தது. 1877 இல் எம்ப்ரஸ் மில் என்னும் புதிய நெசவாலை தொடங் கினார். நவீன இயந்திரங்கள், காற்றோட்டம், சுகாதாரம், முதலுதவி, விபத்து இன்ஷூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி, ஊக்கப் பரிசுகள் என அன்று இந்தியத் தொழிற்சாலைகளில் இல்லாத வசதிகள். விரைவில், இதே பாணியில் வந்தன பல டாடா நெசவாலைகள்.

1882. நெசவாலைகள் வெற்றிப் பாதையில். ஆகவே, உருக்குத் தொழிற்சாலை தொடங்கும் பூர்வாங்க வேலைகளில் இறங்கினார். உருக்குத் தயாரிப்புக்கு இரும்புத் தாதுவும் கரியும் முக்கிய மூலப்பொருட்கள். இவற்றின் சாம்பிள்களை ஜெர்மனியின் புகழ்பெற்ற பரிசோதனைச் சாலைக்கு அனுப்பினார். கரியின் தரம் போதாது என்று முடிவு வந்தது. இன்னும் ஒரு பிரச்சனை, அன்று இரும்புச் சுரங்கங்கள் அத்தனையும் பிரிட்டிஷார் வசம் இருந்தன. இந்தியத் தொழில் முனைவோர்களோடு பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் உருக் காலை தொடங்கும் திட்டத்தைத் தள்ளிவைத்தார்.

தேசபக்தியும், தொழில் வெறியும் நிறைந்தவரைத் தோல்விகள் தடுத்து நிறுத்தவே முடியாது. இரட்டிப்புத் தன்னம்பிக்கையோடு முன்னே பாயவைக்கும். அடுத்து வரும் ஆண்டுகள் காட்டப் போகின்றன, டாடாவின் அசுரவேகத்தை!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்