ரிலையன்ஸ் பிரச்சினைக்கு 15 நாட்களில் தீர்வு - வீரப்ப மொய்லி நம்பிக்கை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடனான பிரச்சினைக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு தொடர்பான புதிய கொள்கையை வரும் ஜனவரி மாதம் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் மொய்லி மும்பையில் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்துடனான பிரச்னை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரூ.840 கோடிக்கான வங்கி உத்தரவாதம் பெறுவது தொடர்பான பிரச்சினைக்கு 15 நாளில் தீர்வு காணப்படும்” என்றார்.

கடந்த சில மாதங்களில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மொய்லி, இதுபோன்ற சாதகமான செய்திகளை விடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிரான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார். ரிலையன்ஸ் பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்றாவது தீர்ப்பாயத்தை உச்ச நீதிமன்றம் விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் மொய்லி தெரிவித்தார்.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள திருபாய்-1 மற்றும் திருபாய்-2 ஆகிய எரிவாயு உற்பத்தி மையங்களில், எரிவாயு உற்பத்தி 80 சதவீதம் குறைந்து விட்டது. பதுக்கலே இதற்குக் காரணம் என ரிலையன்ஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்திட மிருந்து பொதுத்துறை நிறுவனங்களுக்காக பெறப்படும் 1 மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (பிடியு) எரிவாயுவுக்கு இப்போது 4.2 அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது. இதை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 8.4 டாலராக உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இயற்கையான காரணங்களாலேயே எரிவாயு உற்பத்தி குறைந்துவிட்டது என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் நிரூபிக்காதவரை, எரிவாயு விலையை உயர்த்தி வழங்க முடியாது என பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிகரிக்கப்பட்ட விலையைப் பெற வேண்டுமானால், ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ.840 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக்கொண்டது. எரிவாயு பதுக்கப்படவில்லை என்பதை நிரூபித்த பிறகு இந்தத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

அரசுக்கு அளித்த வாக்குறுதிப்படி உற்பத்தி இலக்கை எட்டாத காரணத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட உள்ள 2-வது அபராதமாக இருக்கும். இதே காரணத்துக்காக இந்நிறுவனத்துக்கு பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கெனவே ரூ.11,160 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE