தொழில் ரகசியம்: `இலக்கை மட்டுமே தீர்மானிக்க வேண்டும்’

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

போர் புரிவது முதல் பயணம் போவது வரை, வாழ்க்கை முதல் வியாபாரம் வரை நாம் மனதில் நிறுத்தவேண்டியது கால்டிட்ஸ் கூறிய உண்மையை: ‘வகுக்கப்படும் எந்த திட்டமும் சரியானதே, எதிரியை போர்களத்தில் சந்திக்கும் வரை’

‘சென்னை அண்ணா சாலையில் 30, 35 கிலோமீட்டர் வேகத்தில் சென்று, ஜிஎஸ்டி பிடித்து அதில் டிராபிக்கை பொறுத்து சுங்குவார் சத்திரம் வரை 40- 45 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறி, மறைமலை நகரில் மகேந்திரா வேர்ல்டு சிட்டி தாண்டி டீசல் நிரப்பி செங்கல்பட்டு டோல் பூத்தில் பணம் கட்டி வேகம் பிடித்து விக்கரவாண்டியில் சர்வீஸ் ரோடில் இறங்கி ஒரு நல்ல ஹோட்டலில் கும்பகோணம் ஃபில்டர் காபி குடித்து, வருகிறதோ இல்லையோ, வற்புறுத்தி பாத்ரூம் போய்விட்டு அரியலூர் வழியாக, ரங்கம் தொடாமல் திருச்சி அடைந்து பால் பண்ணை அருகே எக்சிட் எடுத்து ஊருக்குள் நுழைந்து இரண்டாவது டிராஃபிக் சிக்னலில் இடப்பக்கம் திரும்பி எங்கும் திரும்பாமல் ஜங்ஷன் முன் திரும்பி நேராக சென்று பிள்ளையார் கோயில் எதிரே இருக்கும் நம் கிளை அலுவலகத்திற்கு மதியத்திற்குள் போகணும்.’

கார் டிரைவரிடம் இப்படி கூறுவீர்களா? இல்லை மூன்று மணிக்கு அங்க இருக்கணும் என்கிற உங்கள் அவசரத்தை மட்டும் சொல்வீர்களா?

உங்கள் தேவை என்ன? மூன்று மணிக்கு திருச்சி ஆபிசில் இருப்பது. டிரைவரிடம் அதைக் கூறி எப்ப கிளம்பினா சரியா இருக்கும் என்று மட்டும் கேட்டால் போதாதா? எந்த ரூட்டில் செல்வது, எந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம், எந்த ரோட்டில் டோல் பூத் குறைவு, அதில் எங்கு கூட்டம் குறைவாக இருக்கும் போன்ற விஷயங்களை டிரைவர் முடிவு செய்ய விடுவதுதானே முறை. எல்லாவற்றையும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் முழுக் கதையையும் விளக்கி டிரைவரோடு சேர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து, ஒன்றாக கியர் மாற்றி, இருவரும் இணைந்து பிரேக் போடும் லெவலுக்கு பிளான் பண்ணுவது பாவம் இல்லையா?

`வகுக்கும் எந்த போர் திட்டமும் சரியானதே, எதிரியை களத்தில் சந்திக்கும் வரை’ என்றார் அமெரிக்க படை தளபதி ‘டாம் கால்டிட்ஸ்’. ஒரு நாட்டின் அரசாங்கம் ராணுவத் தளபதியோடு போர் திட்டங்கள் தீட்டி வியூகங்கள் வகுக்கலாம். அத்திட்டங்கள் சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படை யூனிட்டும் என்ன செய்யவேண்டும், எந்த கருவிகளைப் பயன்படுத்தவேண்டும், எதை எப்படி எங்கு எப்பொழுது செய்யவேண்டும் என்ற அனைத்தும் உத்தரவாக உபதளபதிகளுக்கு, மேஜர்களுக்கு, காப்டன்களுக்கு கடைசியில் போர்களத்தில் இருக்கும் வீரர்கள் வரை சென்றடைகிறது என்று வைத்துக்கொள்வோம். போரின் மொத்த கட்டமைப்பு முதல் போர்களத்தின் கடைசி அங்குலம் வரை அனைத்தும் ஆராயப்பட்டு, ஆழ அலசப்பட்டு, திறம்பட வகுக்கப்படும் திட்டங்களாகவே அவை இருந்து தொலையட்டும். ஆனால் அதில்தான் சிக்கலே. போர் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் அனைத்து திட்டங்களும் பயனற்று போகலாம். போகும். போயே தீரும்!

போர்களத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறலாம். நடைபெறும். நடைபெற்றே தீரும். போர்களத்தின் சீதோஷ்ண நிலை பட்டென்று மாறலாம். படையின் முக்கிய அங்கம் அழிக்கப்படலாம். எதிர்பாராத வகையில் எதிரியின் தாக்குதல் அமையலாம். போட்ட திட்டங்கள் போரின் சத்தத்தில் அடங்கி, எதிராளியின் தீயில் பொசுங்கி, போர்களத்தின் புழுதியில் கரைந்து போகலாம். போகும். போயே தீரும்!

‘படைகள் தோற்பதற்கு காரணம் போர் ஆரம்பித்து பத்து நிமிடத்திற்குள் பயனற்று போகும் போர் திட்டத்தின் மீது வைக்கப்படும் அபரிமிதமான நம்பிக்கை’ என்கிறார் கால்டிட்ஸ். வகுக்கப்படும் திட்டத்தின் பயன் திட்டமிடும் நடவடிக்கை நடைபெற்றது என்பதை காட்டத்தான் என்ற நிலைதான் மிஞ்சும் என்கிறார்.

போர் புரிவது முதல் பயணம் போவது வரை, வாழ்க்கை முதல் வியாபாரம் வரை நாம் மனதில் நிறுத்தவேண்டியது கால்டிட்ஸ் கூறிய உண்மையை: ‘வகுக்கப்படும் எந்த திட்டமும் சரியானதே, எதிரியை போர்களத்தில் சந்திக்கும் வரை’,

இதை உணர்ந்துதான் 1980களில் அமெரிக்க படை தங்கள் போர் திட்டமிடும் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அந்த புதிய கோட்பாட்டின் பெயர் ‘தளபதியின் உள்நோக்கம்’ (Commander’s Intent). வெற்றிகரமான மிஷன் எப்படி இருக்கவேண்டும் என்பதன் விவரிப்பு கமாண்டர்ஸ் இண்டெண்ட். பணி முடிவடையும் போது போர்களம் எப்படி இருக்கும் என்பதை படைத்தளபதி எப்படி கற்பனை செய்திருக்கிறார் என்பதை மட்டுமே விவரிக்கும் கமாண்டர்ஸ் இண்டெண்ட். அதாவது பணி நிறைவும், வெற்றியும் எப்படி இருக்கும் என்பதை மட்டுமே இது குறிக்கும். திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற படையின் ஒவ்வொரு பிரிவும் தாங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை அவர்களே வகுத்துக்கொண்டு போர்களத்தில் போரின் நிலைக்கேற்ப மாறுபாடுகளை செய்து வெற்றிகரமாக முடிக்கும் அணுகுமுறையை வளர்த்துக்கொள்ள வழிவகுப்பதே கமாண்டர்ஸ் இண்டெண்ட்.

சென்று சேர வேண்டிய இடம் நேரம் தெரிந்தபின் அங்கு, அந்த நேரத்திற்கு செல்லத் தேவையான திட்டத்தை மேம்படுத்திக் கொண்டு சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தை அடைய தேவையான பொறுப்பை டிரைவரிடம் விட்டுவிடுவதே சிறந்த அணுகுமுறை என்ற உண்மையை உணர்த்தும் கோட்பாடு இது.

தீட்டப்படும் ஆணையில் விலாவரியான திட்டங்களை குறிப்பிடாமல் போர் திட்டங்களின் இலக்கை மட்டும் குறிப்பிட்டு, புரியவேண்டிய நடவடிக்கையின் இறுதி நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதன் சுருக்கமான விளக்கம் தான் கமாண்டர்ஸ் இண்டெண்ட். ராணுவ தலைமையகத்தில் அமர்ந்து விலாவாரியாய் திட்டங்கள் தீட்டி போரிடப் போகும் ஒவ்வொரு வீரரின் செயல்பாட்டையும் விளக்கி போரில் அவை பத்து காசுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய் என்ன செய்வது என்று வீரர்களை தவிக்க விட்டு போரில் தாக்க வரும் எதிராளியிடம் ‘யோய் நில்லுய்யா, என் மேலதிகாரிகள் விளக்கினா மாதிரி சண்டை போடறதா இருந்தா போடு, இல்ல நான் வரல இந்த விளையாட்டுக்கு’ என்று திரும்பி வரும் வழியை சொல்வதல்ல!

பாகிஸ்தான் மீது `சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ செய்ய முடிவெடுத்த நம் அரசின் திட்டம் கூட இப்படித்தான் நிறைவேறியிருக்கும். பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவத் தளபதியும் டெல்லியில் அமர்ந்து போரிடவேண்டிய டீமை செலக்ட் செய்து, எங்கு தாக்கவேண்டும், அங்கு செல்லவேண்டிய விமான ஓட்டி எப்படி ஓட்டவேண்டும், ஒவ்வொரு வீரரும் எப்படி முன்னேறி எப்படி தாக்கவேண்டும், தாக்கிவிட்டு எப்படி திரும்பவேண்டும் என்றா விலாவரியாக திட்டம் தீட்டியிருப்பார்கள்? இல்லை!

`பணியை விரைந்து முடியுங்கள், நம் வீரர்களுக்கு எந்த சேதமும் நேராமல் பார்த்து கொள்ளுங்கள். எல்ஓசியை தாண்டி சென்று எதிரியை தாக்கும் அதிகாரம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் குள்ளநரிகளுக்கு உறைக்கும்படி பாடம் புகட்டி வாருங்கள்’ என்று மட்டும் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் கூறியிருப்பார்கள். ராணுவத் தளபதி அதை உபதளபதிகளுக்கு திட்டமாய் விளக்க அவர்கள் எல்லையிலிருக்கும் மேஜர்களும் காப்டன்களும் விளக்க அவர்கள் அதற்கேற்ப உபதிட்டங்கள் வகுத்துத் தர அதை போர் வீரர்கள் போர்களத்தின் தன்மைகளுக்கும் கட்டாயங்களுக்கும் ஏற்ப திறம்பட பிரயோகித்து நம் தேசத்தை தாக்க காத்திருந்த தரித்திரம் பிடித்த தீவிரவாதிகளுக்கு திவசம் செய்து எள்ளும் தண்ணீரும் தெளித்து வெற்றியுடன் திரும்பினர்!

`திட்டமிட்ட முறையை வேண்டுமானால் ஒருவர் தொலைக்கலாம். ஆனால் திட்ட நோக்கத்தை செயல்படுத்தும் பொறுப்பை ஒரு போதும் இழக்கக்கூடாது’ என்றார் கால்டிட்ஸ்.

இந்தியப் படை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிலிருந்து பாகிஸ்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கும். நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது கமாண்டர்ஸ் இண்டெண்ட் என்கிற நவீன கோட்பாட்டின் தாத்பரியத்தை!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

34 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்