அதிகம் என்றால் குறைவு

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

“கண்ணா, சாப்பிடாமல் போகாதே! இட்லி, தோசை ரெடி. வேண்டாம்னா ஓட்ஸ் கஞ்சியும் இருக்கு. இல்ல டிபன் பாக்ஸுக்கு வச்ச ஆலு பரோட்டாவே ஒண்ணு சாப்பிட்டுட்டுப் போ.”

“நூடுல்ஸ் பாக்கெட் இல்லையா?”

“இருக்கு. காலங்காத்தால அது எதுக்கு? தோசை ரோஸ்டா தர்றேன். ஓகேவா?”

“சரி...சட்னி வேண்டாம். சாஸ் இல்லையா? இல்லைன்னா வெறும் பொடி தொட்டுக்கறேன்.”

15 நிமிடம் கழித்து தட்டை வைக்கையில் பிள்ளை திருப்தி இல்லாமல் சொல்கிறது: “ரோஸ்டாவே இல்லை. இதுக்கு பதில் பொடி தோசையா மெத்துனு ஊத்திக் கொடுத்திருக்கலாம்.”

பேப்பர் படித்தவாறு தகப்பனின் அங்கலாய்ப்பு: “இப்படி சாய்ஸ் கொடுத்து கொடுத்தே கெடுத்திட்டே!”

இது உங்கள் வீட்டிலும் நடக்கிறதா? உங்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி: இது உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைக்கு மட்டும் நடக்கவில்லை. சமூகத்தில் அனைவருக்கும் அனைத்து முடிவு எடுக்கும் தருணங்களிலும் நிகழ்கிறது என்கிறார் பேரி ஷ்வார்ட்ஸ். சந்தைப் பொருளாதாரம் அளித்த எல்லையில்லா தேர்வுகளின் பக்க விளைவு என்கிறார். பக்க விளைவா அது? பக்கா விளைவு!

The Paradox of Choice வியாபார வியூகம் சார்ந்த சம கால படைப்புகளில் முக்கியமானது என்று சொல்வேன். சமூகவியல் பேராசிரியரான இவரின் இந்த புத்தகம் முழுக்க முழுக்க சமூக உளவியல் செய்திகள் அடங்கியது.

அளவிற்கு அதிகமான தேர்வுகள் இருக்கையில் மனம் எப்படி திருப்தியில்லாமல் போகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தப் புத்தகம். முடிவு எடுக்கும் தருணத்தில் மனித மனம் பெரும் உளைச்சலோடும் ஒரு நிச்சயமில்லாத ஊசலாடும் தன்மையோடும் செயல்படுகிறது என்றும் விளக்குகிறார்.

சுதந்திரம் என்று தோன்றும் வாய்ப்புகளும் தேர்வுகளும் எப்படி நம்மை சிக்கல் படுத்துகின்றன என்று பண்டிதத் தன்மையில்லாமல் எளிமையாக புரிய வைக்கிறார் பேராசிரியர்.

யோசித்துப் பார்க்கையில், உங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்களின் எண்ணிக்கை எவ்வளவு? லிஸ்ட் போட்டு வாங்கினால் 30 தேறும். ஆனால் ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டில் சுமார் 30,000 பிராண்டுகள் உள்ளன. மாலில் உள்ள மெகா கடைகளுக்குச் சென்றால் எண்ணிக்கை பல மடங்காக உயரும். தவிர ஒவ்வொரு பொருளுக்கான பிரத்யேகக் கடைகளுக்குச் சென்று அந்த எண்ணிக்கைகளையும் கூட்டினால் அது லட்சங்களைத் தாண்டும்.

மளிகை வாங்கும் நேரம் முன்பு அதிக பட்சம் அரை மணி நேரம். பல வீடுகளில் லிஸ்ட் அனுப்பினால் வீட்டிற்குப் பொருட்கள் வருவதால் 10 நிமிடத்தில் கூட முடியும். இன்று நடைவண்டி உருட்டி மூன்று மணி நேரமும் இரு மடங்கு அதிக பணமும் செலவு செய்து வீட்டிற்கு வந்த பின் நடக்கும் உரையாடல் இது தான்:

“இத மறந்துட்டேன்!”, “இது கூட ஃப்ரீ ஆஃபர்னு எடுத்தீங்க. தண்டம்!”, “இத இங்க வாங்கக் கூடாது, அவசரத்துக்கு வாங்கிட்டேன்!, “ இதுல சின்னது இல்ல. இவ்வளவு தீராது; அதுதான் இங்க பிரச்சினை.”, “இதுக்கே நேரம் ஆயிட்டதால வீட்டுக்கு வந்து சமைக்கல; ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்!

அதிகம் சாய்ஸ் கிடைத்தால் மனம் அதிகம் திருப்தியடையும் என்பது எவ்வளவு அழகான பொய்!

ஓட்டலில் உணவு ஆர்டர் செய்வதிலிருந்து வாழ்க்கைத் துணை தேர்வு செய்வது வரை இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். தேர்ந்தெடுத்த பொருள் மீது சந்தேகமும் தேர்ந்தெடுக்கத் தவறிய பொருளின் மீது ஏக்கமும், தங்கள் முடிவின் மீது ஒரு நம்பிக்கையில்லாத தன்மையும் எல்லா முடிவு எடுக்கும் சூழ்நிலைகளிலும் ஏற்படுகிறது. இந்த உணர்வுகள் தொடந்து மனதில் மண்டிக்கிடக்கையில் அது பெரும் துக்கமாக உருவெடுக்கிறது.

