ஏறுமுகத்தில் ரியல் எஸ்டேட்!

இந்தியாவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், 2013ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டுள்ளது என சர்வதேச ஆய்வு நிறுவனமான சி.பி.ஆர்.இ. அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதன்படி முதல் அரையாண்டு காலத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 65 ஆயிரம் வீடு கட்டும் திட்டங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. 2012ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் 48 ஆயிரம் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2013 முதல் அரையாண்டு காலத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலேயே அதிகபட்சமாக வீடு கட்டும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6.3 சதவீதமாக உள்ள ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு, 2025ஆம் ஆண்டில் 13 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மேலும், இத்துறை மூலம் வேலை பெறுவோர் எண்ணிக்கையும் 76 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 72 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE