கதை கதையாம் காரணமாம்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

என் ஒன்பதாம் வகுப்பு வரலாற்று ஆசிரியர் துரைக்குட்டி அவர்கள். உலக வரை படத்தை அனாயசமாக ஆணியில் மாட்டி விட்டு சாதாரணமாகத் தான் துவங்குவார். 45 நிமிடங்களில் மழை அடித்து ஓய்வது போல அப்படி பிரவாகமாக உருவெடுக்கும் அவர் பேச்சு. வகுப்பு எடுக்கும் போது தன் நீளத்தடியால் படத்தை அவ்வப்பொழுது சுட்டிக் காண்பிப்பார். அந்த அசையாத படத்தின் உதவியுடன் தான் நான் உலகை அசைத்த அத்தனை கதைகளையும் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

மொத்த மாணவர்களும் கட்டுண்டு கிடப்போம். எதிரில் அமர்ந்து கேட்கும் அனைவரையும் தன் கட்டுக்குள் வைக்கும் கலையை அவரிடன் கற்றதை இன்றும் நன்றியுடன் நினைவு கூறுவேன். நான் படித்த திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில், அக்காலத்தில் அனேகமாக அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த கதைசொல்லிகள் என்று சொல்லலாம். பாடம் எதுவாக இருந்தாலும் கதை நிச்சயம் உண்டு. தமிழ், இங்கிலீஷ், மாரல் சைன்ஸ் (அப்போது இருந்தது) என்று மட்டும் இல்லை மற்ற ஆசிரியர்களும் சமயம் கிடைத்த போதெல்லாம் கதை சொல்வார்கள்.

இது தவிர ராமாயண, மஹாபாரத உபன்யாசங்கள் கேட்கக் கிடைக்கும். இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல என் நண்பன் வி. சேஷாத்திரி (இன்ஷியல் முக்கியம். என் வகுப்பில் 3 சேஷாத்திரிகள்!) சொல்லும் சினிமாக்கதைகள் மிகப்பிரபலம்! வாத்தியார் வராத பீரியட்டில் சப்தம் போடாமல் ஏதாவது செய்யச்சொல்லி உத்தரவு வரும். அன்று வி.எஸ் காட்டில் மழை. மொத்த கிளாசுக்கும் தான் பார்த்த புதுப் படத்தை காட்சி வாரியாக சொல்லுவான். ஒரு முறை ‘இதயக்கனி’ கதை சொல்கையில் பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் பிடிபட்டான்.

பெரிதாக சத்தம் போட்ட பின், “சரி, கதையை முடிச்சுக்கோ. ஆனால் ராதா சலுஜா வர்ற சீன் எல்லாம் கொஞ்சம் சென்சார் பண்ணிச் சொல்லு” என்று அவர் சொன்ன போது மொத்த கிளாசும் ஆரவாரமாய் கை தட்டியது! குடும்பத்திலும் அப்பா, பெரியப்பா, சித்தப்பாக்கள் என அனைவரும் நல்ல கதை சொல்லிகள். அத்தையை கட்டிய மாமா அதில் மகா வித்தைக்காரர். காவேரிக் கரை பூர்வீகம் அவருக்கு. சொல்லவா வேண்டும். அவர் திருக்காட்டுப்பள்ளிக்கு படம் பார்க்க அழைத்துச் செல்வார். வரும் வழியில் சைக்கிள் மிதித்தவாறு சொல்லும் கதையில் நிச்சயம்

ஒரு பிசாசாவது சைக்கிளை பின் பக்கம் இழுக்கும். இன்று இன்னோவா அழுத்திக் கொண்டு பகல் நேரத்தில் காவேரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் பயணிக்கும் போது அந்த மரங்களில் அன்று பார்த்த பிசாசுகளை நினைத்துக் கொள்வேன். கதைகள் கேட்காமல் பிள்ளைகள் வளர்வது சாபக்கேடு. இன்று கதை சொல்ல மனிதர்கள் இல்லை. கேட்கவும் நேரம் இல்லை. பணம் பண்ண உதவாததை செய்வது புத்திசாலித்தனம் இல்லை என்கிறார்கள். பள்ளியில் மொழிப்பாடங்கள் கட் ஆஃபுக்கு பயன்படாததால் ஆப்பு வைத்தாயிற்று.

கலைக் கல்லூரிகளை காலி செய்தாயிற்று. டெக்னாலஜி என்று வால் இல்லாத படிப்புகளுக்கு மவுசு இல்லை. மொபைல் கைக்கு வந்த பின் யார் சொல்லும் வார்த்தைகளும் பாதி தான் காதில் விழுகிறது. எந்த குறுந்தகவலும் வரவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள பத்து வினாடிகளுக்கு ஒரு முறை கைப்பேசி காண்பது தற்போதைய நவ நாகரிக ரோகம்! தொலைக்காட்சியின் எல்லா பேச்சு நிகழ்ச்சிகளையும் உட்கார்ந்து பார்க்கிறோம். நிஜ வாழ்க்கையின் கதைகள் இல்லா வெறுமையை டி.வி. நிகழ்ச்சிகள் தற்காலிகமாகப் போக்குகின்றன. கதைகள் இல்லா சமூகம் கற்பனை இல்லா சமூகம். கற்பனை இல்லா சமூகம் தான் விளிம்பு நிலைக்கு விரைவில் தள்ளப்படுகிறது.

கதை சொல்லல், கதை கேளல் இரண்டும் போற்றி பாதுகாக்க வேண்டியவை. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனது வைத்தால் அது நிச்சயம் நிகழும். கதையை ஏளனமாக எண்ணும் மனோபாவத்தை உதறுவது முக்கியம். மழலையர் கல்வியில் கதை சொல்லல், கதை கேட்டல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும், பணியிடத்திலும். கதை சொல்லுதல் பகுப்பாய்வுத் திறன், நினைவுத் திறன், கற்பனைத் திறன், காட்சிப்படுத்தல் திறன், மொழித் திறன், உள்ளுணர்வு திறன், கேட்கும் திறன் என பல ஆதார உளவியல் திறன்களை கூர்மைபடுத்துகிறது.

சிக்கலான கூறுகள் கூட கதைகளினால் எளிமைபடுத்தப்பட்டு மக்களை சென்றடைகிறது. நல்ல ஆசிரியர்கள் சிறந்த கதைசொல்லிகளாக இருப்பது இதனால் தான். இன்று நான் நடத்தும் பல மனித வள பயிற்சிகளில் கதைத் திறன்களை வேறு வேறு பெயரில் நடத்திக் கொண்டிருக்கிறேன். நல்ல ப்ரெசண்டேஷன் செய்யத் தேவை கதை சொல்லும் திறன் தான். பி.பி.டி வெறும் கருவி. நம் அடிமை அது. அதை முதன்மைபடுத்தி விட்டு நாம் பின்னே நிற்கத் தேவையில்லை.

இன்றும் பல சீனியர் மேனேஜர்கள் பி.பி.டி போடுகையில் இருட்டில் குறட்டை சத்தமே கேட்கும். கண்ணுக்குத் தெரியாத எண்களைப் பார்த்து வாஞ்சையுடன் தனக்குத் தானே மைக்கில் முணு முணுக்கும் ஆசாமிகள் இருக்கிறார்கள். கதை சொல்லும் கலை தான் இவர்களை ( கூட்டத்தையும்) காப்பாற்றும் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். வேலைக்கான இன்டெர்வ்யூவில் தன்னைப் பற்றி சுவைபட கூறத்தெரிந்தவர் கவனிக்கப்படுகிறார். ஆங்கில அறிவை விட தாய் மொழியில் தனக்குத் தெரிந்ததை கோர்வையுடன் சொல்லத் தெரிந்த ஆட்கள் கண்டிப்பாக வேலைக்கு பரிந்துரைக்கப் படுவதுதான் உண்மை.

வேலை நிமித்தம் ஆங்கிலம் சுலபமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் கோர்வையாக துணிவுடன் பேசுவதைக் கற்க நாளாகும். பள்ளிகளிலும் பணியிடங்களிலும் கதை சொல்ல அனுமதிப்போம். அது அந்த இடத்தின் ஜனாயகத்தன்மையையும் கலாச்சார மாற்றத்தையும் வழி நடத்தும். மேலை நாடுகளைப் போல இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் மையங்கள் மெல்ல பரவி வருகிறது. இலக்கியத்திற்கும் நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் மட்டும் கதைகள் தேவைப்படவில்லை. வாழ்வின் சகல செயல்பாட்டிற்கும் கதைகள் தேவைப்படுகிறது.

ஒரு சுவாரசியமான உரையாடலுக்கு, பிறர் கவனம் பெற, தன் எண்ணத்தை கொண்டு செல்ல, பொருட்கள் விற்க, எதிராளியை சம்மதிக்க வைக்க, கதைகள் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. திரைக்கதை எழுதுவது எப்படி என்று அமரர் சுஜாதா எழுதிய புத்தகம் படித்து திரைக்கதைகள் எழுதியதை விட அதன் சாரத்தில் பயிற்சி வகுப்புகள் எடுத்தது தான் மிக அதிகம். மூன்று கட்டு திரைக்கதை அமைப்பிலேயே வியாபார வியூக வகுப்புகள் எடுப்பது பெரிய சுகம். கதைகளின் விதைகள் எங்கு கிடைக்கும், எப்படி முளைக்கும் என சொல்ல முடியாது.

அடுத்து என்ன என்ற சுவாரசியம் தான் கதைக்கும் வாழ்க்கைகும் பொதுவானது. ஒரு சினிமா நண்பர் தன் கதாநாயகியை என்ன மனோ வியாதி பெயரில் பேய் பிடிக்க வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டு வந்தார். கதையின் திகிலை விட அவர் கதை சொல்லும் திகில் பயங்கரமானதாக இருந்தது. படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தமான நடிகர் யாரென்றால்....

சரி, அடுத்த வாரம் பேசலாமே!

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்