“அந்த அரக்கு கலர்தான் நிச்சயம் இதை விட பெட்டர். அவளும் இதே கலர் வச்சிருக்கான்னு தான் எடுக்கலை. இவ்வளவு கொடுத்து இதை எடுத்ததுக்கு அது கண்டிப்பா இதை விட பெஸ்ட் சாய்ஸ்” என்று புடவை வாங்கிய பின் பெண்கள் பேசுவது இதனால்தான்!”

“நல்ல ஆஃபர் பா அது. பெங்களூர். இன்னும் 2 லட்சம் சி.டி.சி. அதிகம். வேண்டாம்.. இது எம்.என்.சி. சென்னையில கிடக்குது. குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு இதுக்கு வந்தேன். சொதப்பிடுச்சு!”

தேர்வு செய்யும் சுதந்திரம் மனதை அலைக்கழிக்கிறது. அதுதான் உண்மை. அதிகம் சிந்திக்க வாய்ப்பு இல்லாமல் தேர்வு இல்லாமல் கிடைக்கும் சிறு விஷயங்களைக் கூட நாம் பெரிதும் ரசிப்பது இதனால் தான்!

“Maximizers” and “Satisficers” என்று இரு வகை மனிதர்களை வாழ்க்கையின் திருப்தி அடையும் அடிப்படையில் பிரிக்கிறார் பேரி ஷ்வார்ட்ஸ்.

கீழ்க்கண்ட கேள்விகள் சிலவற்றுக்கு “ஆம்” அல்லது “இல்லை” என்று பதில் அளித்தால் நீங்கள் எந்த ரகம் என்று புரியும்,

“ இங்கு உள்ளதை விட வெளியே தேடினால் இன்னும் சிறப்பாகக் கிடைக்கும்!”

“எனக்கு அதுவும் மிகச் சிறந்த (பெஸ்ட்) பொருள்தான் வேண்டும்.”

“எவ்வளவு நல்ல வேலையில் இருந்தாலும் வெளியில் என்ன வாய்ப்புகள் என்று தேடிக்கொண்டே இருப்பேன்!”

“டி.வி பார்க்கையில் தொடர்ந்து சானலைத் திருப்பிக் கொண்டே இருப்பேன்”

“என் மனதிற்கு திருப்தியானது கிடைக்கும் வரை கால விரயமானாலும் தேடிக்கொண்டே இருப்பேன்.”

“என் வாழ்க்கையை விட பிறர் வாழ்க்கை நமக்கு வாய்த்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்வேன்.”

அதிகம் ஆம் என்று பதில்கள் இருந்தால் நீங்கள் Maximiser ! அதிகம் இல்லை என்று பதில்கள் இருந்தால் நீங்கள் Satisficer !

நாம் அனைவரையும் மேக்ஸிமைசர்கள் ஆக்க விழைகிறது சந்தைப் பொருளாதாரம் என்கிறது இந்த புத்தகம். அமெரிக்கர்களுக்காகவே எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த புத்தகம் நமக்கு வெகுவாக பொருந்துகிறது எப்படி என்று யோசியுங்கள்.

வாடிக்கையாளர் மனநிலை என்ன என்று வியாபாரிகளுக்குப் புரிய இந்த நூல் பயன்படும். அதைவிட எப்படி தேர்வுகள் செய்தும் திருப்தியாக இருப்பது என்று கடைசி அத்தியாயத்தில் விளக்குகிறார்.

எதில் சாய்ஸ் எடுக்கலாம் எதில் வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள். தேவைக்கு சரி என்று தோன்றும் சராசரிகள் பல சமயம் போதும். இழந்த வாய்ப்புகளின் மதிப்பை விட முடிவு செய்த வாய்ப்பின் மதிப்பில் கவனம் செலுத்துங்கள். திரும்பப் பெற முடியாத வாய்ப்புகள், மாற்ற முடியாத முடிவுகள் இவைகளைத் தேர்ந்தெடுங்கள். நன்றி உணர்வு கொள்ளுங்கள். கடந்த காலத்திற்கு வருந்தாதீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்துங்கள். சமூக ஒப்பீடுகளை பெரிதுபடுத்தாதீர்கள். உங்கள் குறைகளையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தத்துவ போதனை போலத் தோன்றும் இவை அனைத்தும் மன நலம் பேண உதவும். சந்தையின் ராட்சஷத்தனத்துக்கு இரையாகாமல் இயங்க முடியும்.

Reduce, Reuse, Recycle என்பதுதான் உலகத்தைக் காக்கப் போகும் மந்திர சொற்கள் என்கிறார்கள் சுற்றுப்புற ஆர்வலர்கள். சமூகவியலாளர் எழுதிய பிஸினஸ் புத்தகமும் இதைத்தான் சொல்கிறது.

இதைத்தான் நம்ம ஆள் ஒருத்தர் ரொம்ப காலம் முன்னரே நமக்கு சொல்லிட்டு போனாரு. அவர் பெயர் கூட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியோ என்னவோ..!

டாக்டர். ஆர்.கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்