தொழில்முனைவு எனது டி.என்.ஏ.விலே இருந்தது - ஏ.மகேந்திரன்

By வாசு கார்த்தி

| நான் கோத்ரெஜ் நிறுவனத்துக்கு நிர்வாக இயக்குனராக இருக்கும்பட்சத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. ஒரு தொழில்முனைவோர் எண்ணம் இருந்தால் மட்டுமே ரிஸ்க் எடுக்க முடியும். |

ஒரே சமயத்தில் தொழில் முனைவோராகவும், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தவர். கார்ப்பரேட் நிறுவனம் ஒருவரை தனியாக பிஸினஸ் செய்துகொள்ள அனுமதிக்கும் என்றால், அவரிடம் 'ஏதேனும்' இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும், மகேந்திரனிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்களும் அனுபவங்களும் இருக்கின்றன.

உங்கள் படிப்பு பற்றி?

பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தான். லொயோலா கல்லூரியில் பி.காம் படித்தேன். அதன்பின், சி.ஏ, படித்து ஆர்.ஜி.என். பிரைஸ் நிறுவனத்தின் மும்பைக்கு பிரிவுக்குத் தலைமை ஏற்கச் சென்றேன்.

எப்போது தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

என்னுடைய டி.என்.ஏ.விலே தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் இருந்து. மும்பைக்கு சென்று ஐந்து வருடங்களுக்கு பிறகு வாடிக்கையாளர் மோகன் என்பவர் வந்து, ''குட்நைட்” ஆரம்பிக்கலாமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லி அந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்.

நீங்கள் படித்தது சி.ஏ. ஆனால் எப்படி பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது?

நீங்கள் சொல்வது சரிதான். படித்து முடித்த பிறகு என் அப்பா எங்கு வேலைக்கு போகப்போகிறாய் என்று கேட்டார். நான் வேலைக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். தனியாக நிறுவனம் ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்னேன். இந்த சமயத்தில் ஆர்.ஜி.என். நிறுவனத் துக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அவர்களும் வேலைக்கு சேர்ந்துவிடுங்கள் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் நான் வேலைக்குச் சேரமாட்டேன், என்னை பார்ட்னராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன்.

என்னுடைய நம்பிக்கையைப் பார்த்து சில நாட்களுக்கு பிறகு அவர்களே என்னை அழைத்தார்கள். மும்பையில் புதிதாக கிளை தொடங்க வேண்டும், அதை எடுத்து நடத்துவதென்றால் நீங்கள் பார்ட்னராகலாம் என்று சொன்னார்கள். நானும் சரி என்று மும்பைக்குச் சென்றுவிட்டேன். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், சி.ஏ. வேலை பார்த்துவந்தாலும் அங்கு நான் செய்தது பிஸினஸ்தான். அதனால் மோகன் வந்து கேட்டபோது சரி என்று சொல்லிவிட்டேன்.

ஆரம்பகால குட்நைட் அனுபவம் எப்படி இருந்தது?

அப்போதைக்கு எங்களிடம் பெரிய பணம் கிடையாது. வங்கியில் தான் கடன் வாங்க வேண்டும். 1987-ம் ஆண்டு பேங்க் ஆஃப் இந்தியாவில் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கித்தான் இந்த பிஸினஸை ஆரம்பித்தோம். ஒரு வருடத்தில் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டினாலும், தொழிற்சாலை அமைத்து, அதற்கு விளம்பரம் செய்து, டீலர்களைப் பிடித்து, கடைகளைச் சென்றடைந்து வாடிக்கையாளர்களைச் சென்று அதன்பிறகே பணம் எங்களுக்குக் கிடைத்தது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.

இதற்கான விளம்பர யுக்திகளை எப்படி அமைத்தீர்கள்?

இப்போதுதான் 'லிக்விட்' இருக்கிறது. ஆரம்பகாலத்தில் 'மேட்'தான். இதன் விலை 30 ரூபாய். அந்த காலத்தில் 30 ரூபாய் என்பது பெரிய தொகை. குடும்பங்கள் செலவு செய்ய தயங்குகிற தொகை. உயர் நடுத்தர மக்கள்தான் இதற்கு சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து அதற்கு ஏற்ப 'பொஷிசன்' செய்தோம். கொசு, மலேரியா, குழந்தைகள் பாதுகாப்பு என்பதை அடிப்படையாக கொண்டு எங்கள் விளம்பரங்களை அமைத்தோம். மக்கள் வாங்க ஆரம்பித்தனர். பொருளாதாரம் வளர வளர உயர் நடுத்தர மக்கள் எண்ணிக்கை அதிகமடைந்தது.

கோத்ரெஜில் எப்போது சேர்ந்தீர்கள்?

நாங்கள் ஆரம்பித்த நிறுவனம் நன்றாக வளர்ந்தது. 1994-ம் ஆண்டு வாக்கில் ரூ 59 கோடி வருமானம் ஈட்ட ஆரம்பித்தது. அப்போது கோத்ரெஜ் எங்கள் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்தார்கள். 120 கோடி ரூபாய்க்கு எங்கள் நிறுவனத்தை வாங்கினார்கள். ஆனால் கோத்ரெஜ் தலைவர் ஆதிகோத்ரெஜ் ஒரு வருடத்துக்கு என்னை நிர்வாக இயக்குனராக இருக்கச் சொன்னார். என் வசம் 5 சதவிகித பங்குகளும் இருந்தன.

நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்துதான் ஆரம்பித்தீர்கள். ஆனால் உங்களை கோத்ரெஜ் அழைக்கக் காரணம் என்ன?

அந்த சமயத்தில் நான்தான் பிஸினஸை பார்த்துக் கொண்டிருந் தேன். அதனால் கோத்ரெஜ் என்னை அழைத்தார். ஒரு வருடத்துக்கு பார்த்துக் கொள்ளச் சொல்லும்போது அதன்பிறகு நான் என்ன செய்வது என்று யோசித்தேன். அதனால் தனியாக ஒரு செரியோ(cherio) நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

உங்களை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்கச் சொல்லும் போது, எப்படி நீங்கள் தனியாக தொழில் தொடங்க கோத்ரெஜ் அனுமதித்தார்?

நான் தனியாக பிஸினஸ் செய்ய வேண்டும், உங்களது இலக்கை சொல்லுங்கள், முடித்துத் தருகிறேன். இதற்கு சரி என்றால் ஒரு வருடத்துக்கு வேலை செய்கிறேன் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொல்லி விட்டார்.

ஒரு வருடத்துக்குப் பிறகும் தொடர்ந்தீர்களே?

அவர்கள் கொடுத்த இலக்கை முடித்தேன். அதனால் இன்னும் கொஞ்ச நாள் இருக்கச் சொன்னார். அதற்கு பிறகு சாரா லீ (sara lee) நிறுவனம் கோத்ரெஜ்ஜுடன் கூட்டாக இணைந்தது. அதன்பிறகு கொஞ்சம் பொறுப்புகள் இருந்ததால் என்னால் விலக முடியவில்லை. நடுவில் நான் மீண்டும் வெளியே செல்கிறேன் என்று சொல்லும் போது, என்ன என்று கோத்ரெஜ் கேட்டார்.

பிஸினஸ் செய்ய வேண்டும் என்று சொன்ன போது, நாமே சேர்ந்து பிஸினஸ் செய்யலாம் என்று சொல்லி என்னுடைய முதலீடு 20 சதவிகிதமும், கோத்ரெஜ் 80 சதவிகிதமும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தோம். சில வருடங்களுக்கு பிறகு அந்த நிறுவனத்தை முழுமையாக விற்றுவிட்டோம். அதன்பிறகு 2010-ம் ஆண்டில் விலகுகிறேன் என்று சொன்னபோது இன்னும் மூன்று வருடங்கள் இருங்கள் என்று சொன்னார். அந்த காலம் முடிந்த பிறகு கடந்த ஜூன் மாத இறுதியில் விலகிவிட்டேன். நிர்வாக இயக்குனராக இருந்தாலும், இயக்குனர் குழுவில் இன்னும் உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.

உங்களது சொந்த நிறுவனத்தையும் நடத்துகிறீர்கள், கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனாரகவும் இருந்தீர்கள்? உங்களது நேரத்தை எப்படி வடிவமைத்துக்கொண்டீர்கள்?

கோத்ரெஜ்ஜூக்கு செல்லும் முன்பு, பெரிய அளவுக்கு நேரத்தை கடைப்பிடிக்கவில்லை. ஆனால், ஆதிகோத்ரெஜ் நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இத்தனை மணிக்கு வருகிறேன் என்றால், சரியாக வருவார். அந்த சமயத்தில் அதைவிட பெரிய டீல் நடப்பதாக இருந்தாலும் கூட வருவார். அதன்பிறகு நானும் நேரத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். 80 சதவிகித நேரம் கோத்ரெஜ் நிறுவனத்துக்கு, 20 சதவிகித நேரம் என் நிறுவனத்துக்கும் குடும்பத்துக்கும். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது என் மனைவிதான். அவர்தான் நிறுவனத்தைப் பார்த்துக்கொண்டார்.

நிறுவனங்களை கையகப்படுத்துவதில் (merger and acquisition) நீங்கள் கெட்டிக்காரர் என்ற பேச்சு சந்தையில் நிலவுகிறது! எப்படி முடிவெடுக்கிறீர்கள்?

ரிஸ்க் எடுக்கும் திறமையும் தைரிய மும் முக்கியம். அதைவிட, நான் கோத்ரெஜ் நிறுவனத்துக்கு நிர்வாக இயக்குனராக இருந்தால் இந்த ரிஸ்க் எடுக்க முடியாது. ஒரு தொழில்முனைவோர் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அந்த ரிஸ்க்கினை எடுக்க முடியும். கம்பெனியின் ஆளாக இருக்கும் போது ஏன் தேவை இல்லாத ரிஸ்க் எடுக்கவேண்டும் என்று தோன்றும். ஆனால் தொழில்முனைவோராக இருக்கும் போதுதான் அந்த ரிஸ்க் எத்தகைய நன்மையை தரும் என்று புரியும்.

உங்களுடைய பிராண்ட் தூதராக அமீர்கான் இருந்தார். நிறைய பேர் இருக்கும் போது அவரை ஏன் பயன்படுத்தினீர்கள். எதாவது காரணம் இருக்கிறதா?

ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான இமேஜ் இருக்கிறது. அதேபோல நிறுவனங்க ளுக்கும் இமேஜ் இருக்கிறது. கோத்ரெஜ் என்றால் நம்பிக்கை என்ற இமேஜ் இருக்கிறது. அதை வலுப்படுத்த அதே நம்பிக்கை இமேஜ் உடைய அமீர்கானை தேர்வு செய்தோம்.

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

ஈகோ இல்லாமல் வேலை செய்ய வேண்டும், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். பிஸினஸுக்கு பிறகுதான் மற்ற அனைத்து என்ற மனநிலை வேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கு ஆசை இருப்ப வர்கள் பிஸினஸுக்கு சரியானவர்கள் கிடையாது. இதை எல்லாவற்றையும் விட உங்களது டி.என்.ஏ.வில் தொழில்முனை வோராக வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்க வேண்டும்! உங்கள் டி.என்.ஏ. எப்படி என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

வணிகம்

3 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்