ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: தொழில்துறையினர் அதிருப்தி

By செய்திப்பிரிவு

வட்டி விகிதத்தை கால் சதவீத அளவுக்கு ரிசர்வ் வங்கி உயர்த்தியிருப்பதற்கு தொழில்துறையினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் (ஃபிக்கி) தலைவர் நைனா லால் கித்வாய் கருத்து தெரிவிக்கையில், “ஏற்கெனவே தொழில்துறையினர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை தொழில்துறைக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

ஏற்கெனவே தொழில்துறையினர் கூடுதல் வட்டிச் சுமையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு அதிக வட்டியும் ஒரு காரணமாகும்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் வட்டி உயர்த்தப்பட்ட அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் தொழில் துறையினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். இதுதான் இத்துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியாகும். ஆனால் அதை ரிசர்வ் வங்கி செய்யவில்லை.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ரெபோ வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும்.

ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் தவிர்த்திருக்க முடியும். ஏற்கெனவே மூலப்பொருள் விலையேற்றம், மின் வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளால் தவிக்கும் தொழில்துறையினருக்கு மேலும் கடன் கிடைப்பது இந்த வட்டி உயர்வால் தடைப்படும்” என்றார் கித்வாய்.

ரெபோ விகிதம் ஏற்கெனவே இருந்த 7.25 சதவீதத்திலிருந்து இப்போது 7.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE