தொழில்முனைவினை எப்போதுமே தற்போதைய நிலையில் பார்ப்பதை விட தொடங்கிய காலத்தில் இருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இன்டெகரா சாப்ட்வேர் சர்வீசஸ் பெரிய நிறுவனமாக இருந்தாலும் 20 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் 1,000 சதுரடியில் தொடங்கப்பட்ட ஒரு டிடிபி மையம்தான் இன்று பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
சென்னையில் புதிய அலுவல கத்தைத் தொடங்கும் நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் சுப்ரமணியாவை சந்தித்து உரையாடியதிலிருந்து…
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்தவர். படிக்கும்போது தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்தது. படித்தவுடன் விவசாயம் சார்ந்து தொழில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், சில வருட வேலை அனுபவம் தேவை என்பதற்காக ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 9 வருடங்கள் பணிபுரிந்தார்.
தொழில்முனைவு ஆசை பலருக்கு இருக்கிறது. ஆனால் சிலர் மட்டுமே அதனை செய்கிறார்கள். எந்த நொடியில் வேலையை விட முடிவு செய்தீர்கள்?
ஒரு கம்பெனி தொடங்க வேண்டும் என்பது எனக்கு சின்ன வயதில் இருந்தே இருந்தது. வேலையில் சேர்ந்தவுடனேயே யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கான திட்டத்தை எழுதினேன். தவிர்க்க முடியாத காரணத்தால் வேலையிலேயே தொடர்வதாக இருந்தால் எத்தனை வருடங்களுக்குள் தலைமைப் பதவியில் அமர முடியும். இல்லை எத்தனை வருடங்களுக்குள் நிறுவனம் தொடங்க முடியும் என்பதை பற்றி தொடர்ந்து சிந்தித்து கையால் எழுதினேன். ஒவ்வொரு வருடமும் அதனை தொடர்ந்து ஆராய்ந்து வந்தேன்.
நான் அனைவருக்கும் சொல்வது இதுதான், கையால் எழுதும்போதுதான் இலக்கினை அடைய முடியும். நான் எழுதும்போது எனக்குத் தெரியவில்லை. தொழில் தொடங்கி பல வருடங்களுக்கு பிறகு, கையால் எழுதுபவர்கள் அதிக வெற்றி அடைகிறார்கள் என்பதை `கோல்ஸ்’ என்னும் புத்தகத்தில் படித்தேன். மனதில் யோசிப்பவர்களை விட பெரிய வெற்றியை அடைய முடியும். நிறைய பகல் கனவுகள் கண்டேன். அதை எழுதி வைத்தேன். ஒரு கட்டத்தில் போதும் என்று முடிவெடுத்து தொழில் தொடங்கினேன். தொழில் தொடங்கியதில் என் மனைவி அனுராதாவின் பங்கு முக்கியமானது.
நீங்கள் படித்தது, வேலை செய்தது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில், ஆரம்ப கால ஆசை விவசாயம் சார்ந்த தொழில், ஆனால் இந்த துறையை எப்படித் தேர்வு செய்தீர்கள்?
வேலை செய்துகொண்டிருந்த போது விவசாயம், என்ஜினீயரிங் மற்றும் ஐடி ஆகிய மூன்று துறைகளை கவனித்து, விவாதித்து வந்தேன். ஐடி துறையில் வளர்வதற்கான வாய்ப்பு இருந்து. அதனால் அதை தேர்வு செய்தேன். ஐடி என்பது பெருங்கடல். அந்த காலத்தில் டிடிபி (desktop publishing) புதுச்சேரியில் தேவை இருந்தது. முதல் வருடத்திலேயே புதுச்சேரி பல்கலைக் கழகத்துக்கான புத்தக டைப் செட்டிங் ஆர்டர் கிடைத்தது. ஆனால் நிறுவனம் லாபமீட்ட மூன்று வருடங்கள் ஆனது.
நீங்கள் செய்யும் சேவைகள் பற்றி?
ஆரம்பத்தில் நாங்கள் இ-பப்ளிஷிங் செய்துவந்தோம். தொடக்கத்தில் பதிப்பு நிறுவனங்கள் எங்களுக்கு கன்டென்ட் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் புத்தகங்களைத் தயாரித்து கொடுப்போம். நாங்கள் தொடங்கியது இந்த சேவையில்தான். இப்போது 30-க்கும் மேற்பட்ட சேவை களை செய்துவருகிறோம். உதாரணத் துக்கு, வாடிக்கையாளர் மார்க்கெட்டிங் பற்றிய புத்தகம் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான எழுத்தாளரை கண்டுபிடித்து அவர்களுடன் பணிபுரிந்து, எழுதி அதை புத்தகமாக்கிக் கொடுப்போம்.
