வணிக நூலகம்: உடல் மொழி; உலகெங்கும் ஒரே மொழி

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

எதிராளியை சின்ன எக்ஸ்ட்ரா அறிவை கொண்டு ஏமாற்றிவிடலாம் என்று சொல்லுகின்ற புத்தகங்களை முதல் பார்வையிலேயே நிராகரிப்பேன். உடல் மொழி பற்றி ஆலன் பீஸ் எழுதிய முதல் புத்தகத்தை 20 வருடங்கள் முன் பார்த்த போது இப்படி உணர்ந்துதான் தொடாமலே இருந்தேன். என் எண்ணத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் எப்படி உட்காரணும் எப்படி கண்ணைப் பார்த்து பேசணும் என பல பயிற்சியாளர்கள் பம்மாத்து பண்ணுகையில் ஆலன் பீஸ் பற்றி குறிப்பிடுவார்கள். கண்டிப்பாக இது டுபாக்கூர் என்றுதான் அபிப்பிராயம் காத்து வந்தேன்.

சில டெக்னிக்குகளை வைத்து பிறரை ஏமாற்றுவது சாத்தியமில்லை; எதிராளியின் அறிவையையும் அனுபவத்தையும் இது குறைத்து மதிப்பிடும் செயல் என அடிக்கடி சொல்வேன்.

2005ல் வெளிவந்துள்ள The Definitive Book of Body Language (Allan & Barbara Pease எழுதியது தான்) மீண்டும் கண்ணில் பட்டது. பின் அட்டையில் உடல் மொழி அறிந்தால் என்ன பலன்கள் என்று பட்டியல் இருந்தது. எப்படி நல்ல தோற்றத்தை ஏற்படுத்த, எப்படி பேரத்தில் வெற்றி பெற, பொய்யா உண்மையா என்று எதிராளி பேச்சை எடை போட, பிறர் ஒத்துழைப்பை நாட, எதிராளியின் உள் நோக்கம் அறிய. காதல் முயற்சிகளில் வெற்றி பெற....! ஸ்..அப்பா...!! முடியலை.

புத்தகத்தை சுவாரசியமில்லாமல் புரட்டினேன். ஆண்கள் பொய் சொன்னால் பெண்கள் சுலபமாக கண்டுபிடிக்கிறார்கள். பெண்களின் பொய்கள் ஏன் ஆண்களால் உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதில்லை என்ற பகுதியை படித்து முடிப்பதற்குள், “இதையும் சேத்து பில் பண்ணிடுங்க!” என்றேன்.

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பணியும் பிரயாணமும் என்னை துரத்த இந்த புத்தகம் படிக்க இரண்டு மாதங்களுக்கு மேலானது. முடிக்கையில் எனக்கும் ஆலன் பீஸுக்கும் ஒரு மானசீக உரையாடல் நிகழ்ந்தது:

“பார்த்தீர்களா? உடல் மொழியை சட்டென்று மாற்றி யாரையும் ஏமாற்ற முடியாதுன்னு நான் சொல்றது சரி தானே?”

“அதான்.. நானும் 35 வருஷமா சொல்லிட்டுருக்கேன். நீங்கதான் என் புத்தகங்களை படிக்கலை!”

இந்த தம்பதி எழுத்தாளர்களின் (பார்பரா பீஸ் ஆலனின் மனைவி) புள்ளி விவரங்கள்: மொத்தம் 16 நூல்கள் , 52 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 25 மில்லியன் புத்தகங்கள் விற்பனை, 30 நாடுகளில் பயிற்சி வகுப்புகள், இது தவிர பத்திரிகை பத்திகள், தொலைகாட்சி படங்கள், நாடகங்கள், ஒரு பாக்ஸ் ஆபீஸ் படத்திற்கான கதை என கோடம்பாக்கம் பாஷையில் மிரட்டலாக உள்ளது. (அது ஏன் மிரட்டணும் என கோடம்பாக்கம் நண்பர்களை கேட்டு ஒரு தனி கட்டுரை எழுதணும்!)

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்த மொழி உடல் மொழிதான். மிகத் தாமதமாகத் தோன்றிய மொழி தான் வார்த்தைகளால் ஆன மொழி. அதனால்தான் ஒரு ஆள் தூரத்தில் பம்மிக் கொண்டே செல்லும் போது, “ஏண்டா அவன் ஒரு மார்க்கமாய் திரியறான்?” என்று சொல்ல முடிகிறது.

ஒரு வன ஜந்துவிற்கு தன்னைத் தாக்க வரும் மிருகத்திற்கும், மோகித்து வரும் மிருகத்திற்கும், நட்புறவு பாராட்டும் மிருகத்திற்கும், யதேச்சையாக எதிர்படும் மிருகத்திற்கும் வித்தியாசங்களை நொடிப்பொழுதில் அறியும் ஆற்றல் கொண்டவை.

ஆறாம் அறிவும், மொழியும், நாகரிகமும் இந்த அறிவை மட்டுப்படுத்தினாலும் இன்னும் அழியாமல் நம் புரிதலுக்கு உதவுகிறது.

அதனால்தான் அனைத்தையும் அனைவரையும் நாம் பார்க்க நினைக்கிறோம். பெண் பார்க்கிறோம். வேலை பார்க்கிறோம். ஆபீஸ் பார்க்கிறோம். மனிதர்களும் அவர்களின் உடல் மொழியும் தான் நம் புரிதலுக்கு ஆதாரம். பேசும் வார்த்தைகளை விட.

நாம் 60%க்கு மேல் உடல் மொழியையும் 40%க்கு குறைவாகத்தான் வார்த்தைகளையும் புரிதலுக்கு துணை கொள்கிறோம். உடல் மொழியும் வார்த்தைகளும் முரண்பட்டால் உடல் மொழியைத் தான் முழுவதும் நம்புவோம். அதனால் மனிதர்களை, அவர்களின் உள் நோக்கம் அறிந்து கொள்ள உடல் மொழி புரிதலில் தேர்ச்சி பெறுதல் மிக அவசியம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

உடல் மொழியை சுலபமாக புரிந்து கொள்பவர்கள் ஆண்களா பெண்களா? புத்தாண்டு பட்டிமன்றம் எல்லாம் வேண்டாம். சந்தேகமில்லாமல் பெண்கள் தான். அதனால் தான் பாதி விவாதத்தில், “நீ இப்ப கோபமாக இருக்கே!” என்று கொலம்பஸ் மாதிரி லேட்டாக கண்டுபிடிக்கிறோம். சண்டைக்கான சரியான தருணத்தை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ராஜதந்திரிகள். எல்லாம் உடல் மொழி சாஸ்திரம் இயல்பாகத் தெரிந்ததால்தான் என்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்? மொழி வளராத சிசுவின் அசைவில் அதன் தேவைகளை உணரும் தேவையும் பக்குவமும் பெண்ணிற்கு வாய்க்கிறது. ஒரு சிணுங்கலிலேயே இந்த அழுகை புரிவது இதனால்தான்.

பல பெண்களை வளர்த்து ஆளாக்கிய வயோதிக பெண்மணிகள் யாரும் சொல்லாமலே எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்வது இந்த ஆற்றலில்தான்.

உள்ளுணர்வு, புலன் மீறிய அறிவு எல்லாம் தேவையில்லை. உடல் மொழிகளை புரிதல் போதும். பல ஆன்மீகவாதிகள் பிழைப்பது இப்படித்தான் என்கிறார்கள். கிரிஸ்டல் பந்து நோக்கிகள் தங்களிடம் வருபவர்களின் மனதை எப்படி அவர்கள் உடல் மொழி மூலம் தெரிந்து கொள்கிறார்கள் என விளக்குவது சுவாரசியம்.

தங்கள் முகம் நீங்கலாக தங்கள் உடல் மொழியே 90% ஆண்களுக்கும் 50% பெண்களுக்கும் தெரியாது என்ற ஆச்சரிய ஆய்வு சிந்திக்க வைக்கிறது.

பொய் சொல்லும் போது கைகள் வாயையோ அல்லது வாயுடன் மூக்கையோ தொடுவது ஏன் என்று படிக்கும் போது எனக்கு ஃப்ராய்ட் ஞாபகம் வந்தது. கை குலுக்குவோரின் அதிகாரத் தேவை அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதி அசைவும் ஒரு உணர்வைச் சார்ந்தது. எதிராளிக்கு மறைமுகமாக அதை உணர்த்துகிறது. எந்த அசைவும் செயலும் எந்த உணர்வை குறிக்கிறது என்பதை படங்களுடன், உலகத் தலைவர்கள் உதாரணங்களுடன், அறிவியல் பின்புலத்துடன் விளக்குகிறார்கள். கைகள், புன்னகை, கண்கள், கை குலுக்கல்கள், பொருட்களை கையாடல், இருக்கை அமைப்புகள், அதிகாரச் சின்னங்கள் என மிக விரிவாக விளக்குகிறது புத்தகம்.

வெறும் சில உத்திகளை வைத்து ஏமாற்ற முடியாது. உதடுகள் மட்டும் சிரித்தாலும் கண்கள் நிலை கொண்டுள்ள விமான பணிப்பெண்கள் சிரிப்பை போலி என்பதை கண்டுகொண்டதால்தானே பெரும்பாலோர் பதில் கூட சொல்லாமல் போகிறார்கள்?

மனவியல் வல்லுநர்கள் மட்டுமல்ல, மக்களை கூர்ந்து கவனிக்கும் எல்லாருக்கும் இது சுலபமாக பிடிபடும். எழுத்தாளர்கள், விற்பனை சிப்பந்திகள், ஆட்டோ ஓட்டுநர்கள், அரசியல்வாதிகள், நிருபர்கள், போலீஸ்காரர்கள் என மக்கள் சார்ந்து பணிபுரியும் அனைவருக்கும் இயல்பாக அமையும். வியாபாரம் சார்ந்த அனைவருக்கும் இந்த நூல் பெரிதும் பயன்படும்.

அது மட்டுமா?

மர்லின் மன்றோ ஏன் பெரிய கவர்ச்சிப் பேரரசி என்பதை இந்த புத்தகம் படிக்காதவர்களுக்கும் தெரியும். அவரின் எந்தெந்த உடல் அசைவுகள் இந்த கவர்ச்சியை கூட்டிக் காண்பிக்கிறது என்பதை இந்த புத்தகம் படித்தால் புரியும். கவர்ச்சியும் உடல் சார்ந்ததை விட உடல் மொழி சார்ந்தது!

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்