தொழில் முன்னோடிகள்: ஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)

By எஸ்.எல்.வி மூர்த்தி

என்னிடம் இருக்கும் ஆயிரம் ஐடியாக்களில் ஒன்றே ஒன்று மட்டுமே சரியானதாக இருந்தால்கூட, நான் திருப்திப்படுவேன். - ஆல்ஃபிரெட் நோபல்

ஆகஸ்ட் 6, 1945. ஜப்பானின் ஹிரோஷிமா நகரம். உலகின் முதல் அணுகுண்டை வீசுகிறது அமெரிக்கா. நாசம், நம்பவே முடியாத நாசம். 90,000 கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகச் சாய்ந்தன. 70,000 பேர் உடனே இறந்து போனார்கள். 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கதிர்வீச்சு நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள்.

ஆகஸ்ட் 9, 1945. நாகசாகி நகரம். அமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசுகிறது. 40,000 பேர் உடனே மரணம். 30,000 பேர் கதிர்வீச்சு நோய்கள் வந்து உயிர் இழந்தார்கள். 75,000 பேர் காயமடைந்தார்கள்.

அணுகுண்டின் மூலாதாரம் டைனமைட் என்னும் ரசாயன வெடி மருந்து. இதைக் கண்டுபிடித்து இத்தனை உயிர்க்கொலைக்கும் காரணமாக இருந்த அந்த ரத்தக் காட்டேரி யார்?

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மாமேதைகளுக்கு உலகம் தரும் மாபெரும் கவுரவம் நோபல் பரிசு. அறிவுக்குக் கிரீடம் சூட்டும், உலகின் மாபெரும் அங்கீகாரமான இந்தப் பரிசை ஏற்படுத்தியவர் அன்பே வடிவமானவராக இருக்கவேண்டும். யார் அந்த மனித தெய்வம்?

அதிர்ச்சி அடையாதீர்கள். அந்தக் கடவுளும் காட்டேரியும் ஒருவரேதான். அவர்தான் ஆல்ஃபிரெட் நோபல்.

ஆல்ஃபிரெட் நோபல் 1833 - ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் பிறந்தார். அவர் அப்பா இமானுவேல் பழைய கட்டிடங்களை இடிக்கும் கான்ட்ராக்டர். இதற்கான வெடிமருந்துகள் தயாரித்தார். பிசினஸில் பெருநஷ்டம் வந்தது. திவால் நோட்டீஸ் கொடுத்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். ஆல்ஃபிரெட் மூன்றாமவர். ஒவ்வொரு நாளும் அரை வயிற்றுச் சாப்பாடு. ராத்திரி சீக்கிரமே அம்மா வீட்டு விளக்குகளை அணைத்துவிடுவார். எண்ணெய் வாங்கும் பணத்தை மிச்சப்படுத்துவதற்குத்தான்.

ஆல்ஃபிரெட் சிறுவயதிலேயே சீக்காளி. பாதிநாள் பள்ளிக்கூடம் போகமாட்டான். அம்மாதான் பாடம் சொல்லிக் கொடுப்பார். உடல்நலக் குறைவால், பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் தங்கள் விளையாட்டுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தனிமை, சோகம், இவைதாம் அவன் வாழ்க்கை.

ஆல்ஃபிரெடின் நான்காம் வயதில் அவன் அப்பாவுக்கு ரஷ்யாவில் வேலை கிடைத்தது. மனைவியையும், குழந்தைகளையும் ஸ்வீடனில் விட்டுவிட்டுப் போனார். ஊர்ப் பெண்களுக்கு ஆடைகள் தைத்துக்கொடுத்து அவன் அம்மா குடும்பத்தை ஓட்டினார். ஆல்ஃபிரெட் பள்ளிக்கூடம் போனான். அந்தச் சிறுவயதிலேயே அபாரப் பொறுப்பு. எப்போதும் படித்துக்கொண்டேயிருப்பான்.

ஆல்ஃபிரெடின் ஒன்பதாம் வயதில் அப்பா வின் சம்பளம் ஓரளவு உயர்ந்தது. எல்லோரை யும் ரஷ்யாவுக்குக் கூட்டிக்கொண்டு போனார். வாழ்க்கையில் அடிபட்ட அவர் ஒரு பாடம் கற்றுக்கொண்டிருந்தார் - பணம் வரும், போகும். ஆனால், யாராலுமே நம்மிடமிருந்து பறிக்க முடியாத நிரந்தரச் செல்வம் அறிவு. அறிவும், திறமையும் இருந்தால், எந்தப் பாதாளப் படுகுழியிலிருந்தும் மீண்டு வரமுடியும். தன் நம்பிக்கையை மகன்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்தார். செலவு அதிகமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட ட்யூஷன் மாஸ்டர்கள் வைத்தார். மூன்று மகன்களும் நன்றாகப் படித்தார்கள். அவர்களில், ஆல்ஃபிரட் ஒருபடி மேல். தாழ்வு மனப்பான்மையால், பிறருடன் பழகாத அவன் எப்போதும் புத்தகமும் கையுமாகத் திரிவான், நள்ளிரவில் தூக்கம் கண்களைத் தழுவும் வரை படிப்பான். அதிலும், வேதியியல் படிப்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

அப்பா கையில் கொஞ்சம் பணம் வந்துவிட்டால், பிசினஸ் தொடங்க மனம் துறுதுறுக்கும். இயந்திரங்கள், வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினார். ஆல்ஃபிரட் உட்பட எல்லா மகன்களும் அப்பாவுக்குத் தோள் தந்தார்கள். அதிர்ஷ்டக் காற்றும் வீசியது. மகன்கள் தன் பிசினஸை தொடர்ந்து நடத்தி இன்னும் உயரங்களுக்குக் கொண்டுபோகவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். தொழில் பயிற்சிக்காக, ஆல்ஃபிரெட்டை பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினார்.

முதலில் பாரிஸ். நைட்ரோகிளிசரின் என்னும் ரசாயனம் தீவிர சக்தியோடு வெடிக்கும் தன்மை கொண்டது, ஆனால், எப்போது, எப்படி வெடிக்கும் என்று தெரியாது. ஸோப்ரெட்டோ என்னும் விஞ்ஞானி நைட்ரோகிளிசரின் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவந்தார். ஆல்ஃபிரெட் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

வயது 17. மனதில் காதல் உணர்ச்சிகள் அரும்பத் தொடங்கின. அலுவலகத்தில் ஒரு அழகிய இளம்பெண்ணச் சந்தித்தார். ரத்தத்தில் ஊறிய தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தடுத்தன. ஆனால், தன்னிடம் ஒரு ஜீவனாவது அன்பு காட்டாதா என்னும் பல வருட ஏக்கம் தாழ்மை உணர்வுகளை வென்றது. அவளிடம் பழகத் தொடங்கினார். நட்பு இறுகியது. அவர் காதல் என்று நினைத்தார். அவளுக்கோ இது நட்புதான். இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டாள். இதைவிடச் சோகம், சில மாதங்களில் நோய் வந்து மரணமடைந்தாள். ஆல்ஃபிரெட் நெஞ்சம் சுக்கு நூறானது. இனிமேல் தன் வாழ்க்கையில் காதலுக்கும், கல்யாணத் துக்கும் இடமில்லை, தான் தனிமரம்தான் என்று முடிவெடுத்தார். ரஷ்யா திரும்பினார். ஒரே குறிக்கோள், நைட்ரோகிளிசரின் பயன்படுத்தி வெடிமருந்துகள் தயாரிக்கவேண்டும், பணம் குவிக்கவேண்டும்.

நைட்ரோகிளிசரின் ஆராய்ச்சியில் தீவிர மாக இறங்கினார். அப்போது வந்தது ஒரு மரண அடி. 1853 - 56 காலகட்டத்தில் கிரிமியப் போர் நடந்தது. ரஷ்யா ஒரு பக்கம், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஒட்டாமான் பேரரசு மறுபக்கம். நோபல் குடும்பத்தின் தொழிற்சாலைகள் ரஷ்யாவுக்கு ராணுவத் தளவாடங்கள் சப்ளை செய்தார்கள். போர் முடிந்தது. ரஷ்யா தோல்வி கண்டது. சப்ளைக் கான பணம் நோபல் குடும்பத்துக்கு வரவில்லை. அப்பா இமானுவேல் மறுபடியும் திவால் ஆனார். சொந்த ஊரான ஸ்வீடன் திரும்பினார். ஆல்ஃபிரெடும் அப்பாவோடு வந்தார். வசதி இல்லை என்பதற்காகக் கனவுகளை மறக்க அவர் தயாராக இல்லை. வீட்டு அடுக்களையில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

வங்கியில் கடன் வாங்கினார், சோதனைக் கூடம் தொடங்கினார். 1864. வயது 31. சோதனைக் கூடத்தில் மருந்துக் கலவை வெடித்தது. ஒட்டுமொத்தக் கூடமும் பற்றி எரிந்தது. ஆல்ஃபிரெடின் தம்பி உட்பட ஆறு பேரின் கருகிய உடல்கள் மட்டுமே மிஞ்சின. அப்பா இமானுவேலுக்கு உடல் வலது பாகம் பாதிக்க ப்பட்டது. ஆல்ஃபிரெட் சிறு காயங்களோடு தப்பினார். ஆனால், ஊரே அவரைச் சைத்தானின் பிரதிநிதியாகப் பார்த்தது. ஆபத்தான பொருட்கள் தயாரிக்கும் அவருடைய பரிசோதனைச்சாலை ஊரில் இருக்கக்கூடாது என்று நகரசபை தடை விதித்தது.

ஆல்ஃபிரெட் ஒரு வழி கண்டுபிடித்தார். சிறிய கப்பலை விலைக்கு வாங்கினார். நகரின் வெளியே ஒரு ஏரியில் நிறுத்தினார். அங்கே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். மூன்றே வருடங்கள். 1867 - இல் நைட்ரோகிளிசரின், ஒருவிதக் களிமண், இன்னும் சில மூலப்பொருட் கள் கலந்தார். டைனமைட் என்னும் வெடிமருந்து உருவானது. அன்றைய எல்லாத் தகர்ப்பு சாதனங்களைவிட மிக அதிக சக்தி கொண்டதாக இருந்தது.

சுரங்கங்கள், கட்டட இடிப்புகள் ஆகிய துறைகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்தன. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, போர்க்களங்களில் நாச வேலை களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு காலகட்டத்தில் ஆல்ஃபிரெட் 90 - க்கும் அதிகமான ஆயுதத் தொழிற்சாலைகளின் அதிபராக, ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார்.

1888-ல் ஆல்ஃபிரெடின் தம்பி மரணமடைந் தார். பிரெஞ்சு நாளிதழ்கள் ஆல்ஃபிரெட் மறைந்துவிட்டதாகத் தவறாகப் புரிந்துகொண் டார்கள். அஞ்சலி எழுதினார்கள் - ``அப்பாவி மக்களை அதிசீக்கிரமாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டுபிடித்துச் செல்வம் குவித்த மரண வியாபாரி டாக்டர் ஆல்ஃபிரெட் நோபல் மரணமடைந்தார்.” வரலாற்றில் தன் பெயரை மரண வியாபாரியாகப் பதிக்க அவர் விரும்ப வில்லை. தொடங்கியது பிராயச்சித்தம். நோபல் அறக்கட்டளை தொடங்கினார். தன் சொத்தின் 94 சதவீதத்தை எழுதிவைத்தார். பிறந்தன நோபல் பரிசுகள்.

slvmoorthy@gmail.com



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்