சில நேரங்களில் 5-ம் வகுப்புக்கு கணித புத்தகம் தயார் செய்ய வேண்டும் என்றால் அதற்கு எழுத்தாளர்கள் தேவையில்லை. எங்களிடமே அதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த வேலையை செய்துவிடுவார்கள்.
எந்தெந்த மொழிகளில் பணிபுரிகிறீர்கள்?
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இ-பப்ளிஷிங் பணிகளைச் செய்தோம். தற்போது ஜப்பனீஸ், அரபிக் மற்றும் சில ஐரோப்பிய மொழிகள் உள்பட 8 மொழிகளில் பணிபுரிகிறோம்.
தமிழில் யாருடனாவது வேலை செய்கிறீர்களா?
தற்போதுவரை கிடையாது. ஆனால் விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். கடந்த 22 ஆண்டுகளாக வெளிநாட்டுச் சந்தையை மட்டுமே மையப்படுத்தி பணிபுரிந்துவருகிறோம். தற்போது இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் கவனம் செலுத்துகிறோம். மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது இந்தியாவின் பள்ளி புத்தகங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். பதிப்பாளர்களின் தேவையை பொறுத்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
பதிப்பு துறையை பற்றி உங்களுக்கு அனைத்து தெரியும்? நீங்களே ஏன் பதிப்பு நிறுவனம் தொடங்கக் கூடாது?
இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை. எதிர்கால தேவையை பொறுத்து அந்த முடிவு இருக்கும்.
சேவையில் இருந்து ஏன் புராடக்டுக்கு (product) வந்தீர்கள்? human anatomy செயலியை ஏன் வெளியீட்டீர்கள்?
இத்தனை வருடங்கள் சேவை துறையில் இருந்துவிட்டோம். சேவை என்பது நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க முடியும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கான புராடக்ட்களில் இறங்கி இருக்கிறோம். இதன் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை வழங்க முடியும்.
அறிவியலை எப்படி எளிதாகக் கொடுக்க முடியும், என்ன தேவை இருக்கிறது என்று விசாரித்த போது இந்த செயலிக்கு தேவை இருப்பதை உணர்ந்தோம். இதுவரை 50,000 நபர்கள் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். இதில் 80 சதவீதத்துக்கு மேல் வெளிநாட்டவர்கள்தான் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பிரைவேட் ஈக்விட்டி (baring) நிறுவனத்தின் பங்குகளை நீங்களே வாங்கினீர்கள். ஏன் ஐபிஓ மூலம் அவர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு கொடுக்கவில்லை?
ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு காலம் இருக்கிறது. எட்டு வருடம் முதலீடு செய்த பிறகு வெளியேற நினைத்தார்கள். இந்த தொழிலில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால் நாங்களே அந்த பங்குகளை வாங்கினோம். தொழில் தொடங்கும் போது நண்பர்கள் முதலீட்டா ளர்களாக இருந்தார்கள், ஆனால் இப்போதைக்கு எங்கள் நிறுவனத்தில் எந்த முதலீட்டாளரும் இல்லை.
விரிவாக்க நடவடிக்கையில் விரைவில் ஈடுபடுவோம் சில நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டம் இருப்பதால், அப்போது ஐபிஓ வெளியிடுவது குறித்து பரிசீலிப்போம்.
தற்போதைய தொழில்முனை வோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
வருங்காலத்தில் அதிக இளைஞர்கள் வேலைக்கு தயாராக இருப்பார்கள். ஆனால் அத்தனை நபர்களுக்கும் அரசாங்கம் வேலை கொடுக்க முடியாது. தொழில் முனைவோர்கள் பெரிதாக யோசித்தால் மட்டுமே, இவர்களை சரியாக பயன்படுத்த முடியும். தொழில் முனைவோர்கள் நேர்மறை எண்ணம் மற்றும் தொலை நோக்கு சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும். தொலை நோக்கு சிந்தனை மட்டுமல்லாமல் சரியான குழுவையும் அமைக்க வேண்டும்.
Karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago